Tuesday, May 20, 2014

பூக்களைக் கிள்ளாதீர்...


நிலைப்பாட்டைக் குறிக்கும்
பிரார்த்தனைகள்
நிறைவாகவே என்னிடம்.

அன்பைத் தவிர
இல்லையென்று ஏதுமில்லை
கையேந்தலும்
இறைஞ்சுதலும்
கெஞ்சுதலும் 
நினைவில்லை இதுவரை.

எத்தனை தரம்தான்
துரத்தமுடிகிறது
அவர்களால்
வாலை ஒட்ட
வெட்டிவிடுங்களேன் எனக்கு
நாயென நான் ஆட்டாமலிருக்க.

இயற்கை அசைவில்
அன்பின் அழைப்பு
கை கோர்த்தலில்
இளஞ்சூட்டின் பரவசம்
நாடியோடும் குருதியில்
குமிழுடைத்த நர்த்தனங்கள்
மார்தழுவலில் தேவரகசியம்.

மரத்தைக் காதலித்து
செடிகளுக்கு நீரூற்ற
சிலிர்க்கிறது பூக்களாய்.
மென்னீரத்தின்
நிர்ச்சலனத்தோடு.

கொய்தழிக்காமல்
வாடமுன்
காண்பிக்கிறேன்
என்னை நேசிப்பவர்கள்
யாராவது இருந்தால்!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

  1. வார்த்தைகளில் வர்ணஜாலம்.

    ReplyDelete