Friday, June 10, 2011

போதனை...

அவைகளுக்கு அது பெரும்பணி
நுனித் தலையில் சும்மாடு
எதையோ தேடியபடி
வரிசை கலையாமல் லாவகமாய்
ஒன்றையொன்று இடிபடாமல்
ஒற்றுமையாய் இடம்விட்டு
தேவைகளை நிரப்ப
உயர உயர
உச்சியொன்றைப் பிடிப்பதற்காக
ஊர்ந்துகொண்டிருக்கிறன அவைகள்.

ஒன்று கொஞ்சம்
திரும்பிப் பார்த்தாலே போதும்
விழவும்
வரிசை சீர்கலையவும்.

காத்திருக்கிறேன் பிரமிப்புடன்
என் வாசிப்பை ஒத்திவைத்தபடி.
அடையாளத்திற்காக
கவிழ்த்து வைத்த புத்தகச் சரிவில்தான்
அவர்களின் பயணம்.

இது இடப்பெயர்வா
இல்லை
தமக்கான ஏதோ ஒன்றின்
தேடுதலுக்கான ஒன்றிணைவா.

ஓசையே இல்லாமல்
ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!


ஹேமா(சுவிஸ்)

51 comments:

  1. ஆறறிவைத்தவிரை...

    உலகில் இருக்கும் அந்தனை அறிவு ஜீவிகளும் நமக்கு பாடம்தான்...

    ReplyDelete
  2. காட்சி கவிதை...
    இப்போது என்னில் ஊர்கிறது அவைகள்...

    ReplyDelete
  3. . நம்மிடம் இல்லாத பல நல்ல உணர்வுகள் எறும்புகளிடம் ஏனைய உயிர்களிடம் இருப்பது உண்மை

    ReplyDelete
  4. நீங்க எழுதினதா இது ஹேமா?

    சபாஷ்.

    புத்தம் புது பாடுபொருள்.
    புத்தம் புது மொழி.

    மிகவும் எளிமையாக. மிகவும் நேர்த்தியாக.

    இப்படியும் எழுதுங்கள்.பிடித்திருக்கிறது இந்த விதம்.

    ReplyDelete
  5. இக்கவிதையினை பாராட்ட என்னிடம் வார்த்தை இல்லை ஹேமா! அவ்வளவு ஆழமான பொருள் கொண்ட அழகிய கவிதை!

    எறும்புகள் மனிதர்களாகிய எமக்கு கற்றுத்தரும் பாடம் என்று பொதுவாக சொல்லப்படுவது ஒற்றுமையே ஆகும்!

    ஆனால் நீங்கள் அதையெல்லாம் தாண்டி ஒரு அழகிய மற்றும் அவசியமான கருத்தொன்றை சொல்லி இருக்கிறீர்கள்!

    நாம் உழைப்பதற்காக வெளிநாடு வந்திருந்தாலும், ஏதோ ஒரு உயரத்துக்குப் போகவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது! அதையே

    ** ஒற்றுமையாய் இடம்விட்டு
    தேவைகளை நிரப்ப
    உயர உயர
    உச்சியொன்றைப் பிடிப்பதற்காக
    ஊர்ந்துகொண்டிருக்கிறன அவைகள்.**

    என்ற வரிகள் உணர்த்துகின்றன!

    மேலும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நாடுகளின் சட்டதிட்டங்கள் மிகவும் இறுக்கமானவை! அவற்றை கவனமாக நாம் பின்பற்றாவிட்டால், ஆபத்துக்கள் எமக்கு வர வாய்ப்புக்கள் உள்ளன! இதையே

    ** ஒன்று கொஞ்சம்
    திரும்பிப் பார்த்தாலே போதும்
    விழவும்
    வரிசை சீர்கலையவும்.**

    என்ற வரிகள் சுட்டி நிற்கின்றன! நாம் எமது விடியலுக்காக எதைச் செய்தாலும், அவதானத்தோடு இந்த இந்த நாடுகளின் அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் செய்யவேண்டும் என்பதை மேற்சொன்ன வரிகள் உணர்த்துகின்றன!

