Wednesday, June 22, 2011

மரத்த மனிதன்...

கட்டை வண்டி
கட்டையால் காலணி
மனிதர்கள் காலமிருந்தே
நானறிவேன் உலகை
பேச வையுங்களேன் என்னை
பழங்கதைகள் சொல்வேன்.

முளை கட்டினேன்
எச்சத்தில்தான்
ஒதுங்கிய பறவைகளும்
மனிதர்களும்
எனக்குள் எண்ணில் இல்லை
இப்போ மண்ணிலும் இல்லை.

வயது ஏறி
வைரமாய் இறுகினாலும்
பயத்தால் வெறுத்து
வேர்களின் கேள்விகளும்
இறுக்கிய விழுதுகளுமாய்
வயதை எண்ணியே
நாட்கள் கழிந்தபடி.

மரத்த மனிதன்
இற்று இறந்த மனிதம்
கட்டிடக் காட்டுக்குள்ளேயே
கழிவிறக்கும் வேடுவன்
வானைத் தோண்டி
மண்ணைத் துளைத்து
மருந்தில் உயிர் வாழ்பவன்.
காற்றெங்கும் நஞ்சு
பயமாயிருக்கிறது
சுவாசிக்ககூட.

தற்காலிகமாவோ
நிரந்தரமாகவோ
என்னை நகர்த்தி
இடம் பெயரப் பார்க்கிறேன்
முடியவில்லை.

திரும்பி வரமுடியாத
பிரதேசம் ஒன்றானாலும்
நான் வாழமுடியாத தேசமாலும்
தங்கப்போகிறேன்
வரலாம் அங்கும் என்னைத் தகர்க்க.

மனிதனின் அக்கிரமத்தால்
பாரமாயிருக்கின்றன
இலைகள் கூட இப்போ!!!



ஹேமா(சுவிஸ்)

24 comments:

  1. :))))இருங்க கவிதையை படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  2. வரிக்கு வரி விமர்சிக்க ஆசை.... நேரமில்லை இப்பொழுது

    கவிதை நல்ல இருக்கு

    ReplyDelete
  3. அருமை. இயற்கைக்கு மனிதனே எதிரி.

    ReplyDelete
  4. மரத்தின் வேதனை புரிந்தாலும்,

    மரத்துப்போன மனித குலத்திற்கு உரைக்கவா போகிறது, ஹேமா.

    படைப்பாளியின் பரந்துவிரிந்த பார்வையினை உங்களது பலதரப்பட்ட கருப்பொருள் கொண்ட கவிதைகளால் புரிந்துக் கொள்ளமுடிகிறது.

    ReplyDelete
  5. காடுகளுக்கும் உள்ளது கஷ்டம் - மனிதர்களால். மனிதனின் ஆசையால் உலகமே தகர்க்கப்பட போகிறது. அருமையான கவிதை.

    ReplyDelete
  6. காலையில் குழந்தைகளுக்கு பாடம்நடத்திய விசயங்களை உங்கள் கவிதையில் ஆச்சரியத்துடன் பார்க்கின்றேன்.

    ReplyDelete
  7. மனிதன் தன் பேராசையால் எல்லாவற்றையும் சீரலிக்கின்றான் என்ன சொல்வது பலதை கடந்து வரவேண்டியுள்ளதே!

    ReplyDelete
  8. ..திரும்பி வரமுடியாத
    பிரதேசம் ஒன்றானாலும்
    நான் வாழமுடியாத தேசமாலும்
    தங்கப்போகிறேன்
    வரலாம் அங்கும் என்னைத் தகர்க்க...

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  9. மரத்த மனிதனி{ல்}ன்..
    உணர்சிகள் ஏது ஹேமா?
    நல்ல வெளிப்பாடு..மரமாய் இருக்கும்
    மனிதர்களுக்கு!!

    ReplyDelete
  10. ஆகா!விடுகதை இல்லாக் கவிதை!

    தமிழ் மரம் பேசினா இப்படித்தான் இருக்கும்:)

    ReplyDelete
  11. ////திரும்பி வரமுடியாத
    பிரதேசம் ஒன்றானாலும்
    நான் வாழமுடியாத தேசமாலும்
    தங்கப்போகிறேன்
    வரலாம் அங்கும் என்னைத் தகர்க்க.
    /// அனைத்தும் அழுத்தமான வரிகள் ....

