Monday, March 14, 2011

ஆத்ம ஓலம்...

வாழ்வின்
வீர வித்தைகளின்
பெரும் பாடுகளுக்கு முன்
எங்காவது
சின்னதொரு துவாரம்
தேடியபடி நான்.

உடலைக் குறுக்கி சிறுத்து
என் முனைப்பின்
அல்லது தேடலின்
அல்லது தேவையின்
சிறகு முளைக்கையில்
வானம் வெற்றுவெளியாகி
சுயமிழந்த அகதியாய்
அலையக்கிடக்கிறது.

சொல்ல முடியா உணர்வுகள்
வர்ணம் கலைத்தெழுதும் விம்பங்கள்
புரிந்து கொள்ளா இதயங்கள்
முன்னேறமுடியா கலாசாரங்கள்
என் அறை முழுதும்
கோமாளிகளின் சாகச அற்புதங்கள்.
மின்குமிழியின் எரிச்சலில்
வாசலிலேயே கிடக்க வேண்டியதாகிறது.

என்னைப் பிய்த்தெறிந்து
எனக்குள் வாழ ஒரு ஆவி
என்னைப் பிடிக்க ஒரு ஆவி
எனக்குள் இருக்கும் நானை
இல்லாதொழிக்க ஒரு ஆத்மா.

முலை கிள்ளி எறிந்து எரித்தாலும்
இந்தச் சமூகம் எரிவதாயில்லை.
எங்காவது வீர மரபுகளோடு
ஒரு வீரன்
ஒரு தமிழன்
சுயம் உடைத்து சமூகம் எதிர்த்து
மரபுகள் தாண்டி
வந்திட்டால்....!

சிதிலமாய் உக்கிப்போன என் வாழ்வின்
வறண்ட தேசத்துள்
ஈரம் பாய்ச்சி
செத்த சிலந்திகளோடு கிடக்கும்
என்னையும் சேர்த்து அகற்ற
புனிதமாய் ஒரு மாளிகைக்குள்
உயிர்த்தெழுவேன் மீண்டும் நான்!!! (2000/05/01)

ஹேமா(சுவிஸ்)

37 comments:

  1. படிக்கும் மனங்களை கொஞ்சம் ரணப்படுத்தும் உங்கள் கவிதை..

    கவிதையின் அழகுக்கும் ஆழத்திற்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ரணங்களை கூறும் வரிகள் ...
    சில இடங்களில் மனது கனமாகிபோனது ....

    ReplyDelete
  3. \\என்னைப் பிய்த்தெறிந்து
    எனக்குள் வாழ ஒரு ஆவி
    என்னைப் பிடிக்க ஒரு ஆவி
    எனக்குள் இருக்கும் நானை
    இல்லாதொழிக்க ஒரு ஆத்மா.\\

    மிக அற்புதம்..

    பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  4. பொருத்தமான தலைப்பு..

    ReplyDelete
  5. " வானம் வெளித்த பின்னும் ' னு வலைப்பூக்கு டைட்டில் வைச்சா பின்னா சும்மாவா....?

    கவிதையின் ஆழம் உங்க வலைப்பூ தலைப்புல கொண்டு போய் என்ன சேத்துடுச்சு...! ஆத்மாவின் ஓலம்....உயிர்தெழுதழுக்காய்தனே ஹேமா!!!!!

    ReplyDelete
  6. நல்ல கவிதையைத் தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துகளும்.
    ஈழத்து கவிதை உலகம் புதிய திசையைத் தொடும் என்கிற நம்பிக்கை கவிதை வாசிக்கும் போது ஏற்படுகிறது.
    சிந்தனை தொடரட்டும்.
    நட்புடன்,
    முல்லைஅமுதன்

    ReplyDelete
  7. வலிகள் வார்த்தைகளில்..

    ReplyDelete
  8. "சிதிலமாய் உக்கிப்போன என் வாழ்வின்
    வறண்ட தேசத்துள்
    ஈரம் பாய்ச்சி "

    அற்புதம் ஹேமா...வலி என்றுமே வலி தான் நினைக்கையில் அனுபவிக்கையில்...

