(கணவன் மனைவி பேசிக்கொள்கிறார்கள்.)
மனைவி....
சின்னவனுக்கு கால்சிரங்கு
மூத்தவளுக்கு மூண்டு மாசம்
முக்கி முன்னால மூண்டடி(மூன்றடி)போனால்
பின்னுக்குத்தள்ள முப்பது
(கஸ்டங்கள்)ஆக்கினையள்.
பெரியவனுக்கு முத்தம்மை போட்டிருக்கேக்க
நேத்தி (நேர்த்தி) வச்சன்
நூற்றெட்டு வடை சுடவெண்டு
மூண்டு கழுதை வயசுமாச்சு அவனுக்கு.
நாசமாப்போன மனுசன்
நாலு காசு தரேக்கையே கிள்ளுக்கீரை வாழ்க்கை
இந்த கிளிசலில
காலையுமெல்லோ உடைச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கு
கொள்ளி வைக்கவெண்டே என்ர தலையில கட்டினவை
சொல்லாமக் கொள்ளாம கொல்லையால(பின்பக்கத்தால்)போட்டினம்.
கணவன்...
ஏனப்பா சும்மா கிடக்கிற முந்தானையை உதறி
முள்ளுக்கு மாட்டுற
விளங்கித்தான் கதைக்கிறியோ
கழுத அலுவலைப் பார்
(அலுவல் =வேலை)
குந்தும் தேயுது நீ குந்திக் குந்தி.
கிடவடி முணகாமலுக்கு
(கிட= பேசாமலிரு)
கேட்டனானே கொப்பனிட்ட
(கொப்பன் =அப்பா)
நீ வேணுமெண்டு
துலாவடியில முழுசி முழுசி
முழங்கால்ச் சீலை தூக்கி
காலில உழக்கின கோழிப்பீ கழுவேக்க
‘நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ
இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ...’வெண்டு பாடி
என்னைக் கோழிபோலக் கவுத்துப்போட்டு
போடி....போடி செல்லக்கிழவி.
புலம்பாத செல்லம் என்ர பூஞ்சக் கண்ணி
கனவில வந்தவ முடக்கொழுங்கை அம்மாளாச்சி
அள்ளித் தருவா பாரன் பிச்சுக்கொண்டு கூரையை.
செத்தே போனன் நான் சிங்கமெல்லோ
சினக்காமல் கொண்டு வா பீடியொண்டு
இஞ்சாரப்பா செல்லமெல்லே
தேத்தண்ணி ஒண்டும் சீனி போடாமல்
அப்பிடியே ஓலைப்பாயும்.
மனைவி...
இஞ்சாருங்கோ.......பேச்சு வாங்காதேங்கோ
கல்லாக்கிடக்கிற கண்டறியாச் சாமிக்கொரு
நம்பாமல் வச்சிட்டன் நேத்தியை
உவன் மூக்குப்பொடியன் அப்பவே சொன்னவன்
நம்பாதை உந்தச் சாமியை
நாக்குழிப்புழுப்போல கண்கெட்ட கடவுளிது
கண்ட பக்கமெல்லாம் திரும்பிக்கொள்ளுமெண்டு’.
ஒண்டு சொல்லட்டே......
இப்பவும் விட்டுப்போடுவன்
உந்தக் கடன்வழி நேத்தியை பயமாக் கிடக்கு
பூச்சாண்டிச் சாமி
பூண்டோட கிடங்குங்க வச்சிடுமோவெண்டு.
கணவன்...
பாராப்பா கரப்படியில ஆரெண்டு
(கரப்பு= கோழிக்கூடை)
அங்காரப்பா.....பாரப்பா விழுந்து கிடக்கிறார் கடவுள்
அடக்கடவுளே.....
கூப்பிடு பெடியளைத் தூக்கிவிட.....
மனைவி...
இப்பிடி ஆரப்பா தீனி தீத்தி (ஊட்டி) விட்டவை இந்தாளுக்கு
குண்டப்பர் ஆயிட்டார் நாங்கள்தான் மெலிஞ்சுபோனம்.
கணவன்...
இஞ்சவிடு ஒருக்கா.......அந்தச் சால்வையெடு
அந்தாளிட்ட நாலு கேள்வி கேட்டுப்போட்டுத்தான்
தூக்கிவிடுறது இண்டைக்கு.
கல்லாய் நிண்ட கடவுள்
ஷெல் அடிச்சு
செத்துப்போச்செண்டு நினைச்சிருந்தன்
சாதி சனத்தோட சண்டையில போகாம
மிஞ்சிக்கிடறமெண்டு
இஞ்சயென்ன விடுப்புப் பாத்திட்டு
பாடையில கொண்டுபோகவே வந்தது பாவிச்சாமி.
நீ நல்லாயிருப்பியோ சாமி
நாசமாய் போக நீ
நாலு வீடுபோய் நாப்பது வேலை செய்து நான்
குடிச்ச கஞ்சி பொறுக்காமல்
போரெண்டு நடத்தி வச்சாய்
அறுந்த அரசியலும் ஆர்ப்பாட்டமும்
ஆர் கண்டா என்ர படிப்பில.
கொடுப்புக்க போயிலை புதைச்சுக்கொக்கொண்டு
பொன்னம்பல வாத்தி சொன்ன
பொன்னார்மேனியனே பாடாமாக்காம விட்டதால
பள்ளிக்கூடம் போச்செனக்கு.
அப்பாச்சிக்குக் கொள்ளி வைக்கப் பேரன் வேணுமெண்டு
இயக்கத்துக்கும் போகாம வயலுக்கு இறங்கினன்
அங்கதானே பெரிசா பிழைவிட்டன்.
