Saturday, October 09, 2010

இன்று...

மாமாவின் சாயலாம்
அத்தையின் நடையாம்
அப்பாவின் குணமாம்
அம்மாவின் றாங்கியாம்.

பள்ளித் தோழி ஒருத்திதான்.
தம்பிதான் உயிர்த்தோழன்.

காதலிக்காமலே
காதல் தோல்வி.
படிப்பில் மண்.

திருமணம்
புரியாத உறவு
இல்லாமலே போனது.

காலச்சுழற்சியில்
வறுமை நிரப்பிய பணம்.
சுற்றம் புறம்பேச
முதுகில் புண்.
நோவைப் புதைக்க
நீண்டதொரு பிரயாணம்.

ஒற்றை மயிர் வெளுப்பு
வயதை ரசிக்கும் கண்ணாடி
கண்ணிலும்தான்.

கிடைக்கவும் இல்லை
இழக்கவும் இல்லை
விரும்பிய ஒன்றுக்காக
இன்னொரு பிறவிக்கான
ஏக்கக் கண்ணீர்.

இருண்ட இரவுகளில் ஒன்று
புதிதாய் விடிகிறது இன்று!!!

ஹேமா(சுவிஸ்)

81 comments:

  1. //காலச்சுழற்சியில்
    வறுமை நிரப்பிய பணம்.
    சுற்றம் புறம்பேச
    முதுகில் புண்.
    நோவைப் புதைக்க
    நீண்டதொரு பிரயாணம்.//
    யாரையோ பக்கத்தில் இருந்து பார்த்து எழுதியது போலிருக்கிறது ஹேமா. ஆனா நல்லா வந்திருக்கு.

    ReplyDelete
  2. #$#இருண்ட இரவுகளில் ஒன்று
    புதிதாய் விடிகிறது இன்று!!!#$#

    Simple And Sweet kaa.. :)

    ReplyDelete
  3. கடைசி வரிகள் நச்,


    அம்மாவின் றாங்கியாம்.

    ராங்கி - றாங்கி என்ன வித்தியாசம்?

    மயிர் என்ற வார்த்தைக்குப்பதில் குழல்,முடி கூந்தல் இழை 3 இல் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாமே?

    சாரி ஹேமா,அட்வைஸ் எல்லாம் இல்லை,ஆலோசனை

    ReplyDelete
  4. / கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர். /

    இந்த மாதிரி தருணங்கள் வலியின் அர்த்தம் புரியும் ஹேமா... பல பேருக்கு தெரியாது எதற்கு கண்ணீர் என்று...

    கவிதை ஒரு வித வலியை உண்டாக்கியது...

    ReplyDelete
  5. பிளாக்கின் லே அவுட்டில் குட்டி குட்டி இதயங்கள் வந்துகொண்டே இருப்பது,வரவேற்கும் கரங்களில் பூமழை பொழிவது இரண்டும் கொள்ளை அழகு.ஹேமா

    ReplyDelete
  6. அம்மாவின் றாங்கியாம்

    முதுகில் புண்

    கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை

    நான் எதுனா சொல்லனுமா என்ன

    ReplyDelete
  7. அந்த லைன் நல்லா இருக்கு.. இந்த பார நல்லா இருக்குன்னு எனக்கு சொல்லத்தெரியல...

    படிச்சேன்... ஆழமா உள்வாங்கி கிட்டேன்... எழுத்திலிருந்த....உணர்வின் மூலம் பிறந்த இடம்...பரிட்சையப்பட்டு போனது... சந்தோசமானது...!

    அவ்வளவே...வேறு ஏது கூறினாலும் அது மிகைப்படுத்தலே ஹேமா...! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஆழமாய் ரசித்தேன் ஹேமா.
    இறுதியில் அற்புதம்.
    என்னவோ பண்ணுது கவிதை என்று சொல்லணும் போல இருக்கு
    கனம் கூடிக்கொள்கிறது

    ReplyDelete
  9. \\கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.\\

    .........