    ReplyDelete
  9. வலியான கவிதை! வலிமையான கவிதை!

    ReplyDelete
  10. ஈரம் பாய்ச்சும் நாளுக்காகத் தானே எல்லோர் விடியலும் காத்துக்கொண்டிருக்கிறது ஹேமா!

    ReplyDelete
  11. ஒவ்வொன்றும் அற்புதமான வரிகள் .

    ReplyDelete
  12. கவிதை வெகுவாக பாதித்தது.

    ReplyDelete
  13. மெதுவாய் மனதுக்குள் ஒட்டிக்கொள்ளும் கவிதையும் தலைப்பும்!

    ReplyDelete
  14. உயிர் உடலுக்குள் சிறைபட்டுக்கிடக்கிறது... உயிரின் விடுதலையில் உடல் பிணமாகிறது....தான் வெளியேற உயிரால் கிழிக்கப்பட்ட‌ வெற்று உடல் செல்லரித்துச் சிதைந்தும்போகிறது..... மரணம் உடலின் வீழ்ச்சியோ???.... உயிருக்குச் சுதந்திரதினமோ??? ஆனால் உடலை வெற்றிகொண்ட உயிருக்கு அவ்வுடலின் வாழ்வையும் கனவையும் தேடலையும் அழிக்க முடியவில்லை.... உடல் அழிந்தபின் உயிரோடு சேர்ந்து தானும் காற்றில் கலந்துவிட்ட அவ்வுடலின் கனவுகளும் தேடல்களும் வேகமெடுத்து அதே காற்றுவெளியில் ஒரு கட்டின்றி உயிரை விடாது துரத்தித்திரிய‌... தப்பிப் பிழைத்திட உயிரும் காற்றோடு காற்றாக‌ உலகெங்கும் தேடியலைகிறதோ, தான் அத்தனைக் காலம் பாதுகாப்பாய் பதுங்கியிருந்த, தன் உடலை... மீண்டும் சிறைப்பட்டுக்கொள்ள‌....??!!!

    ஏதேதோ பரிமாணங்களில் சிந்தனையை எங்கேயோ இழுத்துச் செல்கிறது அக்கா உங்கள் கவிதைகள்.... இந்த அனுபவம் முதன்முறை ஏற்படவில்லை அடிக்கடி இதே தளத்தில் இயற்கையாய் உணர்கிறேன்.... இதே போன்ற அனுபவத்தை உணர்ந்துவந்த, பதிவுலகின் இன்னுமொரு கவிதைத்தளமும் நினைவுக்கு வருகிறது அது "நேசமித்திரன் கவிதைகள்" ... இன்னதென்று புரிந்துகொண்டிட முடியாததொரு பிரமிப்பு அருகே நெருங்க நெருங்க அதிகரித்திடும் அனுபவத்தைக் "கடவுளு"க்கு அப்புறம் "கவிதை"களுடன்தான் உணர்கிறேன்... கவிதைகளை விரும்பிப் படிக்காத நான்.....

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. வலி நிறைந்த கவிதை.

    ReplyDelete
  17. சிதிலமாய் உக்கிப்போன என் வாழ்வின்
    வறண்ட தேசத்துள்
    ஈரம் பாய்ச்சி
    செத்த சிலந்திகளோடு கிடக்கும்
    என்னையும் சேர்த்து அகற்ற
    புனிதமாய் ஒரு மாளிகைக்குள்
    உயிர்த்தெழுவேன் மீண்டும் நான்!!!//

    வணக்கம் சகோதரி,
    எல்லோர் மனங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் சிந்தனைகளைக் கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள். 2000ம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதையா? நம்பவே முடியவில்லை. அந்தளவிற்கு தேர்ந்த ஒரு கவிஞனின் கவித்துவம் இதில் தெரிகிறது.

    அடிமைகளாக இருக்கும் சமூகத்தினுள் ஒரு வீரமரபை நோக்கிய புரட்சியாளனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆவலினைக் கவிதையில் காண்கிறேன்.