மயக்கவெண்டே வந்தவள் மண்வெட்டியோட
அப்ப வெட்டிச் சரிச்சவள்தான் உவள்
இப்பவும் எழும்ப விடுறாளில்ல
என்ர காவோலை வாய்க்காரி.
வட்டிக்கெடுத்தன் காசு மலைநாட்டுப்பக்கம் போய்
போயிலை வியாபாரம் செய்யலாமெண்டு
உவள் (அவள்)பாவி மேய்ஞ்சிட்டாள்
அதில கொஞ்சம் களவெடுத்து கூரையையும்
குண்டுபோட்டுப் பிய்ச்சிட்டான்கள் அதையும்
குறுக்கால போனவங்கள்.
தப்பினம் பிழைச்சமெண்டு
தாவடி,புன்னாலை கொடிகாமமெண்டு
குண்டடிக்க அடிக்க கட்டின துணியோட
புதைஞ்சவைக்கும் எரிஞ்சவைக்கும்
ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டும் விட்டுப்போட்டு.....
ஒற்றைக் கவளைச் சோத்துக்கு
ஒருநாள் முழுக்க வெயில் முழுகித்(அலைச்சல்)திரியிறன் நான்
அப்பவெல்லாம் காவந்து பண்ணேலாத பரதேசிச்சாமி
ஏன் இப்ப என்ர முத்தத்தில(வீட்டு வாசல்)விழுந்துகிடக்கு.
மனைவி...
நீ பறையமாட்டாய் (பேசமாட்டாய்)
மெய்யாலும் (உண்மையாக)
வாய்க்குள்ள கொழுக்கட்டையோ
நல்ல பேய்க்காய் (நல்ல கெட்டிக்காரன்) நீ
எல்லாரையும் பேய்க்காட்டி (ஏமாத்தி)
நீயும்தானே பேயாய்த் திரியிற
நீ கண்கெட்டு நிண்டதால
உன்னைக் கலைச்சுப்போட்டு
புத்தரெல்லோ
குந்திக்கொண்டார் உன்ர கோயிலுக்க.
நல்ல பம்பல்தான் இது
(பம்பல் = சந்தோஷம்,வேடிக்கை)
கையைக் காலை முறிஞ்சுக்கொண்டு
என்ர வீட்டு வாசலில பிரண்டுபோகாம
கெதியா (சீக்கிரமா)ஒருகை குடப்பா தூக்கிகொண்டுபோய்
வைரவரின்ர வாசலில இருத்திவிடுவம்.
கட்டையில போற கடவுள்
எக்கேடும் கெட்டுத் துலையட்டும்
எங்களைக் காக்காத கடவுள்
தன்னையாச்சும் காபந்து பண்ணுதோ
(காப்பாற்றிக் கொள்ளுதோ) பாப்பம்!!!
ஹேமா(சுவிஸ்)
எழுத்துக்கள்தௌிவாகஇல்லையே
ReplyDeleteநீண்ட பதிவு...
ReplyDeleteமொழி நடை அருமை...
வட்டார வழக்கில் கலக்கிட்டீங்க...
பிரமாதம். பிரமாதம்.
ReplyDeleteபுதுப் பரிமாணம் பிரமாதமாக இருக்கிறது.
வித்தியாசமான வார்த்தைகளை போட்டு எழுதி இருக்கிறீர்கள். அப்பாதுரை சொன்னது போல புதிய கோணம்தான்
ReplyDeleteநீ பறையமாட்டாய் (பேசமாட்டாய்)
மெய்யாலும் (உண்மையாக)
//வாய்க்குள்ள கொழுக்கட்டையோ
நல்ல பேய்க்காய் (நல்ல கெட்டிக்காரன்) நீ
எல்லாரையும் பேய்க்காட்டி (ஏமாத்தி)
நீயும்தானே பேயாய்த் திரியிற
நீ கண்கெட்டு நிண்டதால
உன்னைக் கலைச்சுப்போட்டு
புத்தரெல்லோ
குந்திக்கொண்டார் உன்ர கோயிலுக்க.//
இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா?
அருமை.. அருமை ஹேம்ஸ்.
ReplyDeleteசற்றே நீளம். ஆனால் புதிய அவதாரம்! வட்டார வழக்குகளுக்கு ஆங்காங்கே அர்த்தங்களையும் கொடுத்திருப்பது சிறப்பு.
ReplyDeleteஇந்த ஈழத்து வார்த்தைகளின் வசீகர வரிகளின் மேல் பயணம் செய்கையில்., அனுபவித்த அன்றாட வாழ்வின் பாதச் சுவடுகளில் மீண்டுமொரு முறை வாழ்ந்து பார்க்கிற சுகம் கிடைக்கிறது. கடவுள்களும் கைவிட்ட தீரா வலியின் பெருங் கோபத்தை அன்றாட வாழ்வியலில் ஈழத்தமிழர் இன்று உச்சரித்துக் கொண்டிருக்கின்றது மறுக்க முடியாத உண்மை. அந்த கசப்பான உண்மையினை கருவாக்கி உரை நடைக் கவிதையாய் ஒளிரும் இந்தப் படைப்பு அழகானது. அந்த மண்ணின் வாழ்வைப் போலவே.
ReplyDeleteசாமியும் நாசமாகட்டும்.. :)
ReplyDeleteவீணா போன சாமி... விடுங்க ஹேமா... வட்டார நடை கலக்கல்...
ReplyDelete