Thursday, February 04, 2010

வெறுமையின் பாரம்...

இனி யாரும் என்னைத் தேடாதிருக்கட்டும்.
தடுத்துத் துகிலுரிக்க
கையொன்று என்னை தீண்டாதிருக்கவே
பாரங்கள் கையிலும் தலையிலுமாய்
எல்லை தொடும்
பறவையின் வேகத்தோடு புறப்படுகிறேன்.

வறுமை வயிறு காய்ந்தபோதும்
குழந்தைகள் நடுவில்
காமத்தால நிரப்பப்படுகின்றன என் இரவுகள்.
மனித உருவில் மிருகங்கள் வாழும்
குகையிலிருந்து செல்வது
வீண் விரயமாய் இல்லை எனக்கு.

பாரங்கள் தந்தவன்
வெறும் பொருளாய் பிண்டமாய்
நினைக்கையில்
தீப்பற்றி எரியும் நகரத்திலிருந்து
விடுபடும் புழுக்கள் பூச்சிகள் போல
இடம் நகர்ந்து
காடோ கடலோ தேடியே போகிறேன்.

ஐந்தறிவு மிருகங்களால்
ஆபத்து ஒன்றும் பெரிதாயிருக்காது.
மனதிலும் கையிலும் யாருக்கும் உதவாத
வெற்றுப் பாராங்கள் மட்டுமே
எடுத்துப் போகிறேன்.
விட்டுப் போவதும் அதுவேதான்.

இனியாவது உணரட்டும்
மனிதரா மிருங்களா நாங்கள் என்று.
இல்லை அப்படியே வாழட்டும்.
மறுத்து வாழாத ஒருத்தி
வரும்வரை !!!

ஜெகா வரைந்த ஓவியத்திற்கு என் கற்பனையில்.
"ஜே..."ன் கவிதை காண...
ஹேமா(சுவிஸ்)

36 comments:

  1. ஹேமாவுக்கு!!
    அன்பர் தினம் வர கோபம் கொள்ளையாய்
    வருகிறது....
    ஏன் இவ்வளவு கோபம் அந்த......!!!?????

    ReplyDelete
  2. மனித உருவில் மிருகங்கள் வாழும்
    குகையிலிருந்து செல்வது
    வீண் விரயமாய் இல்லை எனக்கு...

    ரொம்ப பாதிப்போடு எழுதிரிக்கீறிங்க

    ReplyDelete
  3. ஹேமா...கவிதை அழகு..அதைவிட கோபம் அழகு

    ReplyDelete
  4. பாரங்கள் தந்தவன்
    வெறும் பொருளாய் பிண்டமாய்
    நினைக்கையில்
    தீப்பற்றி எரியும் நகரத்திலிருந்து
    விடுபடும் புழுக்கள் பூச்சிகள் போல
    இடம் நகர்ந்து
    காடோ கடலோ தேடியே போகிறேன்.
    ............ஒரே ஓவியம் தான். ஆனால், ஒவ்வொரு மனதிலும் பட்டு, அது பிரதிபலித்து வரும் போது புது புது அர்த்தங்கள் கிடைக்கின்றன. உங்கள் கவிதை, நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  5. வாவ்வவ்வவ.... ஹேமா கடித்துக்
    குதறி,பிய்த்து துப்பிவிட்டார் ஒரு
    பெண் படும் பாட்டை!!

    ஜெகன்!! ஹேமாவின் கோபம் எப்படி?
    என்று இங்கு வந்து பாருங்கள்!
    உங்கள் படத்தை வைத்து எப்படிக்
    கிழித்திருக்கிறார் ஒரு சிலர் முகத்திரையை!!

    ReplyDelete
  6. மனிதரா... மிருகமா... ஆணா... பெண்ணா... பெண் ஆணின் போகத்துக்கு என்றாக்கிய கடவுளர்களை என்னவென்று சொல்வது.

    ReplyDelete
  7. //மனதிலும் கையிலும் யாருக்கும் உதவாத
    வெற்றுப் பாராங்கள் மட்டுமே
    எடுத்துப் போகிறேன்.
    விட்டுப் போவதும் அதுவேதான்.//

    இது அருமை ஹேமா என்ன சொல்ல எதை சேமிக்க எதை செலவளிக்க

    ReplyDelete
  8. அடுத்தடுத்து இரண்டு கவிதைகள்....கோபம் எப்போது குறையும் ஹேமா? ஜெகன் படம் அழகாக வரைகிறார்

    ReplyDelete
  9. வறுமை வயிறு காய்ந்தபோதும்
    குழந்தைகள் நடுவில்
    காமத்தால நிரப்பப்படுகின்றன
    என் இரவுகள்.