    ReplyDelete
  18. இன்னொரு தளத்தில் கொடுக்க வேண்டிய என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் தவறுதலாக இங்கே பதிவிட்டுவிட்டேன்.. ஸாரி அக்கா..

    ReplyDelete
  19. நல்ல வரிகள். வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  20. ரணங்களை தாங்கிய வரிகளுடனான கவி. அருமை

    ReplyDelete
  21. //என்னைப் பிய்த்தெறிந்து
    எனக்குள் வாழ ஒரு ஆவி
    என்னைப் பிடிக்க ஒரு ஆவி
    எனக்குள் இருக்கும் நானை
    இல்லாதொழிக்க ஒரு ஆத்மா.//

    நச் வரிகள்...

    ReplyDelete
  22. ஆத்மாவின் ஓலம் ரொம்ப வலிகளுடன்

    ReplyDelete
  23. இது ...தேவதைகளின்
    காலம்
    விண்மீனுக்க
    நிலவுகள்
    ஏங்குவதில்லை ...
    கண்களில்
    வெளிச்சம்
    மட்டும் இருந்துவிட்டால்
    விடை கிடைக்காத
    விடயங்களுக்கு
    ஏங்குவது
    வீண் என துணிவு
    கிடைக்கும்
    இலச்சிய வாழ்வும்
    அதுகுறித்தான
    தெளிந்த
    பார்வையும்
    இருந்துவிட்டால்
    நமக்குள்
    என்றும் வசந்த
    கீதமாகும்
    என்பது என்
    எண்ணம் நீங்களும்
    கற்பனையை விரியுங்கள்
    வாழ்க்கை நம் தொட்டுவிடும்
    தூரத்தில் தான் என
    நம் நம்பிக்கை
    விதையை ஆழ விதையுங்கள்
    வெற்றி கிட்டும் .

    ReplyDelete
  24. உங்கள் ஆத்மாவின் ஆழத்திலிருந்து வரும் குரல் கேட்டு
    எங்கள் குற்ற மனது கூச்சம் கொள்கிறது
    மனம் தொடும் பதிவு

    ReplyDelete
  25. ஆத்மாவின் ஓலம்....

    மனம் கனமாகிபோனது ....

    ReplyDelete
  26. //எங்காவது வீர மரபுகளோடு
    ஒரு வீரன்
    ஒரு தமிழன்
    சுயம் உடைத்து சமூகம் எதிர்த்து
    மரபுகள் தாண்டி
    வந்திட்டால்....!//

    வருடம் பல ஆனாலும் இன்னும் அதே வலி அதே ரணம்...மாறும் என்ற நம்பிக்கையில் நாட்கள் மட்டுமே கடந்து செல்கிறது.

    ஒரு தமிழன், ஒரு வீரன்.....ஆதங்கம் ஆக்ரோஷமாய் வெளிப்படும் இடம் இது தோழி.

    ஹேமா, மன உணர்வுகளை அருமையாக வெளிபடுத்துவது உங்களுக்கு புதிதல்லவே...?!

    நன்று.

    ReplyDelete
  27. //முலை கிள்ளி எறிந்து எரித்தாலும்
    இந்தச் சமூகம் எரிவதாயில்லை.
    எங்காவது வீர மரபுகளோடு
    ஒரு வீரன்
    ஒரு தமிழன்
    சுயம் உடைத்து சமூகம் எதிர்த்து
    மரபுகள் தாண்டி
    வந்திட்டால்....!//

    நம்பிக்கை வரிகள்....
    மனச ரணமாக்கும் கவிதை.

    ReplyDelete
  28. கவிதை பிரமாதமாக வந்திருக்கிறது...வாழ்த்துக்கள் ஹேமா...

    ReplyDelete
  29. \\\ஒரு வீரன்
    ஒரு தமிழன்
    சுயம் உடைத்து சமூகம் எதிர்த்து
    மரபுகள் தாண்டி
    வந்திட்டால்....!///

    .....வெறுங்கனவாய்
    பழங்கதையாய்
    ஆகிப் போச்சே தோழி.

    ReplyDelete
  30. முதல் வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டின. வித்தியாசமான சோகம்.

    ReplyDelete