Saturday, April 24, 2010

அந்திமத்தில் அம்மா...

"இந்தக் கட்டையை
என்ர மண்ணிலேயே எரிச்சிடு பிள்ளை"
அம்மாவின் அடிமன ஆசை அது.

வாழ்வின் யுத்தங்கள் முடித்தவளாய்
வாழ்வின் பொருள் பரிசளித்தவள்
கிளை விட்டெழும் பறவையாய்
இலையசைத்து
பிரிந்துவிட்டாள் பின்னொருநாள்.

அனுப்பிவிட்டேன் பக்குவமாய்.
படுக்கை....
அம்மாவின் சேலை
வாசனை கலைக்க விரும்பாதவளாய்.

அக்காதான் பேசினாள்.

"சவம் வந்திட்டுது
பொறுப்பெடுத்து ஊருக்குக் கொண்டு போறம்.
இடது கால் சொக்ஸ்க்குள்ள இருந்த காசும்
பாவாடை மடிப்பில இருந்த சங்கிலியும்
றவுக்கைக்குள்ள இருந்த
அம்மான்ர காப்பும்
நீ சொன்னபடி நானும் தம்பியும்
பிரிச்சு எடுத்துக்கொள்றம்.

செத்தவீட்டை
குறையொண்டும் இல்லாமல்
வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன் நான்
கவலைப்படாமல் இரு என்ன."

வாழ்வு வரிசையின் ஒழுங்குமுறை
அம்மாவின் குரலில்
"என்னடி லட்சணம் இது"
என்று கேட்படி!!!

நேற்றைய "எங்கள் புளொக்"ல் சிறுகதை
ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்திய தாக்கம்.
நன்றி ஸ்ரீராம்.

ஹேமா(சுவிஸ்)

36 comments:

  1. ஊருக்கு போயிட்டு வந்த அனுபவம் கவிதையில் தெரியுது

    ReplyDelete
  2. "இந்தக் கட்டையை
    என்ர மண்ணிலேயே எரிச்சிடு பிள்ளை"



    எல்லோருக்கும் இந்த மாதிரியான அவர்களின் மண் மீது ஒரு தனிப்பட்ட பாசம் உண்டு

    ReplyDelete
  3. "உனக்கு நான்
    செத்தவீட்டை
    வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன்
    குறையொண்டும் இல்லாமல்
    கவலைப்படாமல் இரு என்ன""



    ரொம்ப கொடுமையான விஷயம் ஹேமா .....

    (இதை நீங்கள் எழுதிருக்க வேண்டாமே ....சிலரை இந்த வரிகள் காய படுத்தும்)

    ReplyDelete
  4. / என்னடி லட்சணம் இது/
    ஒற்றை வரியில்
    எல்லாம் சொல்லிவிட்டீர்கள்.
    கவிதை மனசை
    ரொம்பத் தொந்தரவுப்
    படுத்தியது.நல்ல கவிதையின்
    இலக்கணம் இதுதான்.
    இறந்த பின்
    அம்மாவும் சவம்தானா?

    ReplyDelete
  5. நன்றி ஹேமா,
    எங்கள் சிறுகதை ஏற்படுத்திய தாக்கம் அழகான கவிதையாய் வடிவெடுத்திருக்கிறது...
    சில வரிகள் வேதனையின் வெளிப்பாடுகள்...

    மதுமிதா said,
    இறந்த பின்
    அம்மாவும் சவம்தானா//

    என் உறவினர் ஒருவர் சமீபத்தில் ரெயில் மோதி இறந்தபோது முகமே சிதைந்து போன உடலை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கும் பின்னர் வீட்டுக்கும் எடுத்துச் சென்ற என் இன்னொரு மாமா பையன் அவ்வப்போது அலைபேசியில் பேசியபோது சொன்னது "மாமாவை ஆஸ்பத்திரி அழைச்சிப் போறேன்...மாமாவை அவங்க வீடு அழைச்சிப் போறேன்..."

    ReplyDelete
  6. //"இந்தக் கட்டையை
    என்ர மண்ணிலேயே எரிச்சிடு பிள்ளை"//

    ஹேமா,

    நாம் பிறப்பெடுப்பது பெண்ணிலிருந்து தான் என்றாலும், உண்மையில் தாய் என்பவள் பெண்ணல்ல. தாய்மண் தான் அனைவருக்கும் தாய்.

    ReplyDelete
  7. கவிதையில் வலிகளை பார்க்க முடிகிறது ...... கண்களில் கனமாகிறது

    ReplyDelete
  8. இடது கால் சொக்ஸ்க்குள்ள இருந்த காசும்
    பாவாடை மடிப்பில இருந்த சங்கிலியும்
    றவுக்கைக்குள்ள இருந்த
    அம்மான்ர காப்பும்
    நீ சொன்னபடி நானும் தம்பியும்
    பிரிச்சு எடுத்துக்கொள்றம்.