    இந்த வரிகளே போதும் அழகான காரமான சுட்டெரிக்கும் வரி


    இதைதான் ஹைக்கூ என்பார்களோ

    ReplyDelete
  10. சமுக சாடல் + கோபம் = அருமை

    ReplyDelete
  11. நியாயமான கோபம்தான் தோழி.. இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கும் கதைதான் இது

    ReplyDelete
  12. ”பாரங்கள் தந்தவன்
    வெறும் பொருளாய் பிண்டமாய்
    நினைக்கையில்
    தீப்பற்றி எரியும் நகரத்திலிருந்து
    விடுபடும் புழுக்கள் பூச்சிகள் போல
    இடம் நகர்ந்து
    காடோ கடலோ தேடியே போகிறேன்”

    கவிதையும் அருமை
    ஓவியமும் அருமை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நல்ல கவிதை ஹேமா. ரசித்தேன்.

    ReplyDelete
  14. //மனத்திலும் கையிலும் யாருக்கும் உதவாத
    வெற்று பாரங்கள் மட்டுமே
    எடுத்து போகிறேன்
    விட்டு போவதும் அதுவேதான்//
    ஆழ்ந்த அர்த்தமுள்ள வரிகள்!

    ReplyDelete
  15. என்ன ஹேமா ஒரேயடியாக ஒருபக்க நியாயங்கள் மட்டும் சொல்கிறீர்கள்...

    ஆண்களை அடிமைப்படுத்த்ம் பெண்கள் கூட்டமும் பெருகிவருகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...

    மற்றபடி கவிதையாய் மட்டும் எனக்கு பிடித்திருக்கிறது...

    கலாவுக்கு
    என்ன சப்போர்ட் பண்றீகளோ..?
    எந்த ஆணைப்பற்றி இழித்து பேசுகிறீர்களோ அதே ஆண்வர்கத்தை சேர்ந்தவர்தான் தத்தம் தந்தையர் என்பதையும் மறந்துவிடாதீர்கள்...

    ReplyDelete
  16. ஹேமாவின் பின்னோட்டத்தில்...
    ஜெகனின் சித்திரத்துக்கு......
    இச் சித்திரத்தின் எண்ணோட்டம்.


    என்
    வாழ்வில் இரு மெய்கள் சேர..
    திரு மெய்களாக...
    என் உரிமையில்
    கருமை படர....

    காலனுக்கும்
    கணவணுக்கும்
    கடும் போட்டி
    கயிறிழுப்பதில்!

    இடையில்...
    தண்டனை எனக்கு!

    என் காயத்தில்
    கழுத்து வெறுமை பட...
    நெற்றி களையிழக்க...
    பெய்வளையின்
    கைவளை தெறிக்க...
    வெண்மையில் புதைந்து
    ஒருமையுடன்....

    என் இடையில் சுமக்கின்றேன்
    எங்கள் இல்லறத்தின் சோதியை!

    இளமையில்...
    வெறுமையும் வறுமையும்
    தனிமையும்
    பாவைக்கு!

    பழக்கப் பட்டவைகள்
    பாரமல்ல..!!!

    ReplyDelete
  17. பெண்மொழி ஒன்று உண்டு அதைக் கண்டடைந்து விட்டால் ​பெண்ணிலக்கியம் சாத்தியமாகிறது என்று கவிஞர் மீனாட்சி​சொன்னது நினைவுக்கு வருகிறது.

    அதை மெய்ப்பிப்பதாக இருக்கிறது ​ஹேமாவின் கவிதை!

    என்னால் ஓவியப்​பெண்ணின் சுமைப்பாரம் மட்டும் உணரமுடிந்தது. என் கவிதையும் அப்படியே.

    //வறுமை வயிறு காய்ந்தபோதும்
    குழந்தைகள் நடுவில்
    காமத்தால நிரப்பப்படுகின்றன என் இரவுகள்//

    என்கிற உங்களின் சிந்தனை ஆழமாக இருக்கிறது. வலித்தவர்களுக்கே காயத்தின் ஆழம் புரியும்.

