மீண்டும் விரல் கடித்துப் போனது
எறும்பு ஒன்று.
என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல.
எழுதிய குறைகளாய்
கவிதைகள் பரப்பிய மேசை.
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
பேசிய வார்த்தைகள்
ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்.
தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாய்ந்து.
சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.
சேமித்த ஞாபக மிட்டாய்களின் இனிப்பை
நாவு மீண்டும்
இரை மீட்டிச் சுவைத்தபடி
தூவானமாய்
மனம் சிணுங்கிக் கொண்டாலும்
எப்போது மீண்டும்
முந்தைய சாயல் எதுவுமே இல்லாமல்
பேசிக்கொள்ளலாம்.
என் வீட்டு பல்கனிப் பூக்கள் மட்டுமே
என் தவிப்பைச் சொல்ல
தலை அசைத்து முயற்சிக்கும்.
தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.
என்றாலும்
வரமாட்டாய் நீ!!!
ஹேமா(சுவிஸ்)
எனது சிகரெட்டின்
சிறு சிறுத் துகள்களாய்
நீயே......
புகையிலையாகியிருக்கிறாய்.
உன்னை சுவாசித்து
நுரையீரல் காதலாய் திகைக்கிறது !
உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.
உன்னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவுமே இல்லை..!
எனது ப்ரிய கணணியை இயக்குகிறேன் !
கீபோர்ட் மொத்தமும்
உன் பெயரின்
முதல் எழுத்துக்களாய்
நிரம்பியிருக்கிறது !
ஓஹோ..!
இதுவும் உன் விளையாட்டா என்று
எல்லாக் *கீ*யும் ஒன்றுதான் என்பதாய்
எண்ணம் போனபோக்கில்
ஏதேதோ *கீ*களை அழுத்துகிறேன்..!
முழு மானிட்டர் திரையிலும்
உன் முகமறியா
முகத்தின் காதலாய்
நிரம்புகிறது...!
அடி....
இங்குமா நீ என்று
மவுஸைக் கிளிக்கி
இந்த (உன்) அமானுட நிலவொளியை
டாஸ்க் பாரில் சுருக்கப் பார்த்தேன்.
கள்ளி...
மவுஸின் மென்மையிலும்
நீயே நிறைந்து கொண்டு
என்னைக் கிளிக்குகிறாய் !
போதுமடி....
இந்த மார்ஃபிங் விளையாட்டு
உனக்கொரு மெயில் தட்ட
முனைகிறேன் மீண்டுமாய் !!!
ஹேமா(சுவிஸ்)
தேடித் தேடிக் களைத்து எங்கோ மூலைத் தெருவொன்றில்
ஊத்தை உடுப்போடு
பாறையொன்றில் பசிக்களையோடு
நிறையாத மனதோடு உட்கார்ந்திருப்பதாய் உணர்கிறேன்.
எல்லாம் நிறைந்திருந்தும் எதுவுமே இல்லாமல்
அன்பின் வேஷங்கள் முன்னால்
பசப்பாய் நடிக்கும் சாகச மனிதர்களுக்கு முன்னால்
நானும்......என் நானும்.
அன்பு....
அன்பின் தாக்கம் அறியவில்லை ஆரம்பத்தில்
வயதின் வரம்பு கடக்க
அன்பே ஏக்கமாகி
வாழ்வு விழுந்து படுத்தபின்பும்
அன்பின் துளிச் சிதறலுக்காய் ஏங்கும் ஒரு ஜீவனாய் நான்.
காலவெளியில் கதறியழும்
அன்புப் பசியால் தினம் வாடும் சின்னக்குழந்தையாய்
துன்பப்புண் என் மனதில்.
தாயின் மடி தவழ்ந்து தந்தை தோள் கிடந்து ....
அதன் பின் அன்பின் அருகாமை
இன்னும் கிடைக்காத பாவியாய்.
சுதந்திரமற்று வறண்ட தேசத்திலும்
சீக்குப் பிடித்த மனித மனங்களிலும்
அன்பின் ஒளி எங்கும் காணேன்.
அன்பு வற்றி மானுடம் குன்றிக் கிடக்கிறது.
