Thursday, July 15, 2010

இருண்ட அவைகள்...

ஒரு இருளுக்குள்
பேரிருளையே
சுமந்தபடி அவைகள்.

அந்த இருளுக்குள்ளும்
பளிச்சிடும் கண்களோடு
காத்துக்கிடக்கின்றன அவைகள்.

அவைகளின்
எத்தனை ஓலங்கள்
ஓங்கி ஒலித்து
அடங்கியிருக்கும் இங்கு.

இந்த இருளுக்குள்ளும்
ஒவ்வொரு முகங்களும்
ஒவ்வொன்றைச்
சொல்லிப் போயின.

அவைகளின் இரைச்சல்களை
காற்று
வாங்கித் தந்திருக்கும் அன்று.
ஏன்...எவர் காதிலும்
விழாமல் போயிற்று?

ஏதோ ஒரு பொழுதின்
அமைதியில்
அவைகளும் வாழ்ந்திருக்குமே
எம்மைப்போல.

அழைத்து அழைத்தே
அடங்கியதால்தான்
இந்த இருளுக்குள்ளும்
காத்துக்கிடக்கினறன
ஏதோ ஒன்றைச்
சொல்வதற்காக.

இனி....

அவைகள் இல்லாதவைகள்
இ(ய)ல்லாதவர்கள்.

அந்த இருளுக்குள்ளும்
பேரிருள் தேக்கி வைத்திருக்கும்
அவைகளின் முகங்களைத்
தேடியபடி நான்.

என்னையும் தேடிடுமோ அவைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

42 comments:

  1. அருமை. ஆனால் என் சின்ன மூளைக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது

    ReplyDelete
  2. கார்த்திக் அதுக்காகத்தான் லேபிள் போடாமப் பதிவு தந்திருக்கேன்.
    சரியாச் சொல்றாங்களா பாத்திட்டு லேபிள் போடுறேன்.
    ஏன்னா என்னை நானே சோதிச்சுக்கிறேன்.சரியான உணர்வோட எழுதியிருக்கேனான்னு !

    ReplyDelete
  3. மாயானத்தின் மூலைக்கு வந்து விட்டோமோ என்று அஞ்சி விட்டேன்...

    ReplyDelete
  4. ஹேமா நான் சரியாக புரிந்து இருக்குறேனா?

    அவை அஞ்சி பதறிய ஆத்மாக்களின் அலைவா?

    ReplyDelete
  5. //ஏதோ ஒன்றைச்
    சொல்வதற்காக.//வா அல்லது செய்வதற்காகவா

    ReplyDelete
  6. வாவ், செமக் கவிதை ஹேமா. ரொம்ப யோசிக்க வெச்சது வாழ்க்கை பத்தி.

    ReplyDelete
  7. கவிதை மிக அருமை.....

    அந்த பேரிருளுக்குள்.....வெளிச்சமும் வெடித்திருக்குமே கண்கள் கூச?

    ReplyDelete
  8. கவிதை நல்லாயிருக்குங்க தோழி.

    /அந்த இருளுக்குள்ளும்
    பேரிருள் தேக்கி வைத்திருக்கும்/

    :(

    ReplyDelete
  9. ஒரு நல்ல படைப்பு எப்போதும் பல அர்த்தங்கள், குறியீடுகளை தருவதாக இருக்கும்.. அந்த வகையில் இதுவும்..

    ReplyDelete
  10. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு தோழி...அழகான கவிதை

    ReplyDelete
  11. பக்கத்து வீட்டுல மயில் பிரியாணி.வழியில் நீங்க கண்ணுல பட்டீங்க.எனவே ஒரு ஹலோ!

    ReplyDelete
  12. நம்மை விட்டுச் சென்றவர்கள் நம்மை நினைவு வைத்திருப்பார்கள் என்பது எவ்வளவு சாத்தியமோ... கண்டவர் விண்டிலர்.... நாம் அவர்கள் நினைவைத் தவிர்க்க முடியாது. சுமையான நினைவுகள் பற்றி சுவையான கவிதை.