    ReplyDelete
  10. ராங்கி - றாங்கி என்ன வித்தியாசம்?எனக்குக்கூட அந்த சந்தேகம் ஹேமா....."கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்".இது போன்று எல்லோருக்கும் ஏதோ ஒரு ஏக்கம் கண்ணீராய் இருந்து கொண்டுதானே இருக்கிறது? அருமையான வரிகள்......

    ReplyDelete
  11. //
    கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.
    //

    Beautiful lines

    ReplyDelete
  12. //கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.//

    Excellent

    ReplyDelete
  13. //திருமணம்
    புரியாத உறவு
    இல்லாமலே போனது.//

    ஹேமா...வரிகள் எனக்கு எதையோ உணர்த்துகிறது.....!!? வலி தெரியவில்லை...தெறிக்கிறது....!!!

    ReplyDelete
  14. "புதிதாய் விடிகிறது இன்று..." நன்று.

    ReplyDelete
  15. //கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.//
    வார்த்தைக் கோர்ப்பில் வலிமட்டும் வலியதாய்!
    ரொம்ப நல்ல இருக்கு ஹேமா!

    ReplyDelete
  16. அருமையான வரிகள்!

    ReplyDelete
  17. ||வயதை ரசிக்கும் கண்ணாடி||

    ம்ம்ம்ம்

    ReplyDelete
  18. அடடா..."இங்கு கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா"

    ஹேமா! எளிமையான வரிகள்!

    ReplyDelete
  19. //விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.//

    அருமையான வரிகள்.

    //இருண்ட இரவுகளில் ஒன்று
    புதிதாய் விடிகிறது இன்று//

    அழகு.

    ReplyDelete
  20. ஹைய்யா

    ஹேமா எழுதிய கவிதையும் புரியுது
    அதன் பின்னால் உள்ள பல வரிகளுக்கு இடையே உள்ள "அர்த்தமும்" புரிந்தது.

    ReplyDelete
  21. சுற்றம் புறம்பேச
    முதுகில் புண்.///

    வார்த்தைகளை தேடி எடுத்து கோர்த்து கவிதையாக்கும் அழகே அழகு.

    ReplyDelete
  22. "விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்"

    தாக்கும் வரிகள்.

    சுற்றம் புறம்பேச
    முதுகில் புண்.
    நோவைப் புதைக்க
    நீண்டதொரு பிரயாணம்

    வலிகள்...

    றாங்கி??

    ReplyDelete
  23. கவிதை வரிகள் அருமை என்று சொல்லி விடலாம்..!

    கவிதைச் சொல்லும் வலியினை.....?

    ReplyDelete
  24. //வயதை ரசிக்கும் கண்ணாடி//

    ரசனையான வரி இது ஹேமா.

    ReplyDelete
  25. வணக்கம் தோழி
    அருமையான பதிவு

    ReplyDelete
  26. ஏக்கம் கசியும் கவிதை தொட்டது மனதின் ஆழத்தை.

    சில சமயங்களில் வானம் வெளித்த பின்னும் இங்கு விரியாது போய்விடுதலே அடிக்கடி வரமுடியாமைக்குக் காரணம்.வருந்துகிறேன் ஹேமா.

    ReplyDelete
  27. Excellent excellent one...keep it up...

    ReplyDelete
  28. ஒற்றை மயிர் வெளுப்பு
    வயதை ரசிக்கும் கண்ணாடி
    கண்ணிலும்தான்.

    உண்மைதான்

    இருண்ட இரவுகளில் ஒன்று
    புதிதாய் விடிகிறது இன்று!!!

    உங்கள் கவிதைகள் அனைத்தும் வலிகளை உள்வாங்கி பிரதிபலிக்கின்றது தோழி

    ReplyDelete
  29. //கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.//

    super. vaalththukkal.

    ReplyDelete
  30. \\கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.\\
    \\உங்கள் கவிதைகள் அனைத்தும் வலிகளை உள்வாங்கி பிரதிபலிக்கின்றது தோழி\\

    ReplyDelete
  31. உளியால் செதுக்கப்பட்ட வலி ஏக்கத்தின் அழகிய வெளிப்பாடு.. அழகு பல நேரங்களில் ரசிக்கபடமுடிவதில்லை

    ReplyDelete
  32. அடடே இவ்வளவு கம்மியா உங்க கவலைங்க? ... எங்க lifeபை பத்தி சொன்னேன்னு வைங்க அப்புறம் இரத்தம் கண்ணீர்தான் வடிப்பீங்க...

