Friday, September 25, 2009

ஒண்டும் விளங்கேல்ல...

செத்துப் போகலாம் போல இருக்கு.
சாகக் கூட உரிமையற்ற
பிறப்புக்களா நாங்கள்.
விசாரணையின் பெயரால்
ரத்தமும் சிதழும்
கலந்து கசிந்து நாற
பிறந்த மேனியாய்
மூத்திரம் சொட்டச் சொட்ட.
கால்கள் ஏவாமல்
மனம் சொல்ல நடக்கிறது கால்கள்.

பச்சை மிளகாய் வாங்கப் போக
குச்சொழுங்கையில் சங்கவியும் வர
பேசிச் சிரிக்கேக்க
வந்தாங்கள் ஐயா ஆமிக்காரன்.
இப்போ என்னண்டா
என்னவோ
உண்மை ஒண்டு சொல்லட்டாம்.
என்ன இருக்கு என்னட்ட உண்மை ?

உடுப்பையும் கழட்டி
உரிஞ்சான் குண்டியாய்
உதைக்கிறாங்கள் போட்டு.
தொங்க விட்டாங்கள் தலைகீழாய் நேற்று
மிளகாய் சாம்பிராணியும் போட்டு.
கம்பியாம் நாளைக்கு ஆணுடம்புக்குள்ள.
என்னவோ...
ஒரு உண்மை சொல்லட்டாம் என்னை.

ஈரெட்டு வயதின் எல்லைக்குள் நான்.
எனக்கென்ன தெரியும்.
அறியவில்லை அரசியல்.
அப்பா சொல்வார் கொஞ்சம் விளங்கும்.
மிச்சம் விளங்காது.
எம் தலை கிள்ளி முளை கிள்ளுவது
விளங்கியும் விளங்காமலும்.(புரிந்தும் புரியாமலும்)
எம்மை அழிக்கும் கருடர்கள் கையில் நாம்.
தெளிவாய் மிக மிகத் தெளிவாய்.


மற்றும்படி குண்டு வெடிக்கும்
ஹெலி பறக்கும்
பங்கருக்குள்(பதுங்குகுழி)பதுங்குவோம்.
ஓடுவோம் கோயிலுக்குள்.
தலையணையோ பாயோ
ஏன் சிலசமயம்
உடம்பில உடுப்புக் கூட இருக்காது.
என்ன வேண்டிக் கிடக்கு
உடுப்பும் சாப்பாடும்.
மனம் அலுத்துப் போகும்.
ஆனால் பயமில்லை.

வருவாங்கள் ஆமிக்காரங்கள்.
சன்னதம் ஆடுவாங்கள்.
இழுத்துப் போவான்கள் அடிப்பாங்கள்.
அப்பாவுக்கும் கால்முறிச்சவங்கள்.
பக்கத்து வீட்டு அல்லி அக்காவை
அசிங்கப் படுத்தினவங்கள்.
விசர் அக்கா இப்ப அவ.

உண்மை ஏதோ கேக்கிறாங்கள்.
என்ன சொல்ல இருக்கு என்னட்ட.
பயமாயும் கிடக்கு எனக்கு.
பொய் எண்டாலும் சொல்லலாம்.
அடிப்பாங்கள் சொன்னாலும்.
சொல்லாட்டிலும்
கம்பிதான் மூலத்துக்குள்ள
.

அப்பவும் சொன்னனான்...
அப்பா ஆமிக்காரன்ர அட்டகாசத்தை
எழுதிப் போடுங்கோ ரேடியோவுக்கு எண்டு.
எழுதின ஆக்கள்
காணாம போய்விடுவினமாம்.
கரம் நறுக்கி
காக்காய்க்கு போடுவாங்களாம்.
கவனம் தம்பி எண்டவர் அப்பா.
எழுதேல்லையே நானும்.
அப்ப என்ன உண்மை நான் சொல்ல?

ம்ம்ம்ம்...
துயரங்கள் சுமப்போம் முடியும் வரை.
அதே பாரம் கனமாய் மாறி
முடியாமல் போகும் ஒரு நாள்.
பார்க்கலாம் அதுவரை பொறுப்போம்.
சொன்னாலும் அடி விழும்.
சொல்லாட்டிலும்
அடிதான் விடிய விடிய.
விடிய வேண்டாம் இந்த இரவு மட்டும்.
நானும் சொல்ல வேண்டாம் ஒண்டும்.
செத்த இரவுக்குள்
சாகாமல் இருக்க நான் !!!

ஹேமா(சுவிஸ்)

26 comments:

  1. romba kashtama irukku padikkum pothe

    ReplyDelete
  2. ஹேமா ...... என்னவோ தெரியல ; படித்த பிறகு அழுகையாய் வருது

    ReplyDelete
  3. வார்த்தைகளே... என்னை வதைக்கிறதே...
    என்று மாறும் இந்த அவல நிலை? விடை தெரியாது உடைந்து போகிறேன் நான்.

