Wednesday, November 27, 2013

தொலைந்த பின்னும்...


சேடமிழுத்த
செவ்வரிப் பாம்புக்கு
இலையுதிர் காலத்து
பால் வார்ப்பு...

கிளறிய சோற்றில்
திரண்ட
வைக்கோல் குதிர்...

கரித்தட நீர் உறிஞ்சி
கைக்குழந்தை
பசி விரட்டி
உப்பிய வயிற்றில்
மொழி முத்தம்...

பிணங்கள் தாண்டி
இறந்த கடவுள்களை 
விரல் எண்ணிய
அசாதாரண மனிதர்கள்...

பாதுகாப்பை
பதுங்கு குழிகளில்
படுக்கவைத்து
நிலவேர் துருத்தும்
அரவமெனப் பின்னி இறுகி...

நுண்ணிய இசை மறந்து
அதிரும் போரில்
நினைவு தப்பி
நுடங்கி வளைந்து
செவி பொத்திய வான்பூதம்...

அடகிட்ட ரசனை
நீர்கடுக்க
விழுங்கிய எச்சிலோடு
மூத்திர இருள் கௌவ...

சுமத்தலை விரும்பி
உணர்வில்லா
பல்லக்கு மனிதர்களை
உறவாக்கி ஆயுள் கூட்டி...

பல்லியக் கோடாய்
சொல்லில் புகா வார்த்தை
கதைகளுக்குள்
இரத்த மண்மேட்டுத் துயரம்...

அகதிச் சமையலில்
உப்புறிஞ்சிய மேகம்
ஈழத்து இசையென
பொழியும்
மரண ஓலம்...

சாரளமில்லா வீடுகளில்
அகதியாகா
நம்பிக்கைக் கம்பிகள்
அடித்தள
அடுக்கு மணலில்
கறளில்லா மனிதர்களாய்!!


நமக்காய் உயிருதிர்த்த அத்தனை மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும்,எல்லா உயிர்களுக்கும் என் தலை சாய்ந்த வீரவணக்கம் !

ஹேமா(சுவிஸ்)

5 comments:

  1. அருமை...

    மாவீரர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வலி சொல்லும் கவிதை....
    வீர வணக்கம்.

    ReplyDelete
  3. என் காலம் தாழ்ந்த வணக்கங்களும்!

    ReplyDelete
  4. சோக கீதம் வீரப்பாடலாய் மாறட்டும்....!


    நல்லாருக்கிங்களா ஹேமா?

    ReplyDelete