    ஒற்றை மயிரும், கடைசி ஒரு வரிகளும் என்னை கவர்ந்தவை.. ஹேமாஜி

    இவ்வளவு... கடினங்களையும் கடந்துநின்றாலும்... விடியல்கள் அழகாய்தான் பூக்கின்றன...

    Dont worry... Be happy... :)

    ReplyDelete
  33. ஹேமா அக்கா..

    கவிதை ஏதோ ஒன்றை சொல்லாமல் சொல்கிறது..
    கண்ணீரும் இல்லை காயங்களும் ஆனால வலிகள் மனதோடு என்பது போல இருக்கு.. நான் சரியா..

    ReplyDelete
  34. nice hema.

    எதிர்ப்பார்த்து ஏமாந்தால் தானே வருத்தம் இல்லையென்றால் வெரும் தோல்வி தான் வெற்றிபெறும் வாய்ப்புடன்.

    ReplyDelete
  35. ஒற்றை மயிர் வெளுப்பு
    வயதை ரசிக்கும் கண்ணாடி
    கண்ணிலும்தான்

    அருமை கலக்குறிங்க போங்க

    ReplyDelete
  36. ஒரு குட்டி ஆட்டோபயோகிராபி போல இருந்தது

    வாழ்த்துக்கள் ஹேமா

    விஜய்

    ReplyDelete
  37. ஒற்றை மயிர் வெளுப்பு
    வயதை ரசிக்கும் கண்ணாடி
    கண்ணிலும்தான்.

    கவிதை படித்து முடித்தபிறகு மனதில் நன்கு ஒட்டியிருப்பது இந்த வரிகள்தான் சகோதரி. நான் ஒருநிமிடம் வயதாகி வந்தேன்!!

    கவிதைக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  38. அருமை... அழகு... சூப்பர்...
    கவிதை வரிகள் கலக்கல்.

    ReplyDelete
  39. ஃஃஃஃகாதலிக்காமலே
    காதல் தோல்வி.
    படிப்பில் மண்.ஃஃஃஃ
    அருமை அழுத்தமான வரிகள்...

    ReplyDelete
  40. இரவுகளில் ஒன்று
    புதிதாய் விடிகிறது இன்று
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. //கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.

    இருண்ட இரவுகளில் ஒன்று
    புதிதாய் விடிகிறது இன்று!!!///

    கனமான வார்த்தைகள்,,,,,,,,,,,,, ஹேமா

    ReplyDelete
  42. எளிமை!நல்ல சந்தம் முதல் நான்கு வரிகள்.இறுதி வரிகள் கவித்துவம்.

    ReplyDelete
  43. கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.


    ......ஆழமான உணர்வுகளை அருமையாக சொல்லும் கவிதை.

    ReplyDelete
  44. திருமணம்
    புரியாத உறவு
    இல்லாமலே போனது////

    நல்ல இருக்கு...

    ReplyDelete
  45. ஆர்.வி.எஸ்...வாங்க அப்போ பக்கத்தில இருக்கிறவங்க மூஞ்சியைப் பாத்து எழுதிட்டேன்னு சொல்றீங்களா.இங்க யாருமே இல்லீங்கோ.நன்றி பாராட்டுக்கு !


    சிந்து...முதல் வணக்கம் சகோதரி.இனி அடிக்கடி காணலாம் கவிதைப்பூக்களோடு !


    செந்தில்குமார்...தமிழ்ப்போர் உங்ககூட எப்பவும்.நீங்க போன கவிதையிலயும் சின்னத் திருத்தம் சொன்னீங்க.எனக்கென்னமோ அதே அர்த்தம் தரும் சொல்லாய் இருந்தாலும் மாற்றும்போது அதன் வேகம் குறைவதுபோல இருக்கும்.
    உங்களை மதிப்பதற்காக மாற்ற முயற்சித்தேன்.முடியவில்லை.
    ஆனால் நிச்சயம் நீங்கள் சொல்லும் திருத்தங்களை மதிக்கிறேன்.இன்னும் எதிர்பார்க்கிறேன்.

