Friday, February 27, 2015

மாசி மழை...

எங்கும் பனி
பூவாய் உதிர
மெல்லிய
மழைச் சத்தம் தவிர
மௌனம் மட்டும்.

மெல்ல முணகித் திரும்பும் தார்ச்சாலை
பூக்கடை வாசலில் நம்மூர் மல்லி வாசனை
வேகமற்ற ஊர்திகள்
மழைக்கம்பிகளுக்கு அஞ்சும் மனிதர்கள்
சத்தமில்லா வாகனத்தில் சவ ஊர்வலம்.

அடர்ப்பச்சையிட்டு
காட்டின் அடர்த்தியோடு
வேரை இறுக்கியிருந்த
அச்சுவரை விட்டு
கிளை விட்டு
பிடி விட்டு
விழுந்த ஓரிலையோடு
பனியும் மழையும் கலந்த
இம்மாலை.

கிளைக்கும் காம்புக்குமிடையில்
தொங்கும் பிரியமென
நீ...நான்...அவ்விலை.

மழைச் சத்தம் தவிர
மௌனம் மட்டும்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

1 comment:

  1. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete