Tuesday, April 15, 2008

அவ(ன்)(ள்)...

தாளம் தவறிய பாடல்.
தனித்துவிட்ட தீவு.
பிறப்பின் பலன்...
அதிஸ்டம்...பெருமை
இறைவன் ஆயுள் முழுதுக்குமே
தந்த தண்டனை...பரிசு.
குமுறும் கொந்தளிப்பைக் கொட்டியழக் கூட
கை கொட்டிச் சிரிக்கும் சமூகம்.
பார்ப்பவர் புறக்கணிக்க
பருவம் பின்வாங்க
சொல்ல முடியா சோகம்.
பிறப்பில் குறை வைத்தான் பிரம்மன். குற்றம் எனதில்லை.
உரக்கக் கூறியும் புரிவார் யாரும் இல்லை.
என்னை நொந்து...
இறைவனை நொந்து...
பெற்றவரை நொந்து...
எத்தனை இரவுகள் விடியாமலேயே.
உடலை விற்றால்,உடல் குறைந்தால்
உதவும் உலகம்
எட்டியே உதைக்கிறது.
உடம்பால் ஆணாகி
உணர்வால் பெண்ணாய் நான்.
உடம்புக்கும் ஆன்மாவுக்கும்
சம்பந்தமே இல்லாமல்
அருவருப்பாய்.
பராக்குப் பார்த்தான் பிரம்மன்
அரைகுறையாய் ஓரமாய் நான்.
பெற்றவரே பிரித்து ஒதுக்க
வரமா வேண்டி வந்தேன்.
பிறத்தலில் தெரியாத குறை
பருவம் வளர...புரிய வர
பகிர முடியா பரிதவிப்பாய்.
தாயிடமா...அயலிடமா...ஆசிரியரிடமா???
பார்வைகள் அசிங்கமாய்
வரிசையாய் பட்டப் பெயர்கள்.
பிறப்பின் உரிமையோடு
சேர்ந்து வாழ சிறகுகள் இல்லை.
இயல்பு மாற பள்ளியில் கேலி.
அள்ளி அணைத்த அன்னை,
கூடப்பிறந்தவர்,கூடிய நண்பர்களும்
வெறுத்து அடித்துக் கலைக்க,
பட்டத்து நூலாய் ஆதாரம் அறுந்ததாய்
அடுத்த பட்டம் அநாதை.
பிச்சை பசிக்கு...
கை நீட்டக் கூசினாலும் பத்தும் பறக்க
பத்தே நாளில் பழகிய ஒன்றாய்.
என்றாலும் இரங்கும் மனம் குறைவாய்
இல்லை...இல்லாமலே.
குள்ளம் போல்...கோணல் போல்
குறைதானே இதுவும் கூட.
பெற்றவர் பொறுத்து ஆதரிக்க
சுதாகரிக்கும் சுற்றமும் சூழலும்.
வாழ்வே சூன்யமாய்.
ஆண் பாதி...பெண் பாதியாய்.
காற்றும்...கடலும்,
வானும்...மண்ணும்,பூவும்...மரமும்
புண்ணாண என் மனதை அனுசரிக்க,
அர்த்தநாரீஸ்வரர் என்று
இறைவனைப் போற்றும்
உலகம் மட்டும்...என்னை ஏன் !!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

  1. அர்த்தநாரீஸ்வரர் எனக்கொண்டாடும் மக்கள்தான் இந்த மக்களையும் புறக்கணிக்கிறார்கள். அழகான கவிதை.

    ReplyDelete