    ஓவியத்தைக் கருப்பொருளாக ​கொண்டமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  18. இங்கு வந்தால் கலாவின் பின்னூட்டம் படிக்காமல் போறதில்லை.

    கலா மேடம்..
    நீங்க ​சொல்வது சரிதான்.. ​ஹேமாவின் கோபம் அதிகமாவது​போல, கவிதையின் ஆழமும் அழகும் இப்போது காட்டாறு போல இருக்கிறது.

    ReplyDelete
  19. ஒரு படத்தை வைத்து கவி எழுத உன்னிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் ஹேமு. என்ன கோபமான வரிகள். வலியும் கோபமும் நீங்கள் சொல்லும் போது அழகாகவே தெரிகின்றன. ஆனால் எப்பவும் கனத்த மனதுடன் தான் உங்கள் பதிவுகளில் இருந்து போக வேண்டுமா. கொஞ்சம் தமிழ் சினிமா போல சுபம் போட்டு முடிச்சா எப்படி. இந்தக் கவிதையில் கொஞ்சம்

    கடைசி வரிகள்
    என் வலிகளின் வலியை
    உன் வாரிசுக்காக சுமக்கின்றேன்.
    என் உடல்களின் வலியைக்
    உனக்காக ஏற்க்கின்றேன்.
    காதலின் வலியை மட்டும் தந்துவிடாதே
    என்று முடித்தால் கொஞ்சம் பரவாயில்லை காதலுக்காக சுமக்கின்றாள் என்று ஆறுதலாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  20. \\\\\\\\கலாவுக்கு
    என்ன சப்போர்ட் பண்றீகளோ..?
    எந்த ஆணைப்பற்றி இழித்து
    பேசுகிறீர்களோ அதே ஆண்வர்கத்தை
    சேர்ந்தவர்தான் தத்தம் தந்தையர்
    என்பதையும் மறந்துவிடாதீர்கள்...\\\\\\\\
    மன்னா வசந்தகுமாரா!!
    ஏன் உங்களின் நவரசங்களில் ஒரு ரசம்
    மிகவும் கொதிக்கின்றது?
    நாங்கள் {ஹேமா,கலா} இருவர் தாதியராய்
    சாமரை வீசும் போதுகூட..குப்பென்று
    வருகிறதே உங்கள் வியர்வை..!!
    யாரங்கே?மிகவும் குளிர்சியாக ஒரு குவளை
    மோர்அனுப்புங்கள் எங்கள் மன்னவருக்கு!
    மன்னா!இதை அருந்தி உங்கள் சினத்தைத்
    தணியுங்கள் நான் மீண்டும் வருகிறேன்.......

    ReplyDelete
  21. \\\\ஆண்களை அடிமைப்படுத்த்ம்
    பெண்கள் கூட்டமும் பெருகிவருகிறது
    என்பதையும் நினைவில்
    கொள்ளுங்கள்...\\\

    வசந்த் யாரு இல்லையென்று மறுத்தார்!?
    இருக்கின்றது. அதும் தெரியும்!!

    ஆனால்..ஹேமா எழுதிய கதாநாயகர்களும்
    நிறையவே உலகத்தில் உண்டு மறுக்க
    முடியாது. இல்லையென்று சொல்லுங்கள்
    பார்க்கலாம்,,,....

    உங்கள்.என்,ஹேமாவின் தந்தையர்கள்
    மிகமிக நல்லவர்கள்தான்! ஹேமா சாடியது
    அவர்களைப் போன்றவர்களையல்ல,..

    பெண்ணை,பெண்மையை மற்றும்
    அவளின் விருப்பு,வெறுப்புகளை உணராத
    ஒரு ஐடத்தை!! மனிதம் நிறைந்தவரையல்ல

    உலகில் நடந்து கொண்டிருப்பவைகளைத்தான்
    கரு எடுத்து களைசேர்த்து கவியமைப்பது.
    அவர் அப்படிச் சாடியது தப்பல்ல..

    அப்படியானவர்களும் இவ்வுலகில் இன்னும்
    இருக்கின்றார்கள்.{அதற்காக ஒட்டு மொத்த ஆண்களும்
    என்று அவர் கூறவில்லையே!!}

    நீங்களும் ஒரு பெண்ணை நினைத்து
    கவிதை வடித்து உங்கள் தளத்தில்
    தவழவிடுங்கள் அதற்கும் நான் பின்னோட்டம்
    இடுவேன்{அதைப் பொறுத்து}

    மீண்டும்,மீண்டும் படித்துப் பாருங்கள் அக்கவியை
    நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் உண்மையை
    அப்பட்டமாய் சொல்கிறது அழகு வரிகள்.