    **காத்திருக்கிறேன் பிரமிப்புடன்
    என் வாசிப்பை ஒத்திவைத்தபடி.
    அடையாளத்திற்காக
    கவிழ்த்து வைத்த புத்தகச் சரிவில்தான்
    அவர்களின் பயணம்.**

    எறும்புகள் பொதுவாக கட்டாந்தரையிலும், காடு மேடுகளிலும் தான் பயணிக்கும்! அங்குதான் அவற்றின் வாழ்க்கை! ஆனால் ஒரு புத்தக மடிப்பில் அவை ஊருகின்றன என்று காட்டுவது, காடுகளிலும் , மேடுகளிலும் நடை பெற்ற எமது போராட்டம் இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ஆடம்பர நகரங்களில், அதி உயர் சபைகளில் நடை பெறுவதை காட்டுகிறது!

    எமது உணர்வுகளையும், அமைதியான , நியாயமான போராட்டத்தை சர்வதேசம் ஒரு வகை உன்னிப்புடன் பார்த்துக்கொண்டிருப்பதை

    **காத்திருக்கிறேன் பிரமிப்புடன்
    என் வாசிப்பை ஒத்திவைத்தபடி.**

    என்ற வரிகள் புலப்படுத்துகின்றன!

    ** இது இடப்பெயர்வா
    இல்லை
    தமக்கான ஏதோ ஒன்றின்
    தேடுதலுக்கான ஒன்றிணைவா.**

    கணிசமான தமிழர்கள் இடம்பெயர்ந்து வந்து, புலம்பெயர்தமிழர்கள் என்ற ஒரு குடைக்குள் இணைந்துள்ளார்கள்! இது நிச்சயமாக தேடலுக்கான ஒன்றிணைவுதான்!

    எம்மை சர்வதேசம் மெளனமாக அங்கீகாரத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை, நாம் கவனமாக செயல்படவேண்டிய கட்டாயத்தை மிக அருமையாக, அழகிய உருவகத்துடன் வடித்திருக்கிறீர்கள்!

    சமீபகாலத்தில் நான் படித்த அழகிய கவிதை இது!

    ReplyDelete
  6. கடைசியும் கடைசிக்கு முதல் பந்தியும் என்னை என்னமோ செய்தது.
    அற்புதமான எண்ணக்கருவும் கவிதையும். ரசனை. எறும்பாகிறேன்.

    ReplyDelete
  7. ஒன்று கொஞ்சம்
    திரும்பிப் பார்த்தாலே போதும்
    விழவும்
    வரிசை சீர்கலையவும்\\\\\\

    ஹேமா சின்னஞ்சிறுசிதான் ஆனால்
    மூளையும்,ஒழுங்கும்,நன்நடத்தையும்
    மிகப்பிரமாதம் ஆதலால்...திரும்பிப்பார்ப்பதோ!
    விழுவதோ நடக்கமுடியாத காரியம் எதிர்பார்தாலும்
    ஏமாற்றம்தான் பார்ப்பவர்களுக்கு.{பயப்படாத விழாது}

    என்னடியம்மா....போதனை ரொம்பதான் போலும்.........

    ReplyDelete
  8. இது இடப்பெயர்வா
    இல்லை
    தமக்கான ஏதோ ஒன்றின்
    தேடுதலுக்கான ஒன்றிணைவா\\\\\

    இதை “அதனிடம்தான்” கேட்கவேண்டும்

    ம்ம்ம்ம....நான் கேட்டுச் சொல்லட்டுமா?

    ஏனென்றால்..நான் மிகவும் நேசிக்கும்
    பலவற்றில் இவையும் .....

    போதனை கொடுத்த எறும்பால்...
    மறைந்திருந்து கடிக்கிறது கவி

    நன்றிடாஹேம்ஸ்......

    ReplyDelete
  9. ///ஓசையே இல்லாமல்
    ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
    ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!// ஐந்தறிவுடம் ஆறறிவு கற்க வேண்டிய பல இருக்கு ..

    ReplyDelete
  10. ஓட்டவடை விளக்கம் அருமை...

    ReplyDelete
  11. மிக அருமை ஹேமா.