    மற்றது ராங்கி...றாங்கி உண்மையில் தெரியவில்லை.யாரும் சரியாகச் சொல்வார்கள் என எதிர்பார்த்தேன்.
    சொல்லவில்லை.இணையத்தில்
    தேடினேன்.இருசொற்களையுமே பாவித்திருக்கிறார்கள்.உச்சருக்கும்போது நுனிநாக்கிலா ராங்கி என்று சொல்கிறோம்?யாராவது தெரிந்தால் சொல்லட்டும்.இன்னும் தேடுவோம் !

    என் இரண்டு தளங்களைச் செய்து தந்தவர்கள் இலண்டனில் உள்ளவர்கள்.ஆனால் குழந்தைநிலா கருப்புன்னும்,உப்புமடச்சந்தில் குரங்குக்கூட்டம் வேணும்ன்னு பிடிவாதாமாய் செய்யவச்சது நான்.சிலபேருக்குக் எம் முன்னோர்கள் அங்கு கூடிக்குலவியிருப்பது பிடிக்கலயாம்.அவர்களை மறந்தால் நாம் எங்கு !உங்கள பாராட்டு அவர்களைச் சந்தோஷமாக்கியிருக்கிறது.நன்றி.


    வினோ...என் வாழ்வின் வலித்த தடங்களில் சில இவைகள்.


    செந்தில்...எப்பவும் என்னத்தைச் சொல்லன்னு ஒரு "ம் " கொட்டினீங்களோ !


    ஜமால்...என்னை நானே சொல்லிட்டேன்ன்னு சொல்றீங்களாக்கும் !


    நேசன்...என்ன "ம்ம்".
    ரொம்பத்தான் யோசிக்கிறீங்க !


    தேவா...உங்கள் எழுத்துக்களின் ரசிகை நான்.ஏதோ கொஞ்சம் புரிஞ்சு வச்சிருக்கீங்க என்னப் பற்றி !


    விந்தையாரே...கனம்தான் எழுதவைக்கிறது.என்றாலும் திரும்பவும் ஏறிக்கொள்கிறது
    மீண்டும் கனத்தபடி !


    றமேஸ்...நினைக்கிறதைச் சொல்லி முடிச்சிடுங்கோ.சொல்லாமல் விடுறதே பெரிய கனம் !


    லோகு...ஒண்ணுமே சொல்லாமப் போனா எப்பிடி !


    நித்திலம்...வாங்க.கவிதை என்பது அவரவர் அந்த இடத்தில் இருந்தால் பொருந்தக்கூடியதுதானே !நன்றி.


    வேலு...நன்றி பாராட்டலுக்கு !


    T.V.ராதாகிருஷ்ணன்...நன்றி என்றும் உங்கள் அன்பின் வருகைக்கு !


    கௌசி...வலிதான் ஆனால் வடுவாகிவிட்டது காலஓட்டத்தில் !


    மாதேவி...விடிகிறது என்றுமே அது எங்களுக்கானதாய்த் தெரியவில்லையே !


    பாலா...வலிதான் ஆனாலும் வலிந்தெடுத்த வார்த்தைகள்
    அல்ல அவைகள் !


    எஸ்.கே...வாங்க வரணும்.


    கதிர்...நீங்க ரொம்பவே பிஸி.
    நான் சும்மா.உங்க எத்தனை வேலைகளுக்குள்ளும் இப்படி இடையிடை ஊக்கப்படுத்துவதே சந்தோஷம் !


    மோகண்ணா...அழகான பாராட்டு !


    லஷ்மி அக்கா...உங்க அளவுக்கு எழுத நான் இன்னும் நிறைய எழுதணுமே !


    ஜோதிஜி...வாங்க வாங்க.காணவே கிடைக்குதில்லையே.தேவியர்கள் நால்வரும் எப்படி ?இல்ல இல்ல இப்பவும் புரியவே இல்லை முழுசா !


