ஞாபகச் சித்திரங்களை
காலக் கருடன்
மெல்ல மெல்லக் காவி
குதறித் தின்றபடி.
சின்னச் சின்னக்
கீறல்கள் கோடுகள்
இன்னும் இதயத்துள்
சன்னங்களாய்
கந்தலாகி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அழிந்தும் அழியாமலும்.
பங்கருக்குள்ளும்
விமானப் பரிசோதனைக்குள்ளும்
பாதுகாத்துக் கொண்டுவந்த
ஆறு புளியங்கொட்டையும்
ஒரு சிரட்டையும்
காதலின் நினைவோடு
கட்டிய பழைய சாமான்களோடு
தூசு படிந்த
என் மனமாய்.
அதையும் கண்டு
அடம் பிடிக்கிறாள்
என் குழந்தை
விளையாடக் கேட்டு.
இந்த நாட்டில்
புளியங்கொட்டையும்
சிரட்டையும்
புதுமையாய் அவளுக்கு.
கண்ணுக்குள் நிழல் வலிக்க
மூளை விரும்பாமலே
தலை மட்டும் விருப்பமாய்
ஆடுகிறது மெதுவாய்.
தொலைத்த காட்சிகளை
எதிர்காலச் சாட்சிகளின்
கைகளில் கொடுத்தபடி
"இஞ்சாருங்கோ"
கூப்பிட்ட குரல் கேட்டு
"என்னப்பா"
என்றபடி நான்!!!
ஹேமா(சுவிஸ்)
அழகான கவிதை ஹேமா... சிறப்பாக எழுதுகிறீர்கள்...
ReplyDeleteபுளியங்கொட்டையும் சிரட்டையும்
ReplyDeleteகுழந்தைக்குத் தெரியாத
ஞாபகச் சின்னங்கள்!
குழந்தையின் வினாவால்
தலையில் இறங்கியதோ
ஆயிரம் சம்மட்டியடி!
அருமையான ஞாபகச் சின்னங்கள் ஹேமா.
முடிந்தால் http://kalamm2.blogspot.com/2008/11/blog-post.html இச் சுட்டிக்குப் போய் வாருங்கள் ஹேமா.
இந்த கவிதை எனக்கு புரியல. ஆனால் நல்ல கவிதை என்று சொல்ல தோன்றுகிறது. நிகழ்காலமா? கடந்த காலமா?
ReplyDeleteகவிதையில் வலிகளை நன்றாக உணர்த்தி இருக்கிறீர்கள் ஹேமா...
ReplyDelete//கண்ணுக்குள் நிழல் வலிக்க//
எனக்கு ரொம்பப் பிடித்த வரி இதுதான். நிழலால் உண்டாகும் வலி...
அருமை.
விக்கி இப்போ அடிக்கடி கருத்து ரசித்துச் சொல்கிறீர்கள்.நன்றி விக்கி.
ReplyDeleteஈழவன்,சிலசமயங்களில் குழந்தைகளின் கேள்விகள் தலையில் சம்மட்டிதான்.அவர்களைச் சமாளிக்க புதிதாய் ஒரு பாடசாலைக்குப் போகவேணும்.
ReplyDeleteவாங்க ஹேமா...
ReplyDeleteசுகம்தான். தாங்கள்...?
பெற்றோர் தமிழகத்தில்.
நானிருப்பது இந்தோரில். குளிர்ப்ப்ரதேசம் இல்லையெனினும் தமிழகத்தைக் கம்ப்பேர் பண்ணுகையில் அதிகக் குளிர். சிறுபடம் வரைந்து அதனை ஸ்கேன் உடனே செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இப்போது படம் போடவில்லை. பின்னால் போட்டுவிடுகிறேன்.
கடைசிக் குறிப்பைக் கவனியாது பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டேன். பின் மீண்டும் எடுத்து விட்டேன்.
என்ன ஆச்சு ஆனந்த்.கவிதை புரியலயா?என்ன பண்ணலாம் நான்.திரும்பத் திரும்ப வாசிச்சுப் பாருங்கோ கொஞ்சம்.
ReplyDelete"கடந்தகாலப் பாதிப்பு நிகழ்காலத்தில்."
என்ன தமிழ்பறவை அண்ணா,
ReplyDeleteநீங்கள் ரசித்திருக்கிறீர்கள்.ஆனந்த் புரியவில்லை என்கிறாரே!
தொலைந்து போன நினைவுகளை மீட்க துடிக்கும் உங்களின் கவிதை அருமை ...
ReplyDeleteஉங்களின்
ReplyDeleteகொஞ்சம் வித்யாசமான ஒரு கவிதையோ என நினைக்கிறேன் .. மலரும் நினைவுகளை சொல்லி செல்லும் கவிதை ...அருமை...
அன்புடன்
விஷ்ணு