    ReplyDelete
  13. கவிதை மிக அருமை ஹேமா..

    ReplyDelete
  14. ரொம்ப யோசிக்க வைக்கின்ற வரிகள் நான்கு முறை படித்து விட்டேன், ஏதோ ஒன்று புரிந்ததுபோலவும் இருக்கு புரியாதது போலவும் இருக்கிறது.... "விளங்க முடியா கவிதை நீ"

    ReplyDelete
  15. ஹேமாக்கிட்ட நாவந்துப்போனேன் என்ற விசயத்தை ஆரும் சொல்லிபுடாதிங்க.

    ReplyDelete
  16. அவைகள் எப்போதும் அவைகள் தான். கவிதை நன்றாக இருந்தது.

    ReplyDelete
  17. அவைகள் இல்லாதவைகள்
    இ(ய)ல்லாதவர்கள்.

    அந்த இருளுக்குள்ளும்
    பேரிருள் தேக்கி வைத்திருக்கும்
    அவைகளின் முகங்களைத்
    தேடியபடி நான்.

    என்னையும் தேடிடுமோ அவைகள்!!!

    ஒரு நல்ல படைப்பு எப்போதும் பல அர்த்தங்களைத் தருவதாக இருக்கும்.. ம்ம்ம்ம்.உண்மை. ஹேமா உங்கள் படைப்புக்களும் அவ்வாறே ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பல அர்த்தங்கள். அது தான் திரும்பத் திரும்பப் படிக்கிறேன்........
    படம் பார்க்கும் போது மனம் கனக்கிறது தோழி......

    ReplyDelete
  18. //அழைத்து அழைத்தே
    அடங்கியதால்தான்
    இந்த இருளுக்குள்ளும்
    காத்துக்கிடக்கினறன
    ஏதோ ஒன்றைச்
    சொல்வதற்காக.//

    அவர்களாய் இருந்த அவைகள் அவைகளானபின் அப்படியேதான் இருக்கட்டுமே...பல அர்த்தம் தருது இது பயங்கரமான கவிதையாய்...வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. எனக்கு உங்களைத் தெரியும் ஹேமா.. உங்கள் தாய்மண்ணை நீங்கள் எத்தனை நேசிப்பவர் என்றும் தெரியும்..எனவே கவிதையைப் புரிந்து கொள்வதில் அத்தனை சிரமமில்லை.. அருமை..

    ReplyDelete
  20. எப்போதும்போல் என்னையும் விழுங்கும் பேரிருள்..

    ReplyDelete
  21. அவைகள்...சிலநேரத்திற்கோ,சில நாட்களுக்கோ முன் அவர்கள்... :-(

    //அவைகளின் இரைச்சல்களை
    காற்று
    வாங்கித் தந்திருக்கும் அன்று.//
    நல்ல ஆழமிக்க வரிகள்...
    இப்பொழுதெல்லாம் லேபிள் மட்டுமல்ல, உங்கள் பேரப் போடாட்டியும் தெரியும் இவைகள் ‘ஹேமாவு’டையது என்று..

    ReplyDelete
  22. மிக ஆழமான வரிகள். உங்கள் வரிகள் என்பது சொல்லாமலே தெரியும்.

    ReplyDelete
  23. சூன்ய வெளி..
    ஈரவிழி..
    தொப்புள் தேடும் நிலா..!


    சுகந்தானே...??

    ReplyDelete
  24. கொஞ்சம் புரிந்துகொள்ள கடினம்தான். கா.பாண்டியன் சொல்வதுபோல் ஆழப்படித்தால் அதனுள் படிந்திருக்கும் அத்தனையும் மண் நேசம் ஓலத்துடன்...

    ReplyDelete
  25. எப்போதும் பல அர்த்தங்கள் ஹேமா.ரொம்ப யோசிக்க வெச்சது.