    //அடையாளத்திற்காக
    கவிழ்த்து வைத்த புத்தகச் சரிவில்தான்
    அவர்களின் பயணம்.// ஆஹா.

    ஆறாம் அறிவாலேயே பல விடயங்களில் தலைகுனிந்து கிடக்கிறது மனித இனம்.

    ReplyDelete
  12. அருமை என்று ஒற்றை வார்த்தையில் பின்னூட்டம் இட முடியாது இந்த கவிதைக்கு .//ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
    ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!//இந்த ஒற்றை வரி சொல்லும் சேதி அப்பப்பா
    //உயர உயர
    உச்சியொன்றைப் பிடிப்பதற்காக
    ஊர்ந்துகொண்டிருக்கிறன அவைகள்.//
    உங்களால் தான் நான் கவிதையை ரசிக்க கற்று கொண்டேன் .கவிதை அற்புதம் !!!!

    ReplyDelete
  13. காத்திருக்கிறேன் பிரமிப்புடன்
    என் வாசிப்பை ஒத்திவைத்தபடி.
    அடையாளத்திற்காக
    கவிழ்த்து வைத்த புத்தகச் சரிவில்தான்
    அவர்களின் பயணம்.// அருமையான வார்த்தை பிரயோகம்.

    ReplyDelete
  14. ஹேமா, வந்தேன், படித்தேன், வியந்தேன்.

    ReplyDelete
  15. உங்க வலைப்பூவில் நான் படித்ததிலேயே மிகச் சிறந்த கவிதை. மிகவும் சிறப்பு.

    ReplyDelete
  16. படமும்,கவிதையும் இணைந்து உவமையை இப்பொழுது புரிய வைக்கிறதென்றோ மெல்ல புரிந்து கொள்கிறேனென்றும் கூட சொல்லலாம்.

    ReplyDelete
  17. //ஓசையே இல்லாமல்
    ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
    ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!//

    ஹேமா,

    அவைகள் நமக்கு சொல்லிச் செல்வது ”ஒன்றை மட்டும்தானா?” இன்னும்
    கற்க வேண்டியது ஏராளம் இருக்கிறது.

    சிந்தனைக் விதை.

    ReplyDelete
  18. //ஊர்ந்துகொண்டிருக்கிறன”அவைகள்.”
    ................
    ................

    ”அவர்களின்” பயணம்.//

    ”அவைகள்”, ”அவர்கள்” எதோ சின்ன குறைபோல் தெரியுதுங்க ஹேமா.

    ReplyDelete
  19. nalla irukku hema. romba busy athaan intha vara mudiyala

    ReplyDelete
  20. //ஓசையே இல்லாமல்
    ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
    ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!//

    aintharivugalidam nam padika vendiya paadamgalum neraiya iruku..bodhanai poruloduuuuuuuuuuu...

    ReplyDelete
  21. உன்னிப்பான அவதானிப்பில் உதித்த சிந்தனை
    கண்டிப்பாக நல்ல கருத்து
    கவிதையில் சிந்தனை சிறப்பு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ஹேமா..அவைகளிடமிருந்து கற்றுக்கொள்ள ஆயிரம்தான் உள்ளது. உங்கள் மொழியில் அது இன்னும் ஒரு படிமேலாய்....

    ReplyDelete
  23. ஹிஹி ஓட்டவடை பிச்சிட்டீங்க போங்க...
    ஆமா உப்புமட சந்தியில் நீங்க மட்டும் தான் போடுறீங்க போல??

    ReplyDelete
  24. //ஓசையே இல்லாமல்
    ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
    ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!
    //

    மிக அருமையான வரிகள்

    நமக்குத்தான் நிறைய புரிவதில்லை

    ReplyDelete
  25. ஃஃஓசையே இல்லாமல்
    ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
    ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!ஃஃ

    அருமையான ஆழமான அனைவரும் தெரிய வேண்டிய மெசேஜ் வரிகளுக்குள். பாரட்டுக்கள்

    ReplyDelete
  26. ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கி செல்கின்றன வரிகள் தோழி .... நண்பர் ஓ.வா.நாராயணன் கருத்து காட்சிகளில் ஊர்ந்து செல்கிறது ... நிச்சயம் தேடுதலுக்கான ஒன்றிணைவே ....