    தமிழ்...எனக்கும் பிடிச்ச வரியை உங்களுக்கும் பிடிச்சதா சொல்லியிருக்கீங்க !

    ReplyDelete
  46. ஸ்ரீராம்...ராங்கி...றாங்கி நீங்களும் கண்டுபிடிக்கலையா !


    சத்ரியா...எங்களை நாங்கள் ரசிக்கிறதைவிட நாங்க பாக்கிற கண்ணாடி எங்களை ரசிக்கும் தெரியுமோ !


    தினேஸ்...எங்க காணோம் கனநாளா !


    ஜெரி...இதுதான் ஒரு சொல்லில் பின்னூட்டமோ !


    சுந்தர்ஜி...நீங்களும் சரியாக் கண்டு பிடிக்கல.இனி அடிக்கடி வர முயற்சி பண்ணுங்கோ !


    ராஜா...அன்புக்கு நன்றி சகோதரனே !


    சக்தி...அகதி வாழ்வென்பதும் உறவுகளை களைந்த வாழ்வென்பதும் சுலபமல்ல.வலிகளைச் சுகமாக்கும் ஒரு கற்பனை உலகம் மட்டுமே !


    சரவணன்...உங்கள் பாராட்டுக்கு நன்றி.


    அம்பிகா...வலிகள் வெளியில் வர கொஞ்சம் வேதனை குறையும் !


    தமிழரசி...அழகு எல்லோராலும் எந்த நேரத்திலும் ரசிக்கப்படுவதில்லை.
    உணர்ந்துகொண்டால் ரசிக்கப்படலாம் !


    மது...வாழ்வு நாங்க வேணாம்ன்னா நிக்கவா போகுது.
    போய்க்கிட்டே இருக்கு !


    அஷோக்கு...உங்களுக்கும் கவலையா.சொல்லவேயில்ல.
    எனக்கென்ன குறை. சந்தோஷமாத்தானே இருக்கேன்.அன்புக்கு ஆயிரம் நன்றி !


    ரியாஸ்..."கண்ணீரும் இல்லை காயங்களும் ஆனால் வலிகள் மனதோடு" நீங்க சொன்னது சரி.
    ஆனாலும் சரியான கண்டுபிடிப்பு இல்ல !


    ராஜவம்சம்...ஏமாறவும் இல்லை.
    வெற்றியும் இல்லை.ஆனால் எதிர்பார்ப்பு இயல்பானதுதானே !


    யாதவா...கலக்கல்தான்.வேற என்னதான் செய்யமுடியும் இங்க இருந்துகொண்டு !


    விஜய்...போனமுறை நீங்க ஒரு ஆள்தான் சரியாச் சொல்லியிருந்தீங்க.இந்தமுறை நீங்களும் அவுட்.உங்களை மறப்பேனா நான்.ஏதோ தவறு போன பின்னூட்டத்தில்.என்றும் அன்பு சரிசமனாக !


    ஆதவா...வயதாகி வந்ததுபோல உணர்வு மட்டும்தானே.எனக்கும்தான் இந்த வரிகள் எழுதும்போது !


    குமார்...வாங்க நன்றி !


    சுதா...முதல் வணக்கமும் வரிகள் ரசிப்பும்.வித்தியாசமான ரசனை.
    ஒரு வேளை உங்களுக்கும் என்னைப்போல !


    யாரது....பெயரில்லாமல் வாழ்த்துகளோடு.என்றாலும் சந்தோஷம் !


    ஸ்ரீதர்...உங்களை அறியப்படுத்தி வந்திருந்தால் சந்தோஷம்.உங்கள் பதிவுக்கு வரமுடியவில்லையே !


    நடா...சுகம்தானே.அடிக்கடி வரணும் !


    சித்ரா...நன்றி தோழி.என் பதிவுகள் ரசிக்கவும் உணரவும்.உங்கள் பதிவு வாசிப்பவர்களை கலகலப்பாக்கும் !


    சௌந்தர்....
    நன்றி தோழரே அன்புக்கு !