    //என்னையும் தேடிடுமோ அவைகள்//
    ????

    ReplyDelete
  26. அவைகளின்
    எத்தனை ஓலங்கள்
    ஓங்கி ஒலித்து
    அடங்கியிருக்கும் இங்கு.\\\\\\\\\

    பலவற்றை,பார்த்தவற்றைத்
    திறந்து,திறந்து பார்க்க வைக்கும்
    வரிகள் ஹேமா




    இந்த இருளுக்குள்ளும்
    ஒவ்வொரு முகங்களும்
    ஒவ்வொன்றைச்
    சொல்லிப் போயின\\\\\\\

    ஆம் என்முகம்,உங்கள் முகம்
    இன்னும் பல ...ஈழச்சோதரிகளின்{களிப்பிழந்த}
    முகங்கள் சாட்சியடி!! ஒவ்வொன்றைச்
    சொல்ல........


    மொத்தத்தில் இருண்ட அவைகள்

    இருண்டவைகள்தான் ஈழத்தில்!!

    ReplyDelete
  27. அவைகளின்
    எத்தனை ஓலங்கள்
    ஓங்கி ஒலித்து
    அடங்கியிருக்கும் இங்கு//


    அவைகளின் இரைச்சல்களை
    காற்று
    வாங்கித் தந்திருக்கும் அன்று.
    ஏன்...எவர் காதிலும்
    விழாமல் போயிற்று?//


    காற்றில் வரும் சேதிகள் காதுகளைச் சென்றடையா வண்ணம் சேற்றை அள்ளிப் பூசியதன் விளைவு தான் இது. உயிரோடு இருக்கும் போதே எரிக்கப்படுவர்களை உக்கிப் போன பிணத்தைத் தான் எரித்தோம் எனச் சொல்லி நம்பவைத்தவர்களால் தான் இவை நாடகமாக்கப்பட்டு. எங்களின் காதுகளே எங்களின் வார்த்தைகளைத் தவறாக அர்த்தப்படுத்தி விளக்கம் கூறத் தொடங்கியதன் விளைவினையும் இக் கவிதையின் இவ் வரிகளினூடாக இனங்காணலாம்.

    ReplyDelete
  28. அழைத்து அழைத்தே
    அடங்கியதால்தான்
    இந்த இருளுக்குள்ளும்
    காத்துக்கிடக்கினறன
    ஏதோ ஒன்றைச்
    சொல்வதற்காக//

    இது மட்டும் நிஜம் ஹேமா.
    நம்பிக்கை நிறைந்த வரிகள்.


    ‘’இரு பொருளில் தவழ்கிறது கவிதை.
    இக் கவிதையினை இறந்து போன ஆத்மாக்களின் ‘அவைகளாகவும்’ கருக் கொள்ளலாம். இல்லை இல்லாதழிக்கப்பட்ட ஒரு சந்ததியின் எச்சங்களைப் பேசும் மானுடவியல் யதார்த்தத்தின் விம்பங்கள் என்றும் சொல்லலாம்)):

    ReplyDelete
  29. puriyala hema..athaan cmd podamal irunthen ...vilakkam pls

    ReplyDelete
  30. கவுஜைக்கு விளக்கம் கொடுக்கலைனா என்ன செய்யன்னும் ?

    ReplyDelete
  31. உங்கள் கவிதைகள் பயணிக்கும் தளங்கள் ஆச்சர்யமூட்டுகின்றன ஹேமா.

    ஆனால் பொதுவாகவே மொழியின் மீது நல்ல ஆளுமையுள்ள நீங்கள், சொல்லவருவது என்னவென்று தெளிவாகும் வரை கூட்டிகுறைத்துக் கொண்டே இருக்கலாம்.

    எளிமையாய்த் தோற்றம் தருவது தவறல்ல.மேலும் எளிமை என்பது அத்தனை எளிதாய் எழுதமுடிவதுமல்ல.