    ReplyDelete
  27. நானும் எறும்பு வரிசையைப் பார்த்திருக்கிறேன். நடுவில் விரல் வைத்து தேய்த்து தொந்திரவும் செய்து வரிசையை குலைத்திருக்கிறேன். கவிதை எழுதத் தோன்றவில்லையே ஏன்?

    //"ஓசையே இல்லாமல்
    ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
    ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!"//

    என்னவாக இருக்கும்..?!!!

    நல்ல கவிதை ஹேமா...

    ReplyDelete
  28. ம் ... நல்ல சொல்லாடல் குறிப்பாக சில சேதிகள் அதாவது பொறுமை எறும்புகளின் விடாமுயற்சி சப்பானியர்கள் மாதிரியான எக்காலத்திலும் கலங்காமை உளம் கனிந்த பாரட்டுகள்.....

    ReplyDelete
  29. நலந்தானே ஹேமா.....

    இந்த கவிதை மிக நேர்த்தியாக உள்ளது....
    பாரிய சிந்தனையை ஒளித்து வைத்து கவிதை பின்னிய விதம் வியப்பு.....

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  30. அருமை ஹேமா. ஐந்தறிவிடம் கற்க மனிதர்களுக்கு எவ்வளவோ இருக்கின்றன.

    ReplyDelete
  31. ஆறறிவு மனிதர்கள் நிறையவே திருந்தவேண்டியிருக்கு நல்ல வரிகள்

    ReplyDelete
  32. ஹேமாவின் சிறந்த படைப்புகளில் இந்த கவிதையும் ஒன்று..அழகிய கவனிப்பு

    ReplyDelete
  33. உங்களது அனைத்து கவிதைகளும் அவ்ளோ அருமை..

    ReplyDelete
  34. ரொம்ப நாளைக்குப்பிறகு கைகொடுத்து பாராட்ட வேண்டிய கவிதை.

    ReplyDelete
  35. நிரூபன் said...
    இது இடப்பெயர்வா
    இல்லை
    தமக்கான ஏதோ ஒன்றின்
    தேடுதலுக்கான ஒன்றிணைவா.

    ஓசையே இல்லாமல்
    ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
    ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!//

    பல தோல்விகளின் பின்னால், துவண்டு போயிருக்கும், ஒற்றுமையின்றி ஒரு குடிசைக்குள் பல முற்றங்கள் வேண்டி வாழும் சுற்றங்களுக்கு மிகவும் பொருத்தமான கவிதையினை அழுத்தமான வரிகளோடு, எறும்பினை ஒப்பீட்டு வடிவமாக்கிப் புனைந்துள்ளீர்கள். அருமை சகோ,

    ReplyDelete
  36. கவிதையினை ஆரம்பத்தில் நேற்றே படித்தேன், ஆனால் வெள்ளியில் வேலைப் பளு அதிகம் என்பதால், பின்னூட்ட முடியவில்லை, நண்பர் ஓட்ட வடை கவிதைக்கான உள்ளார்ந்த அர்த்தங்கள் அனைத்தையும் அழகா விளக்கியுள்ளார்.

    ReplyDelete
  37. வித்தியாசமான வரிகள். இவர்களிடம் உள்ள ஒற்றுமை கூட இந்த மனித சமுதாயத்தில் இல்லை.

    ReplyDelete
  38. மிக மிக அருமை
    கடைசி பத்தியை மீண்டும் மீண்டும் படித்து
    அகமகிழ்ந்து போனேன்
    நல்ல கவிதை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. எறும்பின் சாரையிலும் கவிதை கண்ட ஹேமாவுக்குப் பாராட்டுகள். வார்த்தைகளால் வசியம் செய்யும் கலை உங்கள் உடன்பிறந்ததுபோலும். எறும்புகளிடமிருந்து கற்பதற்கு ஏராளப்பாடங்கள் உள்ளன, ஹேமா. அதிலும் எறும்புகளுக்கு ஐந்தறிவில்லையாம். மூன்றறிவுதானாம்.தொல்காப்பியர் சொல்கிறார்.