    ReplyDelete
  47. நல்லாஇருக்கு ஹேமா..
    வாழ்த்துகள் :)

    ReplyDelete
  48. அருமையான கவிதை.

    ReplyDelete
  49. ராங்கி,றாங்கி

    ஹேமா இது இரண்டுமே தமிழ்ச் சொல்லிலை,
    பேச்சுவழக்கில் உருமாறிருக்கலாம்...

    இன்றும் இப்படித்தான் பேசுகிறார்கள்

    உ+ம் ஒரு பெண்ணிடம் ஆண்கள் காதலினாலோ,அன்பினாலோ
    பேச முற்படும்போதும்,பேசு போதும்....
    அப்பெண் பதிலெதுவும் கூறாமல் ,கண்டுகொள்ளாமல் இருந்தால்
    அவள் மிகவும் ராங்கிக்காரி {திமிர்,மதிப்பின்னை}என்று
    சொல்ல்லாம்....
    மாமியார்,மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொண்டாலும்
    கூறுவார்கள்

    உ+ம் ஒரு பிள்ளை தாயிடம் ஒரு பொருளைக்கேட்டு அழும்போது...
    யாராவது தாயிடம் பிள்ளை ஏன் அழுகின்றது என்று கேட்டால்
    அதற்குத் தாய் கூறும் பதில்....
    மிகவும் றாங்கி பிடித்த பிள்ளை {அடம்பிடிப்பது} முடியாது என்றாலும்
    கேட்டு அழுகிறது என்பார்

    அதிகமாய் இலங்கையில்தான் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது
    {வேறுமொழித் தழுவலாய்,அல்லது வேற்றுமொழியாய்க் கூட
    இருக்கலாம்}
    என் சின்னமூளையில் தட்டியது இதுதானம்மா

    ReplyDelete
  50. //காலச்சுழற்சியில்
    வறுமை நிரப்பிய பணம்.
    சுற்றம் புறம்பேச
    முதுகில் புண்.
    நோவைப் புதைக்க
    நீண்டதொரு பிரயாணம்.///

    வழக்கம் போல் இந்த கவிதையும் உணர்வை தூண்டுகின்றது

    ReplyDelete
  51. ஹ்ம்ம்..அருமையான வரி(லி)கள்..

    ReplyDelete
  52. ஒற்றை மயிர் வெளுப்பு
    வயதை ரசிக்கும் கண்ணாடி
    கண்ணிலும்தான்.

    unmaiya oru mudi thana?. die poga oru mudithan whiteah?
    irunthalum athuthan alagu.

    Hemu how are you?. how is ur kid?.

    innamum ethanai nallukku soga kavithai varum. seekiram nalla santhosamana kavithaikal VENDUM.

    ReplyDelete
  53. மாமாவின் சாயலாம்\\\\
    மாமாவோட புகைப்படத்தைப் போட்டிருந்தால்
    அதில் ஹேமாவைப் பாத்திருக்கலாமல்லவா!

    அத்தையின் நடையாம்\\\\
    என்ன நடை ஹேமா? அன்னமா?வாத்தா?பூனையா?
    நடந்து காட்டலாமில்ல......அழகிராணிப் போட்டிக்கு
    எனக்கு உதவுமில்ல...

    அப்பாவின் குணமாம்\\\\
    தங்கமா??

    அம்மாவின் றாங்கியாம்\\\\
    உங்கம்மா அவ்வளவு “பிடிவாதக்காரரா”
    அதேபோல் நீங்களுமா...???

    இப்ப நான் “அவகளத்” தேடனுமே!
    பிடி வாதத்தில்ஹேமா கெட்டிக்காரியா என்று
    அறிய...???

    ReplyDelete
  54. அருமை ஹேமா..

    என்னோட பதிவை பாருங்க..

    லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு உங்க படைப்புகளை இன்றோ நாளையோ அனுப்புங்க..

    ReplyDelete
  55. //இருண்ட இரவுகளில் ஒன்று
    புதிதாய் விடிகிறது இன்று//

    அருமை தோழி..

    ReplyDelete
  56. விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்......

