Friday, December 19, 2014

பொம்மைகளற்ற பூமி...

போர்களின் துவம்சம்
முடியவில்லை
மண்புயலில் அமிழும்
கைக்குழந்தைகளோடு.

வேகத் தெருக்களில்
கையசைக்கும் சாத்தானை
வறுமையை
காற்றை
மழையை
எதிர்ப்படும் கடவுளை
அறியப் பிரியப்படவில்லை.

மனம் மரத்தாயிற்று
எப்போதோ.

அழுகுரல்களும்
இரத்தப் பிசுபிசுப்பும்
இன்னும் பிற ஞாபகமூட்டும்
வாசனைகளும் நாற்றங்களும்
நாசியோடு நின்றாயிற்று.

நாட்குறிப்புகளின்
விளிம்புகளிலும்
எச்சங்களின் சேடம்.

ஒரு வேளை
போரினால் இறந்த
குழந்தையொன்றறியலாம்
பாவமும் தர்மமும்
அதன் கொள்கையும்
மதம் சாரா
புதுக் கடவுளின் வருகையையும்.

போர்களும்
மதவெறித் துவேசங்களும்
கொன்றுவிட்டே செல்கின்றன
குழந்தைகளை.

எதற்கும் அசைவதில்லை
இப்போதெல்லாம் நான்
சத்தமிட்டுக் கூக்குரலிடுகிறது
தெருமுனை விலங்கொன்று!!!

 குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

2 comments:

  1. இறந்த குழந்தை அறியலாம்தான். அழகான கவிதை ஹேமா..

    ReplyDelete
  2. பொம்மைகளற்ற பூமி...
    வலியை விளைவிக்கிறது....

    ReplyDelete