    சவம் என்று சொல்வதை விட இது கொடுமை இருப்பினும் மனிதனாய் வாழ்வது இயல்பு என்பதற்கு இது ஒரு சாட்சி....

    ReplyDelete
  9. //வாழ்வு வரிசையின் ஒழுங்குமுறை
    அம்மாவின் குரலில்
    "என்னடி லட்சணம் இது"
    என்று கேட்படி!!!//

    அழகிய அழத்தமான வரிகள்...

    ReplyDelete
  10. கொஞ்சநேரம் காட்சிகளுடன் பயணித்து கலங்கித்தான் போனேன்... வலியும்...

    ReplyDelete
  11. நிதர்சனம் ஹேமா :(

    வாழ்வின் யுத்தங்கள் முடித்தவளாய்
    வாழ்வின் பொருள் பரிசளித்தவள்
    கிளை விட்டெழும் பறவையாய்
    இலையசைத்து
    பிரிந்துவிட்டாள் பின்னொருநாள்.

    இதை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை அன்பு ஹேமா :)

    ReplyDelete
  12. சொல்ல வார்த்தை வரவில்லை. வலிக்கிறது இதயம்.

    ReplyDelete
  13. //அனுப்பிவிட்டேன்
    பக்குவமாய்
    ஊருக்கு அவள் உடம்பை.
    அம்மாவின் படுக்கை
    அம்மாவின் சேலை
    வாசனை கலைக்க விரும்பாதவளாய்.
    //

    நெகிழ வைத்த வரிகள்

    அற்புதம்

    ReplyDelete
  14. ஹேமா கவிதையைப் படிக்கக்
    கூட...மனம் வரவில்லை

    ..என் தாய்யின் நினைவு....

    ReplyDelete
  15. கலங்க வைத்த கவிதை.

    ReplyDelete
  16. வாழ்வு வரிசையின் ஒழுங்கு முறை.... என்னாலும் ஒன்றும் எழுதமுடியவில்லை...வலி

    ReplyDelete
  17. உங்களின் உணர்வுகள், கவிதை முழுவதும் வார்த்தைகளாய்.......!

    ReplyDelete
  18. என்ன சொல்ல. மறுபடியும் பாதித்து விட்டாள் அம்மா.

    ReplyDelete
  19. நல்லா இருக்குங்க ஹேமா

    வடிவ ஒழுங்கு மாறாமல் கதை கொடுத்த உணர்வை பிரதிபலித்திருக்கிறது கவிதை

    ReplyDelete
  20. முதல் பந்தியிலேயே மனது தங்கிவிட்டது

    விஜய்

    ReplyDelete
  21. செத்தவீட்டை
    குறையொண்டும் இல்லாமல்
    வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன் நான்
    கவலைப்படாமல் இரு என்ன."
    அப்படியே ஸ்தம்பிக்க செய்த வரிகள்

    ReplyDelete
  22. http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html

    மறக்காம ஓட்டு போடுங்க

    ReplyDelete
  23. வாழ்க்கையில் நிதர்சனமாய் இருக்கும் உண்மைகள் கவிதையாய் வடிந்துள்ளது. ஆனாலும் மொத்தக் கவிதையும் ஒற்றை வரியில் சொல்லியது. என்ன லட்சணம் என்று.

    ReplyDelete
  24. நானும் ஊருக்கு போகணும் போல இருக்கு

    ReplyDelete
  25. //டம்பி மேவீ ... "உனக்கு நான்
    செத்தவீட்டை
    வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன்
    குறையொண்டும் இல்லாமல்
    கவலைப்படாமல் இரு என்ன""

    ரொம்ப கொடுமையான விஷயம் ஹேமா .....
    (இதை நீங்கள் எழுதிருக்க வேண்டாமே ....சிலரை இந்த வரிகள் காய படுத்தும்)//

    மேவீ...உண்மையா இந்தக் கவிதையை உள்வாங்கி பின்னூட்டம் தந்திருக்கீங்க நன்றி.

    அந்தச் சிறுகதையின் கருவே இந்தப் பந்திதானே !நான் 7-8 வருஷத்துக்கு முந்து இதைப்போலவே உண்மை நிகழ்வொன்றைக் கேள்விப்பட்டிருக்கேன்.
    அதுதான் ஞாபகம் வந்து கவிதையாக்கினேன்.அப்போ எப்பிடி இந்தப் பந்தியில்லாமல் !


    மதுமிதா...அம்மாவாயிருந்தா என்ன ஆட்டுக்குட்டியா இருந்தா என்ன.செத்தபிறகு பாசம் பறக்க பணம்தான் வாழ்க்கை !
    சீ நினைச்சாலே அருவருப்பாயிருக்கு.


    நன்றி ஸ்ரீராம்.என்றோ நடந்த ஒரு நிகழ்வை மீண்டும் மீட்டெடுக்க வைச்சதுக்கு.எனக்கும் "சவம்" என்கிற சொல்ல்லப் பிடிப்பதில்லை.
    எப்படித்தான் சொல்ல மனம் வருமோ !