    ஹேமா-உங்களைப் படிக்கும் ஆசை மிகவே இது.என் ஆலோசனையில் தவறிருந்தால் இதைத் தள்ளுங்கள்.

    ReplyDelete
  32. //அந்த இருளுக்குள்ளும்
    பேரிருள் தேக்கி வைத்திருக்கும்
    அவைகளின் முகங்களைத்
    தேடியபடி நான்.

    என்னையும் தேடிடுமோ அவைகள்!!!//

    நுண்ணிய உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள் தோழி.

    தொடரட்டும்....

    ReplyDelete
  33. வெளியே என்ன நடக்கின்றது என்பது அவைகளுக்கு தெரியும் ...!

    ஆனால்..! அவைகளுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்பது
    யாருக்கு தெரியும்...!

    ReplyDelete
  34. கவிதை நன்றாக உள்ளது. மனதில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு ,நிச்சயம் ஒருநாள் வழி பிறக்கும்.

    ReplyDelete
  35. கவிதை மிக அருமை.....

    ReplyDelete
  36. //அவைகளும் வாழ்ந்திருக்குமே
    எம்மைப்போல.//

    வாழ்வின் உணர்வுகள்...
    உணர்ந்தாலே புரியும்.
    புரிதலில் விளங்கும்...
    விளங்கினால் தெளியும்.

    அருமை கவியரசி... அருமை.
    உங்கள் கவிதை, என்னையும் எழுத (!?) தூண்டியது.
    நன்றி.

    ReplyDelete
  37. Nice Hema,what do u mean by Avaihal.

    ReplyDelete
  38. கார்த்திக்(LK)...இப்போ புரிஞ்சிருக்கா என்ன சொல்ல்யிருக்கேன்னு !நன்றி முதல் பின்னூட்டத்துக்கு.


    றோஸ்...சரியா அனுமானிச்சிருக்கீங்க.அதான் சத்தம் போடாம இருந்திட்டேன்.நன்றி தோழி.


    நண்டு...அவைகளால் இனிச் செய்ய முடியாது.ஆதலால் சொல்வதற்காக என்றே நினைத்துக்கொண்டேன்.


    விக்னேஸ்வரி...நன்றி.
    இடைக்கிடை மறக்காமல் வந்து போகிறீர்கள்.நன்றியம்மா.


    அரசு...உங்களின் உணர்வுகூட இருளுக்குள்ளும் இனம் தேடும் கண்களாய்.நன்றி தோழா.


    ஆறுமுகம்...அது அனுபவித்த என் உணர்வுதான் இருளாய்.


    பிரசன்னா....அருமையாய்ச் சொன்னீர்கள்.//ஒரு நல்ல படைப்பு எப்போதும் பல அர்த்தங்கள், குறியீடுகளை தருவதாக இருக்கும்//

    அதுசரி...எங்கே உப்புமடச் சந்திக் கவிதை.இன்னுமா யோசிக்கிறீங்க !


    கமலேஸ்....நன்றி நன்றி நன்றி.
    உங்களைப் போன்றவர்கள் சொல்லும்போது மனம் சந்தோஷப்படுகிறது.


    நடா...மயில் புரியாணியா.நல்லா இருந்திச்சா.கவிதை விளங்காட்டி என்கிட்ட கேட்டா போச்சு.
    ஏன் இப்பிடி !


    ஸ்ரீராம்...கவிதை சரியாப்
    புரிஞ்சா பின்னூட்டமும்
    சந்தோஷமா வரும்ல !

    Ahamedirshad...முதல்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    ராஜவம்சம்...இப்பிடியெல்லம்
    ஓடி ஒளிச்சா விட்டிடுவேனா.
    கண்டுபிடிச்சிட்டேன்ல.


    தமிழ்...
    அவைகள் பாவப்பட்டவைகள் !


