Tuesday, September 16, 2014

அலை கக்கிய நிலா...

ஆதியிருப்புத் துளிகளை
அளாவி
அள்ளி வந்திருக்கிறது
இத்தாலியக் கடலுக்குள்
குழந்தைநிலா.

ஆக்கையழுந்த
ஆயிரம் விண்மீன்கள்
கண்களுக்குள் மின்ன
சுனாமி விழுங்கிய
சொச்சமாய்
என்னையும் விழுங்க
பெருங்குரலெடுத்து
மாரடித்தழுதது அலை.

முன்னெப்போதும் பார்த்திரா
வெள்ளைக்குதிரைப் பயணம்
கொங்காணிபோலொரு
கொம்போடு
புழுதி பறக்க..

ஆகரச் சுரங்கம்
நீர் வற்றிய தடாகம்
ஹா ஹா
என்றொரு கந்தருவன்
ஆகாசத்தாமரை
விதமான
செவ்வண்ணத்தில்
செம்பருத்தி
ஆக்கியோனின்
அழகிய கம்பீரக் கிரீடம்
என்காடு
அதில் தாவும்
தத்தம்மாக்கள்
தங்கவால் குரங்குகள்
அடங்காப் பெருங்காமத்தில்
கருகிய இரு வெண்புறா இறகுகள்.

இத்யாதி இத்யாதி....

வேகம்
சூடு பறக்கும் அதிவேகம்
காற்றேயில்லா
பூமி கிழித்து
மிதப்பதாயும்
நடப்பதாயும்
ஒரு வித்தை.

உயர்ந்த
கையுரசிய தூரத்தில்
ஆஸ்திரிய மலைகள்
கடந்துதான் வந்தேன்
அவைகளைக்
கேயிலேந்தும்
பலமெனக்கிப்போ.

ஜேர்மனிய
நிர்வாண மலைகளுக்கு
முடிந்தமட்டும் நீர்பீச்சும்
அலையுயர்த்திய வானத்தில்
மூழ்கிக்கிடக்கிறேன்.

கையேந்தி நிமிர்த்துகிறது
என் கால்களை
இரு கைகள்
சிருட்டித்த அத்தனையும்
அழித்ததாய் திட்டினேன்
நாசிக்குள் நிரவிய
உப்புக் கைக்க.

சாதிக்க ஏதுமில்லை
சாவதற்குப் பயமுமில்ல
ஆனாலும்
உயிர் போகும் தருவாயில்
வாழத்தான் பிடிக்கிறதோ ?

இல்லையென்றால்
உந்தி மூழ்கி
சிரசு சிலிர்ப்பும்
ஒவ்வொரு தரமும்
'பிடி....பிடி'
என்கிற சொல்மட்டும்
வந்தது ஏன்
என் வாயில் ?!!!


குழந்தைநிலா ஹேமா ! 05.09.2014

5 comments:

  1. கொஞ்சும் அழகுடன் நெஞ்சை அள்ளும்
    காட்சிகள் மனம் நிறைக்கின்றன...

    ReplyDelete
  2. கவிதையும் அழகு

    ReplyDelete
  3. பிடி பிடி நுரையின் துரத்தல் அருமையான கவிபாடல் கவிதாயினி. இத்தாலியும் பார்த்தாச்சு போல!

    ReplyDelete
  4. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கவிதை அருமை சகோதரி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete