Tuesday, November 22, 2011

சுகராகம்...

இதைத்தானே கேட்டுக்கொண்டாய்
பிடித்துக்கொள்
காதலும் நீ...கனலும் நீ...
தோழனாய்க்கூட கைநீட்டக்கூடாத
கல்லுளிமங்கனே....
மறந்திருக்கிறேன் உன்னை
சொற்படி நடக்கிறேனா
என்றாலும்
வெட்டிய வாழையில்
வெடிக்கும் குருத்தாய்
உன் நினைவுகள்.

கருத்த கனவுகளுக்குள்
நினைவுகளைக் கரைக்க
காயங்களுக்கு மருந்து தந்து
விடியலைத் தள்ளி
வெளிச்சமாகிறது நிலவு.

உன் வருகை விளக்கிலேயே
உறங்கிவிடுகிறேன்
என்னோடு நீயும்தான்
இளைப்பாறுகிறாய்
விழிகளும் இதயங்களும்
ஓய்ந்துவிட்டன
காத்திருப்புச் சந்திகளில்.

தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்
இருமுனையில் ஒருமுனை
உன்னிடம் என்றறியாமல்.

போருக்குப் போக
ஆயுதமும் உடையும் தந்தபின்
வாளின் கூர்மைபற்றியும்
ஆடையின் அலங்கரிப்பு பற்றியும்
பேசிக்கொண்டு நீ
இடிபாடுகளுக்கிடையில்
எதிரியைக் காணும் ஆவலில் நான்.

நினைவுகளையும் கனவுகளையும்
காலத்தால் சலித்தெடுக்க
மிஞ்சுவதெல்லாம்
அவசியமில்லா
சப்பைக் கற்களும் குப்பைகளுமே
காதலும் கூட.

உன்னைக் காணாத நாட்களெல்லாம்
சூரியனுக்கு விடுமுறை
பூமிக்கு அமாவாசை
பனிக்குளிருக்குள்
ஒற்றை உயிரையும் தொலைத்து
யுகம் துழாவும் நான்
கனவை வரவழைக்க
வெப்பக் கருவியின் துணையோடு.

எத்தனை பொழுதுகள் விடிந்தன
நீ.....
இல்லையென்ற பூபாளத்தோடு

அதே பொழுதுகள் பழக்கித்தரும்
நீ......
இல்லையென்ற முகாரியையும்!!!

ஹேமா(சுவிஸ்)

41 comments:

  1. //வெட்டிய வாழையில்
    வெடிக்கும் குருத்தாய்
    உன் நினைவுகள்.//

    super

    ReplyDelete
  2. தன் கூட்டின்
    நுனி தேடும் சிலந்தியென
    ஊர்ந்துகொண்டே
    சிக்கிக்கொள்கிறேன்
    இருமுனையில் ஒருமுனை
    உன்னிடம் என்றறியாமல்.


    மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்..


    அருமை..

    ReplyDelete
  3. படிக்க படிக்க கவிதை என்னை இழுத்து பிடித்து வைத்து கொண்டது ஹேமா !!

    எந்த வரினு சொல்ல முடியல...!! எல்லாமே பெஸ்ட் !

    ReplyDelete
  4. காதலுக்குள் அமிழ்த்தும் காந்த வரிகள்.

    காதல், தனிமை,ஏக்கம்,தவிப்பென... கதம்பமாக ....

    அருமை.

    ReplyDelete
  5. வெட்டிய வாழையில்
    வெடிக்கும் குருத்தாய்
    உன் நினைவுகள்.//

    பனிக்குளிருக்குள்
    ஒற்றை உயிரையும் தொலைத்து
    யுகம் துழாவும் நான்
    கனவை வரவழைக்க
    வெப்பக் கருவியின் துணையோடு.//

    தன் கூட்டின்
    நுனி தேடும் சிலந்தியென
    ஊர்ந்துகொண்டே
    சிக்கிக்கொள்கிறேன்
    இருமுனையில் ஒருமுனை
    உன்னிடம் என்றறியாமல்.//

    என்னைக் கவர்ந்த வரிகள்...

    தற்காலம்...வாழ்வியல்...மாற்று சிந்தனை...கவி நோக்கு...எல்லாம் ஒரே கவிதையில்...

