Friday, November 25, 2011

ஐயா ஐ.நா ஐயாவே...

நீதியற்ற எலும்புகளால்
கோர்த்துக் கட்டிய
வானுயர்ந்த கட்டிடமொன்று
சுவிஸ் ஜெனீவாவில்.

அசையும் கொடியில்
வதைக்கப்பட்ட உயிர்கள்.
ஈழத்துயிர்களை
விதைத்த மேடைமேலொரு
வெ(ட்)டிப்பேச்சுக்கள்
பேசுங்கள்...பேசுங்கள்
பூச்சாண்டி காட்டுங்கள்
ஆவிகள் துரத்திக்
கண் குத்தும் ஒருநாள்.

பதவிப் பயங்கரவாதம்
சிங்களத்தைப் பொத்திக் காக்கின்றீர்
பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்
பத்தாயிரம் முறை கொட்டும் பனியிலும்
கொளுத்தும் வெயிலும் வாசல் நின்று
உயிர்ப்பலியும் தந்தோம்
அன்றொருநாள்.


கருக்கொள்கிறது காலம்
வயிறு பெருக்க பிரசவித்தே ஆவீர்
உண்மைக் குழந்தையை.
உன்னதக் கோட்பாடாம்
உலக சமாதானமாம்
பருந்துகளையும் காத்து
உம்மையும் காக்கும் தீக்கோழியாய்
கோட்டும் சூட்டும் போடும்
வேடுவர் கூட்டத்தோடு
நீரும் எனக்கெப்போதும்
அம்மணமாய்த்தான்.


எம் அழிவை உறுதிப்படுத்த
கள்வனிடமே சாவி கொடுத்தீர்
சுதந்திரமும் அதன் சோகமும்
சொந்தமாய் அனுபவம் உமக்கேதுமில்லை.
தேசமும் மக்களும் அழிவும் அடங்குதலும்
உரிமையும் தேவையும் எங்களுக்கே.

எத்தனை தியாகங்கள்
எத்தனை இழப்புக்கள்
அந்தத் திடல்களில் வளர்ப்போம்
இன்னும் எம் சுதந்திரத் தீயை.
பாதைகளும் பயணங்களும்
மாறுகிறதே தவிர

மறந்து சோரவில்லை
அவன் வழியே எங்கள் எண்ணங்கள்.

வருவீர்....வருவீர்
சந்திக்கவும் சமநிலையென்றும்
சமாதானமென்றும்.
பாடங்கள் சொல்லி
வகுப்பெடுப்போம் அப்போ உமக்கு
சுதந்திரம் பற்றிய
எம் சொந்த அனுபவங்களை!!!

ஹேமா(சுவிஸ்)

ஈழத்திற்காய் உயிர் தந்த அத்தனை உயிர்களுக்கும் என் தலை சாய்த்த நன்றியும் வணக்கமும் !

28 comments:

  1. >>கருக்கொள்கிறது காலம்
    வயிறு பெருக்க பிரசவித்தே ஆவீர்
    உண்மைக் குழந்தையை
    உன்னதக் கோட்பாடாம்
    உலக சமாதானமாம்
    பருந்துகளையும் காத்து
    உம்மையும் காக்கும் தீக்கோழியாய்
    கோட்டும் சூட்டும் போடும்
    வேடுவர் கூட்டத்தோடு
    நீரும் எனக்கெப்போதும்
    அம்மணமாய்த்தான்.\
    \

    அழகிய சொல்லாடல்.. இதில் கடைசி வார்த்தையை நிர்வாணம் என மாற்றலாமே?

    ReplyDelete
  2. >>எம் அழிவை உறுதிப்படுத்த
    கள்வனிடமே சாவி கொடுத்தீர்
    சுதந்திரமும் அதன் சோகமும்
    சொந்தமாய் அனுபவம் உமக்கேதுமில்லை

    சபாஷ்!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. ஹேமா,

    முருக்கேற்றும் சொற்கள்.

