Saturday, October 19, 2013

மாத்திரைச் சொற்கள்...


தப்பிப்பிழைத்தல்
என் வாழ்க்கையில்
பலமுறை
உங்களைப்போல்.

சிரித்தது கொஞ்சம்தான்
கடத்தலும் காவுதலும்
இழப்பும் இல்லாமையும்
அழுகையும்தான் அதிகம்.

காலத்தினிடை
காதலும் கற்றுமறந்தேன்
வயதும் வர
வழுக்கி நகரும் கூழாங்கல்லாய்
பல காதலைக் கடந்தோடியது மனது.

நானும் மனுஷிதானே....

மறத்தல்......
எனக்கு மட்டும் வரமா என்ன
பார்த்த சில முகங்களும்
பழகும் தமிழும்
மறக்கவிடவில்லை
சிறகு தந்தவனை.

இன்று.....
தெருவில் ஒரு முகம்
எனக்குத் தெரிந்ததாய்
திக்கிய வாய் அசைத்து
நீ....ங்க......ள்.

அடையாளமற்றுப் போனேனோ
ஒருவேளை.....

நிராகரிப்பின் அமிலத்தை
அள்ளி வீசியது
வார்த்தைகளால் அது.

மெல்லக் கொல்லும்
ஒவ்வொரு சொற்களையும்
மாத்திரையாக்கி
மெல்ல மெல்ல
இறப்பதே மேல்.

கனக்கிறது மனசு.....

மனமுருட்டும் மல உருண்டை
உணர்வற்ற மனதில்
இதுவரை நாற்றமில்லாமல்.

இப்படியே....
உணர்வுக்குள் தப்பித்தலும்
உணர்வற்று நாறுதலும்
எதுவரை.

அமிலச் சொற்கள்
தந்தவனுக்கொரு நன்றி
மீண்டும்
சந்திப்பதின் விபரமிருக்கிறது
என் இடக்கை ரேகையில்!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

  1. நாம் அறிந்த ஒருவர் நம்மை மறந்து போவதை காணுதல் நமக்கு வலியே! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  2. கவிதையின் கருவும்
    வார்த்தைப் பிரயோகங்களும்
    பிரமிக்கச் செய்து போகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வரிகள் - கனக்கிறது மனசு... வேறு எதுவும் சொல்வதற்கில்லை...

    ReplyDelete
  4. நீ...ங்...க..ள்...///என்ன செய்ய?இப்படியும் இருக்கிறார்கள்.பிறந்த வீட்டில் அல்ல,வாடகை வீட்டில் அல்லவோ இருக்கிறோம்?

    ReplyDelete
  5. வணக்கம்
    கவிதையின் வரிகளை படிக்கும் போது மனதை ஒருகனம் பதற வைத்தது. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. மெல்லக்கொல்லும்
    ஒவ்வொரு சொற்களையும்
    மாத்திரையாக்கி
    மெல்ல இறப்பதே மேல்.

    கனக்கிறது மனசு.....

    கவிதை மனசுக்குள் ரணமாய் இறங்குகிறது...

    ReplyDelete
  7. மனக் கசப்பையும் மீறி
    வார்த்தைகளில் தெரிகிறது
    நம்பிக்கையும் உறுதியும்...

    ReplyDelete
  8. நிராகரிப்பின் வலியை இதைவிடவும் வீரியமாய்ச்சொல்ல வார்த்தைகள் உள்ளனவா தெரியவில்லை, ஹேமா. மனமுருட்டும் மல உருண்டையாய் அலைக்கழிக்கும் நினைவுகளோடு அல்லாடும் வாழ்க்கை... அதிலிருக்கும் நெஞ்சுரம்.. அசந்துபோகிறேன். நல்வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  9. ஹேமா....பல நாட்களுக்குப் பிறகு வந்தேன்..
    வழக்கம்போல் மனம் கனக்கிறது உங்கள் கவிதையை படித்ததும்...
    நன்றி...

    ReplyDelete