    ReplyDelete
  6. அருமை அருமை அருமை........

    இதைவிட வேறு என்ன சொல்ல ???

    இதமாய் செல்கிறது முழு கவிதையும்.

    ReplyDelete
  7. நன்றாக உள்ளது. "இருமுனையில் ஒருமுனை" மனதில் நிற்கிறது.

    ReplyDelete
  8. //தன் கூட்டின்
    நுனி தேடும் சிலந்தியென
    ஊர்ந்துகொண்டே
    சிக்கிக்கொள்கிறேன்
    இருமுனையில் ஒருமுனை
    உன்னிடம் என்றறியாமல்.//

    மீண்டும் மீண்டும் ரசித்து படித்தேன் .அருமையான வரிகள் .தேர்ந்தெடுத்த படமும் அழகு ,வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  9. அருமை. ஒவ்வொரு பாராவும் தனித் தனியாய்க் கூட நன்றாக இருக்கிறது. காலத்தால் சலித்தேடுத்தபின் மிங்கும் காதல் கூடக் குப்பையாகத் தெரிய அவரவர் அனுபவங்கள்தான் காரணமோ...! சிலந்தி வலையின் ஒருமுனை...அருமை.

    ReplyDelete
  10. தன் கூட்டின்
    நுனி தேடும் சிலந்தியென
    ஊர்ந்துகொண்டே
    சிக்கிக்கொள்கிறேன்
    //''\\\ஆ அருமை ஹேமா . பெண் இயல்பை அழகா சொல்லிட்டீங்க கவிதை மனசை அள்ளுகிறது

    ReplyDelete
  11. காதல், தனிமை,ஏக்கம்,தவிப்பென... கதம்பமாக ....\\\\

    ஹேமா,,,கடையில் வாங்கினால் பணம் செலவாகும்..அதனால் எழுத்தில் கதம்பமே கட்டிக் கொடுத்துவிட்டார்

    ReplyDelete
  12. அழகான வார்த்தைகள் - அருமையான கவிதையாக மனதை நிறைத்தது.

    ReplyDelete
  13. தோழனாய்க்கூட கைநீட்டக்கூடாத
    கல்லுளிமங்கனே....
    மறந்திருக்கிறேன் உன்னை
    சொற்படி நடக்கிறேனா\\\
    ஜயோபாவம்!இப்படியெல்லாம்...மிரட்டல் நடந்ததா?
    எனக்குத் தெரியாமப் போச்சே?

    ReplyDelete
  14. விழிகளும் இதயங்களும்
    ஓய்ந்துவிட்டன
    காத்திருப்புச் சந்திகளில்\\\

    சந்திகளில் சந்திக்கவே இல்லையா?
    சந்தித்தும்...உங்கைச் சிந்திக்கவே இல்லையா?..சிந்தித்தும் சந்திப்பு வரவே இல்லையா....?அப்படியென்றால் நீங்கள சூட்டிய பெயர்{கல்லுளிமங்கன்}சரிதான்!

    ReplyDelete
  15. உன்னைக் காணாத நாட்களெல்லாம்
    சூரியனுக்கு விடுமுறை\\\\

    சூரியனுக்கே...........விடுமுறையா?
    "சுடப்போகுது" கவனம்!

    ReplyDelete
  16. ஹேமா,ஏற்றபடத்துடன்....
    எழுதிய கவிதை
    யாரோ சுட்டதால்...
    "பட்டு"
    வந்த வலியின்...வேதனை
    எழுத்துகளில் தெரிகிறது

    மிக அருமையான எண்ணாடல்...
    ஹேமா!

    ReplyDelete
  17. //எத்தனை பொழுதுகள் விடிந்தன
    நீ.....
    இல்லையென்ற பூபாளத்தோடு

    அதே பொழுதுகள் பழக்கித்தரும்
    நீ......
    இல்லையென்ற முகாரியையும்!!//

    உங்க தளத்துக்கு வந்ததும் திரும்ப மனசே வரவில்லை.அத்தனையும் அருமை அக்கா.