    ஐயாக்கள்,
    வருவார்கள்... நிச்சயம் வருவார்கள்!
    அப்போது போதிப்போம்!

    ( நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஹேமா-விற்கு முண்டாசு கட்டி, முருக்கு மீசை வரைந்து பார்க்க வேண்டும். இக்கவிதைக்காக மட்டும்.)

    ReplyDelete
  4. ஹேமா...

    வார்த்தைகள் வரவில்லை எழுத...
    என்னத்தைச் சொல்ல..

    கவிதையின் கரு மனதை வலித்தாலும்..
    வந்து விழும் வார்த்தைகளுக்காக உங்களுக்கு ஒரு ஜே

    ReplyDelete
  5. //சந்திக்கவும் சமநிலையென்றும்
    சமாதானமென்றும்
    பாடங்கள் சொல்லி
    வகுப்பெடுப்போம் அப்போ உமக்கு//


    நெத்தியடி...

    ReplyDelete
  6. ராதா கிருஷ்ணன் சொன்னதை தான் சொல்ல நினைக்கிறேன்

    //ஆவிகள் துரத்திக்
    கண் குத்தும் ஒருநாள்.//

    குத்துமா? கேள்வியோ ஐய்யப்பாடோ இல்லை குத்தும் செத்தொழியும் கள்வர் கூட்டம்..

    ReplyDelete
  7. // கருக்கொள்கிறது காலம்
    வயிறு பெருக்க பிரசவித்தே ஆவீர்
    உண்மைக் குழந்தையை
    உன்னதக் கோட்பாடாம்
    உலக சமாதானமாம்
    பருந்துகளையும் காத்து
    உம்மையும் காக்கும் தீக்கோழியாய்
    கோட்டும் சூட்டும் போடும்
    வேடுவர் கூட்டத்தோடு
    நீரும் எனக்கெப்போதும்
    அம்மணமாய்த்தான்.// மாட்டுக்கு ஒரு அடி மனுஷனுக்கு ஒரு சொல்...அவர்கள் எதில் வருகிறார்கள் என்பது தான் புரியவில்லை...

    ReplyDelete
  8. அருமை.. அசத்தல் கவிதை.

    ReplyDelete
  9. பாதைகளும் பயணங்களும் மாறுகிறதே
    தவிர சோரவில்லை//

    சோரவில்லை தான் சகோ! கங்காக கனத்துக்கொண்டிருப்பது ஒரு நாள் விடிவு காணும் அப்பொழுது என்ன சொல்வார்கள்...

    ReplyDelete
  10. நன்றாகக் கேட்டுள்ளீர்கள் ஹேமா.

    ReplyDelete
  11. அக்கா வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை ..
    புடைத்து நிற்கின்றன நரம்புகள் ..
    இப்படி யொரு சாடலை நான் இதுவரை கண்டதில்லை ..
    நல்லதொரு உணர்ச்சி பிழம்பு இக்கவிதை ..
    காத்திருப்போம் கயவர்களின் போலி வேடம் களையும் காலம் வெகு தூரத்தில் இல்லை ..

    ReplyDelete
  12. //சந்திக்கவும் சமநிலையென்றும்
    சமாதானமென்றும்
    பாடங்கள் சொல்லி
    வகுப்பெடுப்போம் அப்போ உமக்கு/

    சுருக்கென தைக்கும் வரிகளாய் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தன் வலுவைசொல்கிறது வலியோடு..

    ReplyDelete
  13. கண்ணகியின் சீற்றமும் சாபமும்
    அதே கனல் தெறிக்கும் உத்வேகத்தோடு
    தங்கள் படைப்புகளில்...அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. பதில் சொல்லாதவர்களிடம் கேள்வி அம்புகளைத் தொடுத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  15. ஈழத்திற்காய் உயிர் தந்த அத்தனை உயிர்களுக்கும் என் தலை சாய்த்த நன்றியும் வணக்கமும் !//

    என்னுடைய அஞ்சலிகளையும் செலுத்துகிறேன்...

