Wednesday, February 12, 2014

அவனுக்கான சிறுகுறிப்பு...

எவரெவரோ இருந்து
சுயம் நனைத்த
தெருநாற்காலியொன்றில்
இன்று நான்.

சிறுபிள்ளைக் காதலென்று
மறந்த குறிப்பின்
இருப்பொன்றை
உணர்கிறது மனது.

நீ இன்று
இறந்த செய்தி கேட்டபிறகு
யாருமறியா
தெருக்கதிரையில் தெளிக்கிறேன்
என் சிறு கூச்சலை. 

எத்தனை இரகசியங்களை
உயிர்ப்புக்களை
ரசித்தும் ரட்சித்தும்
உள் வைத்த குறிப்புக்கள்
கைப்பிடியிலும் முதுகிலும்
தாங்கிக்கொண்டு இக்கதிரை.

’நிறையப் பேசக் கிடக்கடி உன்னட்ட’

காலம் கடந்த சந்திப்பில்
ஒரு நாள்
ஒரு நிமிடச் சந்திப்பில்
இதே நாற்காலியில்.

என்னதான் இருந்திருக்கும்
உன் அடிமனதில்...

என் கைதொட்டு
விட்டதற்கான காரணமா
அதற்கான மன்னிப்பா ?!

இல்லை....
உறவுகள் விரும்பா
உக்கிய
காதல் கயிற்றின்
கதை சொல்லவா ?!

தனித்தவிழ்த்த நினைவுகளை
தாங்கிய நாற்காலி
தர மறுக்கிறது
உன்....
ஆழ்மனக் கிடக்கையை.

என்னதான்
சொல்ல நினைத்திருப்பாய்
சொல்லுமா இந்த நாற்காலி
நான்.....
இறப்பதற்குள்!!!

அவனுக்கான நினைவஞ்சலியுடன் .....ஹேமா(சுவிஸ்)

8 comments:

  1. நினைவஞ்சலி கலங்க வைத்தது...

    ReplyDelete
  2. அவன் சொல்ல மறந்த, இவள் கேட்க மறந்த அந்த விஷயம் முள் உறுத்தலாய் இருக்கும்தான்.

    ReplyDelete
  3. கலங்க வைக்கும் கவிதை நினைவஞ்சலி...
    அருமை...

    ReplyDelete
  4. இதய அஞ்சலி.

    ReplyDelete
  5. சகோதரி, கனமான கவிதை.

    ReplyDelete
  6. @ஹேமா, இப்போது சில காலமாய் பெல்ஜியத்தில் உள்ளேன்.
    பனி நிமித்தமாய். இயன்றால் தங்களை சந்திக்க விருப்பம்.

    ReplyDelete
  7. மகிழ்ச்சி கார்த்தி.போனவாரம்தான் கனடாவால் வந்தேன்.மன்னிப்போடு மின்னஞ்சலைக் கவனித்துப் பின் தவறிவிட்டேன்.ஓய்வு குறைவுதான்.முடிந்தால் சந்திக்கலாம் !

    ReplyDelete