    ஜெயா...எங்களின் சொந்தங்கள்தான் அவைகள்.நிச்சயம் தேடிடும் அவைகள்!நன்றி ஜெயா.


    சீமான் ...மிகவும் சந்தோஷம் வந்ததுக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும்.


    கார்த்தி...வாங்கோ வாங்கோ படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது.
    சந்தோஷம் கண்டது.மண் வாசனையை நெஞ்சில் மணந்தபடிதானே அகதி வாழ்வாய் எம் வாழ்வு.நன்றி நண்பா.


    தலைவன்.கொம்...நன்றி.


    செந்தில்...பேரிருள் கலையும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு அகதி வாழ்வு தொடர்கிறது.


    தமிழ்ப்பறவை...அண்ணா நன்றி புரிந்துகொண்டமைக்கு அவைகளையும் என்னையும்.


    கா.சிதம்பரம்...நன்றி நன்றி அவர்களான அவைகளைப் புரிந்துகொண்டீர்கள்.


    T.V.ராதாகிருஷ்ணன் ...ஐயா
    என்றும் உங்கள் அன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  39. சிவாஜி...நிலா என்றும் மண்ணின் நினைவோடு சுகம்.நன்றி.
    நீங்களும் சுகம்தானே.


    பாலாஜி...ஓலமிட்டுக் காத்திருக்கும் அவைகள்.திடீரென உயிர் விட்ட அவைகளின் உள்ளத்து ஓலங்கள்
    என் ஓலங்களாக!


    ஜெஸி...எப்பிடி இருக்கீங்க.
    சுகம்தானே தோழி.அவைகளின் ஓலங்கள் எங்களின் அவலங்கள்.


    கலா...இருண்ட எம் வாழ்வை வெளிச்சமாக்கப் போராடிய அவைகளிடம் நிறையவே கதைக்கவேணும்.
    நிறையவே கதைகள் சொல்லும் !


    கமல்...சரியாக இரட்டை அர்த்தத்தோடு சரியாகவே புரிந்திருக்கிறீர்கள்.நன்றி தமிழே.
    மனம் வலிக்க வலிக்க எழுதினேன்.
    நம்பிக் கெட்டவன் ஈழத்தமிழன்.


    மேவீ...இந்தக் கவிதை உணர்வின் புரிதல்.எங்கள் ஆத்மாக்களின் அவலங்கள்.புரிந்ததா !


    நசர்...நிறைய விளக்கம் குடுத்திருகேன்.
    கும்மியடிக்கிற கவிதை விரைவில்...!


    சுந்தர்ஜி...இருண்ட அவைகளோடு சந்தோஷத்தில் நான்.உங்கள் விமர்சனம் என்னை இன்னும் ஊக்கம் கொள்ள வைக்கிறது.நன்றி ஆசானே.


    ஜீவன் அமுதன்...உங்கள் கருத்தும் சரி.அவைகள் தங்களின் மன அவலத்தைச் சொல்லவே
    எம்மைத் தேடுகின்றன.


    இளம் தூயவன்...நன்றி உங்கள் ஆறுதல் வார்த்தைக்கு.சந்திப்போம்.


    புலவரே....நன்றி நன்றி.உங்கள் சமூக அக்கறை கொண்ட பதிவுகளைத் தொடருங்கள்.
    நல்லதைச் செய்வோம்.


    Joe...புது வரவான உங்களை அன்போடு குழந்தைநிலா அணைத்துக்கொள்கிறது.நன்றி.


    கொல்லான்...காணோமே என்று தேடினால் இப்பிடியா கவிதை எழுதி....!நன்றி அன்புக்கு.


    டாக்டர்...அவைகள் என்றால் உயிரற்றவைகள்.வெறும் ஜடங்கள்.முன்பு அவர்களாக இருந்தவர்கள்.புரிகிறதா !

    ReplyDelete
  40. அவைகள் அழகு.

    ReplyDelete