    ReplyDelete
  16. //நீதியற்ற எலும்புகளால்
    கோர்த்துக் கட்டிய
    வானுயர்ந்த கட்டிடமொன்று
    சுவிஸ் ஜெனீவாவில்.
    //

    ஆரம்ப வரிகளே குத்துகிறது ..
    தங்கள் குறள்
    எட்ட வேண்டியவர்களின் செவிகளில் எட்டட்டும்

    ReplyDelete
  17. மனதின் உணர்ச்சிப் பிரவாகம் எழுத்தாக...கவிதையாக!

    ReplyDelete
  18. துயரத்திலும்,உணர்விலும் பங்காளனாக எனது அஞ்சலிகள்.

    ReplyDelete
  19. ha ha swiss passport edukekai swiss immigration(united nations) pati kelvi kekalayo endu theriuthu .
    geneva united nations pati theriyamal epidi swissla irukireengal

    ReplyDelete
  20. ( நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஹேமா-விற்கு முண்டாசு கட்டி, முருக்கு மீசை வரைந்து பார்க்க வேண்டும். இக்கவிதைக்காக மட்டும்.)

    உண்மையான வார்த்தைகளுக்கு சரியான அங்கீகாரம் இது.

    ReplyDelete
  21. ஹேமா நெடிய விடுமுறையின் பாதிப்பு கவிதையில் தெரிகிறது.

    ReplyDelete
  22. //கோட்டும் சூட்டும் போடும்
    வேடுவர் கூட்டத்தோடு
    நீரும் எனக்கெப்போதும்
    அம்மணமாய்த்தான்.//

    super

    //வகுப்பெடுப்போம் அப்போ உமக்கு
    சுதந்திரம் பற்றிய
    எம் சொந்த அனுபவங்களை!!!//
    இன்னமும் நம்பிக்கை இழக்காதவரிகள். இதுவே எமக்குத்தேவை.

    ReplyDelete
  23. அக்கா வார்த்தைகள் விதைக்க வயல் தேடும் நாளிது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கடவுள்களை தொலைத்து விட்டோம்

    ReplyDelete
  24. ஆதங்கம் ,மனதின் உணர்ச்சி கோபம் கலந்த வார்த்தைகளாய் ,பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  25. ///எம் அழிவை உறுதிப்படுத்த
    கள்வனிடமே சாவி கொடுத்தீர்////

    தங்கள் எழுத்துக்கள் தீப்பிழம்பாய் இருக்கிறது...
    ஒவ்வொரு வரியும் சாட்டையடியாக...

    ReplyDelete
  26. உலகெங்கும் இன்று நடப்பவைதான் உண்மையில் நேர்மை என்பது உறங்குகிற நேரம் என எண்ணுகிறேன் காரணம் உண்மையில் இந்த உலகத்தின் கண்களுக்கு விடுதலை வேட்கை எது சீரழிவு எது எனது புரியாமல் இல்லை இன்று ஈழத்தமிழருக்கு இந்நிலை உண்டாக்க காரணம் தலைவர் பதினெட்டு ஆண்டுகள் சிறப்பான ஊழலில்லாமல் சிறந்த அமைப்பை கட்டமைத்தமை இது உலக நாடுகளுக்கு அச்சத்தை தருகிறது எல்லா மக்களும் விழிப்பு அடைந்து விட்டால் அரசியலார் கொள்ளை அடிக்க இயலாது இல்லியா ?

    ReplyDelete
  27. வணக்கம் அக்கா,
    எம் கோபங்கள், கடந்த கால ஏமாற்றங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஐ நாவின் மூஞ்சியில் உமிழ்வதனைப் போல அனல் பறக்கும் வரிகளைத் தாங்கி வந்திருக்கிறது இக் கவிதை!

    ReplyDelete