Tuesday, November 11, 2008

வானவில்...

மரத்தில்
குரங்காய் குந்தியிருந்து
வானவில் ரசிப்பு.

சிம்னி விளக்கருகே
குப்புறப் படுத்தபடி
குங்குமம் வார இதழ்.

முற்றத்து மணலில்
அம்மா கையால்
நிலாச் சோறு.

தலையில் பேன்.
காலில் சேற்றுப் புண்
தலயணைச் சண்டை.

எதிர்வீட்டு ஓரப்பார்வை.
தூவான நனையல்.
துலாக் குளியல்.
அணிலின் ஸ்பரிசம்.

ம்...அப்போ
எல்லாம்...எல்லாமே
இருந்தது.
அனுபவித்த சுகங்கள்
நினைவோடு.

இப்போ இருப்பது
பணம் மட்டுமே.
சுகங்கள்
வானவில்லாய்!!!
மழை மேகத்து வானம்.
அந்தரத்தில் தொங்கும்
மழை முகிலின்
வர்ணச் சேலை.
வானமங்கை நெற்றியில்
நிற நிறமாய் குங்குமம்.

மேக மங்கையையை
முகம் சிவக்க வைக்காமல்
தூக்கமே வராது
முத்தமிட்டுக் கொள்ளும்
இடிக்கும் மின்னலுக்கும்.

பல வர்ண மாலை கோர்த்து
மழையை வரவேற்கும்
வழக்கத்தை விடாது வானம்!!!

ஹேமா(சுவிஸ்)
கடையம் ஆனந்த் தளத்திற்காக போட்டோக் கவிதை.

23 comments:

  1. வானவில்லின் மலரும் நினைவுகள் அருமை.

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது

    ReplyDelete
  3. அருமையான கவிதை...

    ReplyDelete
  4. முதல் வானவில்லின் வரிகள் எங்கள் ஊரின் எழுதப்படாத கல் வெட்டுகள்...

    ReplyDelete
  5. \\
    எதிர்வீட்டு ஓரப்பார்வை.
    தூவான நனையல்.
    துலாக் குளியல்.
    அணிலின் ஸ்பரிசம்.
    \\

    இயல்பான யாழ்வாசம்...

    ReplyDelete
  6. \\
    சிம்னி விளக்கருகே
    குப்புறப் படுத்தபடி
    குங்குமம் வார இதழ்.
    \\

    மறக்க முடியாத நினைவுகள் சில...

    ReplyDelete
  7. உங்கள் பக்கத்தை திறக்கும் பொழுது நல்ல பாட்டொன்று கேட்டேன் இன்று
    'மதுரை மரிக்கொழுந்து வாசம்...'
    ஆரம்பகாலங்களில் காதில் விழுந்து மனதில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று...

    ReplyDelete
  8. பூகோளத்தின் பிரதிபலிப்போ
    பூத்திருக்கும்
    வர்ணக் கற்றைகள்!

    அருமை ஹேமா, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. நல்ல கவிதை ஹேமா... ஆமா ரெண்டாவது கவிதை ஆனந்த் பின்னூட்டப் பெட்டியில இருந்து எடுத்துப் போட்டிருக்கீங்களே...ராயல்டி கொடுத்திட்டீங்களா...?

    ReplyDelete
  10. துலாக்குளியல்ன்னா என்ன?

    ReplyDelete
  11. நன்றி ஆனந்த்.உங்கள் பதிவின் பின்னூட்டம் எனக்கும் பதிவாகி விட்டது.சன்லைட் தந்த உங்களுக்குத்தான் "வானவில்"
    லின் நன்றி.

    ReplyDelete
  12. நன்றி திலீபன் விக்கி.உங்கள் இருவருக்கும் பெரிய வேலை தந்திருக்கிறேன்.பத்திரிகைத் தொடர்.கவனித்தீர்களா?

    ReplyDelete
  13. தமிழன் கவிதை வரிகளை உணர்வோடு ரசித்திருக்கிறீர்கள்.நன்றி.
    யாழ்ப்பாணம்...நினைக்கவே மனம் கனத்துப் போகிறதே!

    ReplyDelete
  14. ஈழவன்,உங்கள் பார்வையில் வானவில் மிக அழகாய்.

    //பூகோளத்தின் பிரதிபலிப்போ
    பூத்திருக்கும் வர்ணக் கற்றைகள்!//

    ReplyDelete
  15. வாங்கோ தமிழ்பறவை அண்ணா.எங்க போய்ட்டீங்க.காணேல்லையே உங்களை!கவிதையின் கீழே குறிப்பிட்டு இருக்கிறேனே.ஆனந்தின் பதிவில் போட்டோவுக்காக நான் எழுதின கவிதைகள்தான் இரண்டுமே.

    துலா என்றால் கிணற்றில் தண்ணீர் அள்ள ....கிணற்றில் தண்ணிர் அள்ளிக்குளிப்பது.ஐயோ ...யாராவது தமிழ்ப்பறவை அண்ணாக்கு சரியா விளங்கப் படுத்துங்கோ!!!

    ReplyDelete
  16. அருவியில் குளிப்பதும்,காற்றில் உலர்த்துவதுமே பறவையின் செயல்...கிணற்றுக்குளியல் பத்தாது எனக்கு...
    நான் வந்துகொண்டுதான் இருக்கிறேன். ஒரு வண்ணப்படம் தீட்டிக்கொண்டிருப்பதில் நேரம் போய் விடுகிறது...

    ReplyDelete
  17. ஓ...பறவை ஒன்று ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கிறது...அடுத்த பயணத்திற்காக.

    ReplyDelete
  18. அண்மையில் யாழ்ப்பாணம், கோண்டாவில் எல்லாம் போயிருந்தேன். உங்கள் கவிதை இதை ஞாபகப்படுத்துகின்றது.

    இதைப் பாருங்கள்!
    http://gana.smugmug.com/gallery/6548277_Uk5Zg/1/416569722_Rcgxu

    ReplyDelete
  19. அன்பு ஹேமா நலமா? உங்களை நினைக்காத நாள் இல்லை. உங்கள் கவிதைகள் பல நேரங்களில் என் நினைவில் வருகிறது. உங்களை தொடர்பு கொள்ள வழி சொல்லுங்கள்.

    ReplyDelete
  20. நன்றி காரூரன்.அழகான எங்கள் யாழ் பார்த்தேன்.மனதிற்குள்ளும் எங்கள் நினைவுகளோடு எங்கள் ஊரும் இப்படித்தானே ஓடிக்கொண்டிருக்கிறது.
    இன்னும் வாருங்கள் காரூரன்.

    ReplyDelete
  21. மது வாருங்கள்.எங்கே ரொம்ப நாளா குழந்தைநிலாப் பக்கம் காணேலயே.
    சரி என்னை ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே!நன்றி மது.சந்தோஷமும் கூட.என் மின்னஞ்சல் முகவரி தருகிறேன்.
    jeenunilach@gmail.com

    ReplyDelete
  22. இரண்டு கவிதைகளுமே அருமை ஹேமா ....
    வானவில்லின் கவிதை
    மிக அழகாய் இருக்கிறது

    ...

    எதிர்வீட்டு ஓரப்பார்வை.
    தூவான நனையல்.
    துலாக் குளியல்.
    அணிலின் ஸ்பரிசம்....

    இந்த வரிகள் மனதை கொள்ளைகொண்டது ....

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  23. நன்றி விஷ்ணு,நாங்கள் அனுபவித்த சுகங்கள் அல்லவா இவைகள் எல்லாம்.இனி...எப்போ?

    ReplyDelete