    ReplyDelete
  22. கவிதை அருமை.

    //மற்றபடி கவிதையாய் மட்டும் எனக்கு பிடித்திருக்கிறது...//

    me too,..

    என்னவென்றே தெரியலை ஆண்களை ரெண்டு மூணு நாளா போட்டு கிழிகிழியென்று பல பதிவர்கள் தாக்குகிறார்கள் வசந்த். இதில் ஆண்களும் அடக்கம்.

    ReplyDelete
  23. "இனியாவது உணரட்டும்
    மனிதரா மிருங்களா நாங்கள் என்று."


    உணருவார்கள் என்று நினைக்கிர்களா ????

    சில விஷயங்களை நம்மால் மாற்ற முடியாமல் மனதிற்குள் ஒரு வித வலி வருமே ..அது நல்ல தெரியுது

    ReplyDelete
  24. //இனியாவது உணரட்டும்
    மனிதரா மிருங்களா நாங்கள் என்று.
    இல்லை அப்படியே வாழட்டும்.
    மறுத்து வாழாத ஒருத்தி
    வரும்வரை !!!//

    உங்கள் கோபம் அழகு...

    எனக்குப் பிடிச்சிருக்கு உங்கள் கோபமும், கவிதையும்...

    ReplyDelete
  25. கவிதை ரொம்ப அருமையாக இருக்கு ஹேமா.

    ReplyDelete
  26. ஜெ ஓவியத்திற்கு இதை விட பொருத்தமான கவிதை கிடைக்காது

    ஆமாம் ஐந்தறிவு எவ்வளவோ தேவலை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  27. //ஐந்தறிவு மிருகங்களால்
    ஆபத்து ஒன்றும் பெரிதாயிருக்காது.
    மனதிலும் கையிலும் யாருக்கும் உதவாத
    வெற்றுப் பாராங்கள் மட்டுமே
    எடுத்துப் போகிறேன்.//

    பொருத்தமான கவிதை..இனி மனிதனை மிருகம் என திட்டாதீர்கள். மிருகங்கள் கோபித்து கொள்ளக் கூடும்..

    ReplyDelete
  28. //வறுமை
    வயிறு காய்ந்தபோதும்
    குழந்தைகள் நடுவில்
    காமத்தால நிரப்பப்படுகின்றன என் இரவுகள்.//

    ரசிக்க மட்டும் இவ்வரிகள்.


    //மனித உருவில் மிருகங்கள் வாழும்
    குகையிலிருந்து செல்வது
    வீண் விரயமாய் இல்லை எனக்கு.//

    மனிதர்கள் என்பதும் விலங்கினத்தின் ஒரு பரிமாணம் தானே?

    மனித உருவம் = ஆண் + பெண் + திரு நங்கை.

    ஹேமா,

    இங்கே யார்மீது இத்தனைக் கோபம்?

    ReplyDelete
  29. ///இனியாவது உணரட்டும்
    மனிதரா மிருங்களா நாங்கள் என்று.
    இல்லை அப்படியே வாழட்டும்.
    மறுத்து வாழாத ஒருத்தி
    வரும்வரை !!!///

    ஓவியமும் வரியும் ஒன்றுக்கொன்று அழுகாயிருக்கு ஹேமா

    ReplyDelete
  30. தீப்பற்றி எரியும் நகரத்திலிருந்து
    விடுபடும் புழுக்கள் பூச்சிகள் போல
    இடம் நகர்ந்து
    காடோ கடலோ தேடியே போகிறேன்

    நல்ல ஒப்புமை.. ஆனால் உணர்வுள்ள ஜீவன் என்பது கவிதை வலியுடன் உணர்த்துகிறது

    ReplyDelete
  31. வெந்து தணிகிறது காடு,,,,

    ReplyDelete
  32. (`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

    Download Youtube Videos free Click here

    Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

    தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

    Type anywhere in your language Type a word in English and press SPACE to transliterate

    ReplyDelete
  33. "வெற்று பாரங்கள் மட்டுமே
    எடுத்து போகிறேன்"
    கவிதையின் அழுத்தத்திற்கு இந்த வரியே போதும்.

    ReplyDelete
  34. அருமையான கவிதை!

    ReplyDelete