    ReplyDelete
  18. // வெட்டிய வாழையில்
    வெடிக்கும் குருத்தாய்
    உன் நினைவுகள்.//

    உவமை அருமை சகோதரி!
    இதுவரை யாரும் சொல்லாத உவமை!
    கவி முழுவதும் கவித்துவம்
    கொடி கட்டிப் பறக்கிறது!
    த ம ஓ 7
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. ஹேமா, ஹேமா தான்...... அசந்திட்டன் ஹேமா!!! :)

    என்ன சொல்லவென்று தெரியவில்லை. அதனால், பஸ்ஸில், + இல் பகிர்ந்தேன். :)

    ReplyDelete
  20. தன் கூட்டின்
    நுனி தேடும் சிலந்தியென
    ஊர்ந்துகொண்டே
    சிக்கிக்கொள்கிறேன்//
    நல்லா இருக்கு ஹேமா :)

    ReplyDelete
  21. எத்தனை பொழுதுகள் விடிந்தன
    நீ.....
    இல்லையென்ற பூபாளத்தோடு

    அதே பொழுதுகள் பழக்கித்தரும்
    நீ......
    இல்லையென்ற முகாரியையும்!!!
    >>>
    வாழ்வின் யதார்த்ததை சொல்லும் வரிகள். ரசித்தேன்

    ReplyDelete
  22. ஹேமாவின் கவி வரிகளுக்கு நான் அடிமை. ஒவ்வொரு கவிதையிலும் சொற்களும் பொருளும் பின்னிப்பிணைந்து ஆனந்தமான உணர்வுகளைத்தரும்.

    ReplyDelete
  23. சிந்தனைத் திறனும் சொல்லாட்சியும்
    பிரமிப்பூட்டுகன்ிறன
    ஒவ்வொரு உவமையும் ஒவ்வொரு வரியும்
    மலைக்கவைத்துப் போகையில்
    எதைக் குறிப்பிட்டு பின்னூட்டமிடுவது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 11

    ReplyDelete
  24. சுயபச்சாதாபம் பீரிடும் வரிகள் மனதைப் பிசைந்தாலும் அந்த வரிகளில் வெளிப்படும் உவமை நயங்களும் ஊடாடிய சொல்லாடல்களும் ரசிக்கவைக்கின்றன, ஹேமா.

    ReplyDelete
  25. //உன்னைக் காணாத நாட்களெல்லாம்
    சூரியனுக்கு விடுமுறை
    பூமிக்கு அமாவாசை
    பனிக்குளிருக்குள்
    ஒற்றை உயிரையும் தொலைத்து
    யுகம் துழாவும் நான்//

    ரசித்த வரிகள். அழகான கவிதை ஹேமா. நினைவுகள் வருத்தினாலும் அத்தவிப்பிலும் சுகம் உண்டு எனும் விதமான தலைப்பும் அருமை.

    ReplyDelete
  26. >>>தன் கூட்டின்
    நுனி தேடும் சிலந்தியென
    ஊர்ந்துகொண்டே
    சிக்கிக்கொள்கிறேன்
    இருமுனையில் ஒருமுனை
    உன்னிடம் என்றறியாமல்.

    குட் ஒன் ஹேமா

    ReplyDelete
  27. வார்த்தைகள் ஊற்றாக பெருக்கெடுத்த வேகத்தில் சிக்கியது மென்மையான அழகிய கவிதை அக்கா ...
    சில இடங்களில் மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன் ...

    ReplyDelete
  28. //நினைவுகளையும் கனவுகளையும்
    காலத்தால் சலித்தெடுக்க
    மிஞ்சுவதெல்லாம்
    அவசியமில்லா
    சப்பைக் கற்களும் குப்பைகளுமே
    காதலும் கூட//
    என்னை மிகவும் கவர்ந்த வரிகள்!
    காதலும் கூடவா?

    ReplyDelete
  29. உணர்வுகள் நிறைந்த கவிதை சகோ .படித்தேன் ரசித்தேன் ,ரசித்துப் படித்தேன்

    ReplyDelete
  30. //கருத்த கனவுகளுக்குள்
    நினைவுகளைக் கரைக்க
    காயங்களுக்கு மருந்து தந்து
    விடியலைத் தள்ளி
    வெளிச்சமாகிறது நிலவு.//

    அருமை ஹேமா,வார்த்தை விளையாடல் உங்களுக்கு கை வந்த கலை..