    ReplyDelete
  40. ஓசையே இல்லாமல்
    ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
    ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!

    ReplyDelete
  41. இடப்பெயர்வா ...

    எல்லாவற்றிலும் நம் நிலை நோக்க வேண்டியுள்ளது ...

    ReplyDelete
  42. ஐந்தறிவு ஜீவராசிகள் ஆறறிவிற்க்கு நிறைய கற்றுதருகின்றன.

    உன்னிப்பாய் நோக்கிய உள்ளதிற்க்கும் அதனை கருவாக்கி உருவாக்கிய தோழிக்கும் பாராட்டுகள்.. அர்தம்பொதிந்த கவிதை..

    ReplyDelete
  43. ப‌டைப்பாளி எதையெண்ணி எழுதினாரோ அதையும் தாண்டி வாசிப்ப‌வ‌ர் ஒவ்வொருவ‌ரும் அவ‌ர‌வ‌ர் சிந்த‌னையோட்ட‌த்தில் அப்ப‌டைப்பின் உவ‌ம‌ உருவ‌க‌ ப‌டிம‌ங்க‌ளைக் க‌ண்ட‌றித‌லும், விரிந்த‌ பொருளுண‌ர்த‌லுமான‌ கிள‌ர்த்த‌ல்தான் அப்ப‌டைப்பையும் ப‌டைப்பாளியையும் உச்ச‌த்தில் நிறுத்துப‌வை. உங்க‌ ப‌டைப்புக‌ள் எங்க‌ள் சிந்தையை கிள‌ர்த்திய‌ப‌டியேதான் இருக்கின்ற‌ன‌ ஹேமா. வாழ்த்துக‌ளும் பாராட்டுக‌ளும். அனைத்திலும் அடியாழ‌த்தில் இழையோடும் சித‌றிக்கிட‌க்கும் ம‌க்க‌ளும் அவ‌ர்க‌ளின் புல‌ம்பெய‌ரா வேத‌னைக‌ளும் ம‌ன‌சை க‌ன‌ப்ப‌டுத்த‌த் த‌வ‌றுவ‌தேயில்லை.

    ReplyDelete
  44. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete
  45. இதைத்தான்
    இதைத்தான்
    இப்படித்தான்
    இப்படியேதான்
    எளிமையான
    சொலாடல்களில்
    மக்கள்
    மொழியில்
    உங்களின்
    கவிதையை
    வழங்குங்கள்
    பாராட்டுகள்
    நன்றி .
    தொடர்க .

    ReplyDelete
  46. அப்பப்பா அழகிய கற்பனை நிறைந்த கவிதை...
    ஐந்தறிவு ஆறறிவில் விட பண்பில் உயர்ந்துதானே நிற்கிறது!!
    நாம் அவர்களிடம் கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம்...
    மறைமுகமாய் வரித்த கவி ரொம்ப ரொம்ப அருமை...

    ReplyDelete
  47. இடம்பெயர்வா எப்படிச் சொல்லுவது உங்கள் கவிதையில் பல பாடு பொருள் இருக்கிறதே எறும்பை மையப் படுத்தி தொலைந்து போன சும்மாடு ஞாபகம் வருகிறது எனக்கு புத்தகத்திற்கு இடையில் எறும்பு ஊறும் வரை கவனிப்பாரற்ற விட்ட நூலைப் படித்தவரை  எப்படி திட்டுவது?

    ReplyDelete
  48. ஹேமா உங்கள் கவிதைகளில் மிக வித்யாசமானது இது..:)

    ReplyDelete
  49. தஞ்சை நிலத்தின் வளமை-நீர்
    தந்தக் கவியில் புலமை
    நெஞ்சம் பெற்றது இனிமை-என்றும
    நினைவில் வாழும்அருமை

    கண்ணால் கண்டது கவியாக-அக்
    கருத்தைக் கேட்பது செவியாக
    பண்ணாய் தந்தது மிகநன்றே-நான்
    படி(த்)தேன் இரசித்தேன்
    வாழ்த்துக்கள்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete