Monday, December 01, 2014

சரி...

தவறுக்குள்ளும்
சரி பொருந்தியிருக்கிறது.

வாழ்வியலோடு
வளைந்தும் சரிந்தும் எழுபவர்கள் நீங்கள்
எப்போதும் சரியைச் சரியென
ஒத்துக்கொள்ளப்போவதில்லை.

மொழியற்று முடங்கிய மனம்
நிலையற்று ஒழுங்கற்றுப் பறப்பதையும்
ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எனக்குப் பிடிக்கிறது அந்தச் சரியை.

தோள்தட்டி முத்தமிட்டு
அணைத்துக்கொள்கிறேன்
சரியென்பார் யாருமின்றி
என்னை நானே.

மறைவாய் ஒரு சரி இருப்பதை
ஒருக்காலும் உணர்ந்து சரியென்று
முகம் மலர்பவரல்ல நீங்கள்.

உங்களுகென
ஒரு சரியை வைத்துக்கொண்டு
போராடுகிறீர்கள்.

சிவப்பு மதுபற்றி சுவையறியா
உங்களுக்கு அது சரியல்ல.

நானோ அருந்தி அருந்தி அருந்தி அருந்தி
ஆனால் நீங்களோ
குடித்துக் குடித்துக் குடித்தென்பீர்கள்.

என்னைச் சரியென முத்தமிடுகிறது மது
ஆகச்சிறந்த சரியை போதை என்கிறீர்கள்.

சரியான சரியே என்னை
சரியாமல் வைத்திருக்கிறது.

சரியே
உன்னை மிகவும் பிடித்திருக்கிறது
எனக்கு.

விடு...விடு...சரி...சரி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

4 comments:

  1. அவன் மிகவும் நல்லவன்
    எப்படி சொல்கிறாய்..?
    நான் எது சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் "சரி..சரி" என்கிறான்
    அப்படியா?
    ஆம்..நீ என்ன சொல்கிறாய்?
    ம்..நீ சொன்னால் சரி...சரியாகத்தான் இருக்கும்..ஆமாம்..நான் எப்படி...
    நான் சொன்னவுடன் நீ 'சரி" என்றதால்..சரியானவனா எனக்குச் சந்தேகம் வருகிறது.
    நீ தவறாக எண்ணுகிறாய்..
    அப்படியா? அப்படியாயின் நீ சரியானவன் அல்ல..
    "சரி: போதும்

    ReplyDelete
  2. ஓ.. அப்போ சரி.
    சரியென நினைத்தால் சரி சரிதான். தவறை சரியென நினைத்தால் தவறுதான். சரியை தவறென நினைத்தாலும் தவறுதான். ஆக.. சரியை சரியென நினைத்தால் மட்டுமே சரி. ஹேமா கல்லை எடுத்து அடிக்கும் முன்பு எல்லோரும் ஓடிருங்க..

    ReplyDelete
  3. ராதா ஐயா ,விச்சு.... அட்டகாசம் !

    ReplyDelete
  4. சிவப்பு மதுவின் சுவையை அருந்துவதற்கும் குடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை சரியாகவே உரைத்துள்ளீர்கள். அதன் சுவையை அருந்தி உணரவேண்டும்..போதையோடோ அல்லது போதையில்லாமலோ..
    சரியே
    உன்னை மிகவும் பிடித்திருக்கிறது
    எனக்கும்..

    ReplyDelete