    ReplyDelete
  31. எத்தனை உணர்வுகளை சொல்கிறது ஹேமா இக்கவிதை...காதல் மொத்தமும் சொல்லும் இவ்வரிகளை தென்றலாய் உணரவும் முடிகிறது தனலாய் சுடவும் செய்கிறது..எனக்குன்னு எழுதியது போலவும்..எடுத்து செல்கிறேன் அத்தனை வரிகளையும் என் உணர்வுகளும் பருகட்டும் சில நேரம்..

    ReplyDelete
  32. அந்த‌ ஒற்றைப் ப‌ற‌வையின் ஏக்க‌க் கூவ‌ல் ... ம‌ன‌தைப் பிசைகிற‌து ஹேமா. நான் ர‌சித்து ர‌சித்து உள்வாங்கிய‌ வ‌ரிக‌ளையே ந‌ண்ப‌ர்க‌ளும் சிலாகித்திருப்ப‌தும் விய‌ப்பு.

    ReplyDelete
  33. ஹேமா உண்மையே சுகராகம் தான்..ம்ம்ம்...

    ReplyDelete
  34. பாவம்.. குழந்தைய புலம்ப விட்டாங்களே... பரவாயில்லை... நல்லா ஆரம்பிச்சு..கடைசி மூனு பேரா புலம்பலாயிடுச்சு...

    அதனால் என்ன?.. காதல்ல எல்லாமே அழகு தானுங்களே :)

    ReplyDelete
  35. வணக்கம் சகோதரி..

    உங்கள் கவிதையின் பின்னூட்டங்களையும் படித்தால்தான் என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது... ஹி ஹி

    //வெட்டிய வாழையில்
    வெடிக்கும் குருத்தாய்
    உன் நினைவுகள்.//

    அருமையான உதாரணம்..!!

    ReplyDelete
  36. கலங்கலான கண்ணீரோடு கலக்கலான வரிகள்...

    ReplyDelete
  37. கவிமணியிடம் கேட்டேன்கவிதை என்பதென்ன ""உள்ளத்துள்ளது கவிதை நெஞ்சில் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில்"". என தொடருகிறார் . வள்ளுவரை காதல் என்பதென்ன என வினவ அட மடையா இது புரிய வில்லையா எழுதியுள்ளேன் படி ""கண்ணினை கண் நோக்கொக்க .."". என தொடர்கிறார் சிறந்த மயக்கும் பாடலான நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என கண்ணதாசன் ஒருபக்கம் வைரமுத்துவிடம் கேட்க உன்விழி உதயம் எனக்கு விடிவு தந்ததென வாய்பிலக்கிறார் அட காதல் என்பது இதனை செய்திகளை உள்ளடக்கியுல்லதா என வியந்த வேளை இங்குவர காதல்சாறு கொட்டி கிடைக்கிறது சிறப்பான வரிகள் வாழட்டும் காதல் உள்ளமெல்லாம் உலகமெல்லாம் பன்முகத்துடன் .....

    ReplyDelete
  38. பூபாளங்களும், முகாரிகளும் மெளனமாக கதறுகின்றன ...

    ReplyDelete
  39. ஒரு சிறந்த ஆக்கத்தை காண்கிறேன் உளம் பூரிக்கிறேன் சில ஆக்கங்கள் மற்றவர்களுக்காக எழுதபடுவது சில ஆக்கங்கள் தனக்காக எழுதப் படுவது இந்த ஆக்கம் எல்லோருக்கும் இது காதல் தேசத்தின் தூது பாராட்டுகள் ...

    ReplyDelete
  40. //உன்னைக் காணாத நாட்களெல்லாம்
    சூரியனுக்கு விடுமுறை
    பூமிக்கு அமாவாசை
    பனிக்குளிருக்குள்
    ஒற்றை உயிரையும் தொலைத்து
    யுகம் துழாவும் நான்
    கனவை வரவழைக்க
    வெப்பக் கருவியின் துணையோடு//
    pirivin thuyar sollum varigal
    arumai

    ReplyDelete
  41. மனதை ஊஞ்சலாட்டிவைத்த
    இனிய சுகராகம்...

    ReplyDelete