அன்பு கண்டேன்
நிறைவாய் அன்பின் சாயல் கண்டேன்.
சின்னக் குழந்தைகள் சொன்ன மொழிகளில்
அன்பு வழியக் கண்டேன்.
சிறகடிக்கும் பறவைகள் நிழல்தரும் மரங்கள்
ஏன்..ஐந்தறிவு மிருகங்களில்கூட
மிகுந்திருக்கும் அன்பு
மானிடம் மட்டும் மறந்ததேனோ !
சிலசமயங்களில் அன்பு என் பலவீனம் கண்டு
பக்கம் வரும் பாசாங்கு காட்டும்
மாய அன்பில் கட்டுப்பட்டு
காயப்பட்ட கதைகள் கனக்கவே உண்டு.
எங்கும் கதவடைப்பு தட்டுப்பாடு கிடைப்பது அரிது.
கிடைக்கவே கிடைக்காது.
ஒரு துளி அன்பிற்காய் ஓடிக் களைக்கிறேன்.
அதுவும் உண்மை அன்பிற்காய் மட்டுமே.
நினைத்திராத நிமிடத்துளிக்குள் நான் இறந்துவிடுவேன்.
என் சுவாசத்தின் இறுதி இழைத்துளியில் ஊசலாடிக்
களைத்து இளைக்கிறேன்.
என் உயிர் பிரிவதைக்கூட உணர்கிறேன்.
சுவாசம் கொஞ்சம் வேகமானாலோ
இரக்கத்தை விட்டுவிட்டாலோ என் உயிர் பறந்துவிடும்.
வாழ்வின் வரவுகளோடு என் வெகுமானங்களையும்
விட்டுப் போகும் நேரத்திலும்
ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.
கிடைக்குமா ?!!!
(வானொலிக் கவிதை.24.02.2003)
ஹேமா(சுவிஸ்)
ஒரு இருளுக்குள்
பேரிருளையே
சுமந்தபடி அவைகள்.
அந்த இருளுக்குள்ளும்
பளிச்சிடும் கண்களோடு
காத்துக்கிடக்கின்றன அவைகள்.
அவைகளின்
எத்தனை ஓலங்கள்
ஓங்கி ஒலித்து
அடங்கியிருக்கும் இங்கு.
இந்த இருளுக்குள்ளும்
ஒவ்வொரு முகங்களும்
ஒவ்வொன்றைச்
சொல்லிப் போயின.
அவைகளின் இரைச்சல்களை
காற்று
வாங்கித் தந்திருக்கும் அன்று.
ஏன்...எவர் காதிலும்
விழாமல் போயிற்று?
ஏதோ ஒரு பொழுதின்
அமைதியில்
அவைகளும் வாழ்ந்திருக்குமே
எம்மைப்போல.
அழைத்து அழைத்தே
அடங்கியதால்தான்
இந்த இருளுக்குள்ளும்
காத்துக்கிடக்கினறன
ஏதோ ஒன்றைச்
சொல்வதற்காக.
இனி....
அவைகள் இல்லாதவைகள்
இ(ய)ல்லாதவர்கள்.
அந்த இருளுக்குள்ளும்
பேரிருள் தேக்கி வைத்திருக்கும்
அவைகளின் முகங்களைத்
தேடியபடி நான்.
என்னையும் தேடிடுமோ அவைகள்!!!
ஹேமா(சுவிஸ்)
ஊற்ற ஊற்ற
உள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை.
எனை மீட்டும் அன்பும்
அது மீட்கும் உன் நினைவும்
மதுவை விடவும்
மயக்கமாய்.
எப்போ தொடங்கினாய்
என்னென்ன பேசினாய்
என்ன சொல்லி முடித்தாய்
எந்த பிரக்ஞையுமின்றி.
மூச்சுத்திணறுகிறது
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பிற்குள்.
நீந்திக்கரை சேரும்
நிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி.
*நீயாய் நீந்தி வா*
எனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.
*அன்பும் விஷம்தானடி*
அசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்.
விடியும் வானில் சிரித்தபடி
விடிவெள்ளிகள்!!!ஹேமா(சுவிஸ்