    ReplyDelete
  12. ஹேமா!நட்சத்திர வாரத்தில் தலைப்பு இன்னொரு முறை கண்ணில் பட்டது.

    கவிதையோட தலைப்பும் இன்னொரு கதை சொல்லும் போல இருக்குதே!

    ReplyDelete
  13. பாராட்டுகள் இயற்கையாக ஒரு" பா " இயற்கையும் மனிதனும் இணையும் போதுமட்டுமே வாழ்க்கை இனிமையாகும் இன்று அந்த காடுகளையும் மரங்களையும் அழித்து அந்த இடங்களில் வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டி இயற்கையை வென்று வாழ எண்ணுகிறான் ஆனால் மனிதம் மரித்து கொண்டல்லவா செல்கிறான்.....

    ReplyDelete
  14. என்னவோ தெரியல ஹேமா, நம் இருவரின் மன உணர்வுகளும் ஒன்று போல் இருக்கிறது...பல கவிதைகளில் கண்டு உணர்ந்திருக்கிறேன்.

    உங்கள் கவி வரிகளால் மனிதனின் மர புத்திக்கு உரைக்கிற மாதிரி சொல்லிடீங்க !

    படித்து முடித்ததும் நீண்ட பெருமூச்சு வருகிறது...உண்மை உரைப்பதால்(உறைப்பதால்)

    ReplyDelete
  15. அடப்பாவமே!! இந்த மரம் இலங்கையின் அரச மரம் இல்லைப் போலும். இருந்திருந்தால் தமிழனின் இரத்தத்திலேயே முளை முதல் வேர் வரை வளர்ந்திருக்குமோ! இனி ஓர் வரமிருந்தால் மரங்கள் எல்லாம் அரச மரமாய் இலங்கையில் பிறக்கட்டும், எப்போதுமே ராணுவம் புடைசூழ!!

    ReplyDelete
  16. இயற்கையும் இயற்கையாய் வாழ தகுதியற்றி பூமி இது ஹேமா மரத்த மனிதனால்...

    ReplyDelete
  17. நாமே நமக்குப் பகை என்கிறீர்களா?

    ReplyDelete
  18. //மனிதனின் அக்கிரமத்தால்
    பாரமாயிருக்கின்றன
    இலைகள் கூட இப்போ!!!//

    பல விஷயங்களை சொல்லாமல் சொல்லுது இவ்வரிகள் (எனக்கு மட்டுமா
    இல்ல எல்லாருக்கும் அப்படியே தோணுதா ?)

    ReplyDelete
  19. மனித நடத்தையால் இயற்கையின் அழிவு சொல்லிமுடிவதில்லை....

    "காற்றெங்கும் நஞ்சு
    பயமாயிருக்கிறது
    சுவாசிக்ககூட....

    ReplyDelete
  20. அருமையான கவிதை. தலைப்பு மிகவும் பொருத்தம்.

    ReplyDelete
  21. வணக்கம் சகோதரி!

    இன்றுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பூ வருகிறேன். அருமையான கவிதையொன்றினைத் தரிசிக்க முடிந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி!

    மனிதர்களின் செயல்களுக்கு பல சமயங்களில், மரங்களே சாட்சியாக உள்ளன! அப்படிப்பட்ட ஒரு மரத்தின் கதையினை அழகுற வடித்திருக்கிறீர்கள்!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  22. மனிதனின் அக்கிரமத்தால்
    பாரமாயிருக்கின்றன
    இலைகள் கூட இப்போ!!!//

    இறுதி வரிகள்- இயற்கையினை அழிப்போருக்குச் சாட்டையடியாக வந்து விழுந்திருக்கிறது,
    ஒரு மரம் பேசினால் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துமோ, அத்தனை உணர்வுகளையும் உங்கள் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

    இயற்கை வளங்களைத் துஷ் பிரயோகம் செய்யும் மனிதர்களைச் சுட்டுவதற்குப் பொருத்தமான குறியீட்டைக் கையாண்டுள்ளீர்கள்- மரத்த மனிதன்-
    மனிதம் மரத்துப் போன தேசத்தில், மரங்களுக்கும் விடிவு கிடைக்கும் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று தானே?
    உங்கள் கவிதை.....மரத்த மனிதர்களுக்கு இயற்கையின் மகிமையினை உணர்த்தி நிற்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  23. இயற்கையின் மேன்மையை என்றைக்கு உணருவாரோ இம்மனிதர்! நல்ல கவிதை ஹேமா.

    ReplyDelete