    சத்திரியா...தாய் - தாய்மண்...அதை உணரவேணும் !


    றமேஸ்...நீங்களும் இப்படியான நிகழ்வுகளைக் நிச்சயமாய் கேள்விப்பட்டிருப்பீங்க.எங்களவர்களின் நாகரீக வளர்ச்சியல்லோ !


    தமிழரசி...எங்களவர்கள் இப்படியும் செய்கிறார்கள்.இவர்களை எந்தத் தரத்தில் வைத்து என்ன பெயர் வைத்து அழைப்பது என்று தெரியாத தடுமாற்றம் !


    ராதாகிருஷ்ணன் ஐயா...அதிசயமா இல்லை அதிர்ச்சியா !


    சங்கவி....மனதின் அழுத்தம்தான் எழுத்துக்களில்.நன்றி.

    ReplyDelete
  26. நன்றி பாலாஜி...நான் இந்தச் சம்பவம் கேள்விப்பட்டு இதே நிலையில்தான் கலங்கிப்போனேன்.


    நன்றி இர்ஷாத்...எம்மவரின் அகதி வாழ்வுக்குள் இப்படியும் நடக்கிறது.


    அஷோக்....அம்மா வேடம் கொண்டு வாழ்வது என்பது சுலபமல்ல !


    சந்ரு...பாசத்தை இப்படி பணத்திற்காக பறக்கவிடுகிறார்களே.என்னதான் செய்யலாம் !

    நன்றி வேலு...கலங்கிய கருத்துக்கு மிக்க நன்றி.


    கலா...கலங்கி இன்றுதான் பார்க்கிறேன்.கை கொடு தோழி.
    எப்பவும்போல கலகலப்பாய் இருக்கவேணும் !


    கும்மாச்சி...எப்பவும் உங்க ஓட்டு மட்டும் எனக்கிருக்கும்.இன்று உங்க கருத்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது.
    நன்றி கும்மாச்சி.

    ஜெயா...வாழ்வின் இயல்பை அதுவும் அந்த சிறுகதை வாசித்ததும் எழுதிவிட்டேன்.மறந்திடுவோம் தோழி.

    சித்ரா....உங்கள் நகைச்சுவை உணர்வை என் பக்கம் ஒரு நொடி நின்று செயல்பட வைக்குமோ !
    மன்னியுங்கள் தோழி.

    ReplyDelete
  27. தமிழ்...அம்மா என்பவள் எப்போதுமே தன் குடும்பத்துக்காவே வாழ்ந்துகொண்டிருப்பவள்தானே.இறந்தபின்னும் பிள்ளைகளுக்காகத்தான் !


    முனைவர் இரா.குணசீலன் முதன் முதலாக வந்த உங்கள் வார்த்தைக்கு மிகவும் நன்றி.


    பிரசன்னா...இப்பிடி அதிர்ச்சியோட இனி அடிக்கடி சந்திக்கலாம்.வாங்க.


    நேசன் நன்றி.கவிதையின் கருவும் என் எழுத்தும் மாறாமல் என கவிதை திருத்தி என்னை வழிநடத்தியமைக்கு அன்பின் நன்றி மித்ரா.


    விஜய்...சில சங்கடங்களைத் தாண்டித்தான் ஆகவேண்டியிருக்கிறது வாழ்வு !


    சுரேஷ்....ஓட்டும் பின்னூட்டமும் போட்டாச்சு.அவர்களுக்கும் என்னென்ன பிரச்சனையோ !


    சுதாகர் வாங்க...உங்க தத்துவக் கவிதை அடுத்தது எப்போ ?சீக்கிரமா.


    அட...நசர் வாங்க அமெரிக்க பேய் வளர்க்கிற ஆசாமி நீங்கதானே !நீங்க ஊருக்குப் போய் நல்லா இருக்கிற பேய்களையும் உங்களை மாதிரி ஆக்கிட்டு வந்திடுவீங்க.அதனால ஊருக்குப் போக உங்களுக்கு டிக்கட் கிடைக்காம போகட்டும்.
    நான் சாபம் தாறேன் !

    ReplyDelete
  28. ஊர்ப்பாசம் என்பது எல்லா வெளிநாட்டுவாசிகளிடமும் காணக் கூடியதுதான் என்றாலும் ஹேமா ..அம்மாவின் ஆசையில் ரொம்ப உயிர்த்துடிப்பு

    ReplyDelete
  29. கதி கலங்க செய்யும் பதிவு,பகிர்வு,கவிதை ஹேமா.

    ReplyDelete
  30. நான் என்ன சொல்ல ஹேமா?ஏதோ மனதை அடைக்கிறது வரிகளின் பளீர்.கலங்கவைத்துவிட்டது கருவின் உரு.

    ReplyDelete