    ReplyDelete
  57. நல்ல பாடம்
    நல்ல கருத்து
    நல்ல கவிதை
    எல்லாம் வாழ்வின் நிதர்சனம்
    வாழ்த்துக்கள் ஹேமா

    உங்களிடம் ஒரு விண்ணப்பம்
    நீங்கள் ஈன கவிதைப் புத்தகம்
    வெளியிடவில்லை.
    அப்படி வெளிட்டிருந்தால்
    சொல்லுங்கள்
    படிக்க ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
  58. (நல்ல பாடம்)
    -------இல்லை--------
    நல்ல படம்
    akshpoems@gmail.com

    ReplyDelete
  59. மிகவும் துயரமான கவிதை.

    ReplyDelete
  60. //ஒற்றை மயிர் வெளுப்பு
    வயதை ரசிக்கும் கண்ணாடி
    கண்ணிலும்தான்.

    கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்.

    இருண்ட இரவுகளில் ஒன்று
    புதிதாய் விடிகிறது இன்று!!!//

    ஆரம்பித்த கவிதையின் முடிவு "நச்"...
    இறுதி வரிகளில் நல்ல அழுத்தம்..

    மொத்தத்தில் சொல்லாமல் சொன்ன ஒரு ஊமைவலியை உணர்த்துகிறது கவிதை....
    அருமையான கவிதை.

    வலைப்பூ வடிவமைப்பு பளிச்... கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கிறது... :)

    ReplyDelete
  61. //கிடைக்கவும் இல்லை
    இழக்கவும் இல்லை
    விரும்பிய ஒன்றுக்காக
    இன்னொரு பிறவிக்கான
    ஏக்கக் கண்ணீர்//

    அழுத்தமாய் பதிகிற வரிகள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  62. எத்தனை வருடமாகிறது 'றாங்கி' சொல்லை எதிர்கொண்டு! கவிதை நன்றாக இருக்கிறது. காதலிக்காதவர்கள் தான் காதல் தோல்வி அடைந்தவர்கள் என்று நானும் நினைப்பதுண்டு.

    ReplyDelete
  63. no love poets, so no vist from my home, and no comments here, ithu kooda comment kidaiyaathu..................


    engaeeeeeeeeeee oru kathal kavithai superaaaaaa eduththu vudunga paakkalaam

    ReplyDelete
  64. innoru piravikkaana yekka kanneer ,nice Hema.

    ReplyDelete
  65. தாமதமாய் வந்திருக்கிறேன் ஹேமா. மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டது கவிதை. கனமான கவிதை. வேறு என்ன சொல்ல?

    ReplyDelete
  66. வணக்கம் ஹேமா...என்னமா எழுதுறிங்க..அந்த சூத்திர ரகசியம் என்னனு தான் சொல்லுங்களேன்.நானும் பயணிக்க முயற்ச்சிக்கிறேன்

    ReplyDelete
  67. வணக்கம் தோழி
    என்ன ஆச்சு ஆளையே காணோம் ரொம்பநாளா......
    மனசு சும்மா பேசிக்கிட்டே இருக்குத் தோழி........

    ReplyDelete
  68. ஹேமா, என்ன ஆளையே காணோம்

    ReplyDelete
  69. வலி சொல்லும் கவிதை . ஏக்கத்திலே வாழ்வு கரைகிறது .மீண்டும்புதிதாய் பிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  70. இப்பல்லாம் திடிர் திடிர்ன்னு முன் அறிவிப்பு இல்லாமல்”எஸ்” ஆயிடுறீங்க

    மெயில் ஐடி அல்லது தொலைப்பேசி இலக்கத்தை மெயில்ல அனுப்புங்க நலம் விசாரிப்பதர்க்கு.

    ReplyDelete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
  72. வீடு திருத்துகிறார்கள் என்றால் பழுது பார்க்கப் படுகிறது என்றுதானே அர்த்தம் ஹேமா? மடிக் கணினி, அலுவலகக் கணினி இல்லையா?!

    ReplyDelete
  73. மீண்டும் சிந்திக்க வைத்து விட்டீர்கள்!

    ReplyDelete