    ReplyDelete
  4. கையறுநிலையில் நாம்

    ReplyDelete
  5. //கலந்து கசிந்து நாற
    பிறந்த மேனியாய்
    மூத்திரம் சொட்டச் சொட்ட.
    கால்கள் ஏவாமல்
    மனம் சொல்ல நடக்கிறது கால்கள்.//

    இதற்குமேல் உங்களின் வரிகளை படிக்க முடியவில்லை தோழியே...வலிக்கிறது...

    நம் மக்களின் வலியினை ஊடங்களில் சொன்னால் கூட அதற்கும் தண்டனை என்றால் என்ன செய்வது? எங்கே முறையிடுவது?

    வலிக்காமல் இல்லை...

    ReplyDelete
  6. ஹேமா...........! உங்கள் பதிவுகளை படித்து
    நிறைய தடவை இப்படி யோசித்து இருக்கிறேன்!
    இப்போதுதான் கருத்து சொல்கிறேன்....!

    கொடுமைகளை கண்டு அழுதது போதும்...!
    அழவைத்ததும் போதும்...!


    நமது ஒவ்வொரு துளி கண்ணீரும்
    எதிரியின் வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள் ..!

    உங்கள் பதிவுகள் மன உறுதியை குலைத்து,
    வேதனையை அதிகரிக்கிறது..!

    கொடுமையை எதிர்த்து எதிர்கொள்ளும் வகையில் எழுதுங்கள்..!

    இந்த நிலை முடிவல்ல...!!
    ராஜ பக்க்ஷே நிரந்தரமாக பதவியில் இருக்க போவதில்லை!!

    இந்தியாவில், மத்தியிலும்,மாநிலத்திலும்
    இப்போது போல அல்லாமல் கொடுமையை
    எதிர்க்கும் ஒரு
    ''ஆண்மையுள்ள அரசு''
    எதிர் காலத்தில் உருவாகலாம்...!

    அதுவரை மக்கள் நம்பிக்கையுடனும்,
    மன உறுதி குலையாத தைரியத்துடனும்
    காத்திருக்க வேண்டும் !
    நம்பிகையையும் தைரியத்தையும்
    உருவாக்கும் வகையில் எழுதுங்கள்!!!

    ReplyDelete
  7. patharramai irukkirathay hema
    kankalil vaziyum kannirukku alavey illai
    sakothari eppadi ivvalavu azuthangalaiyum thangukiriirgal

    nichayam oru naal ellam vidivukku varum Hema

    ReplyDelete
  8. இலங்கயில் புகுந்து உனக்கு இந்த இடம் வேண்டாம் நீ என் கூட வா என்று எல்லாத் தமிழர்களையும் தமிழகத்துக்கு அள்ளி வரவேண்டும் போல் உள்ளது சகோதரி
    உங்களுக்கு நிகழ்ந்தவைகளைப்படிக்கும் போதெ இவ்வாறு இருக்கிறதே
    உங்கள் நினைவலைகளில் எவ்வளவு எண்ணங்கள் வெடித்துக் கொண்டிருக்கும்
    மிகுந்த மனத்துயருக்கு உள்ளாகி விட்டேன் வாழ்வில் அன்பு காதல் பாசம் என்ற உணர்வுகளோடு மட்டுமே வாழ்ந்து கொண்டுருக்கும் என்னைப் போன்றோருக்கு உங்கள் எழுத்து நெருப்பள்ளி விழுங்கியது போல் இருக்கிறது

    ReplyDelete
  9. முழுவீச்சில் படித்துமுடித்தேன் ரணங்களை. நல்ல வீச்சு வார்த்தைகளில்.

    ReplyDelete
  10. எங்கள் வேதனைகளைக் கொண்டு யாரைக் கரிந்து கொட்டுவதென்று நினைக்கும் போது நிறைய அடிமை நாய்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன!

    அவைகளை வைதால் வாய்தான் வலிக்கிறது!

    எங்கள் ஆற்றாமை இத்தோடு வழிந்து ஓடுகிறது!

    :)

    ReplyDelete
  11. என்னடா சொல்லட்டும் ஹேமா...இந்த கையறு நிலையை.

    ReplyDelete
  12. ஹேமா ப்ளீஸ் ஸ்டாப் ,......

    ரொம்பவும் சோகமா எழுதாதீங்க......

    ரொம்ப கஷ்டமா இருக்கு.....

    ReplyDelete
  13. உண்மை ஒன்று சொல்லட்டாம் .......உண்மை ஒன்று தான் அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொய்மையை எம் மீது திணிக்கிறார்கள் அதை ஏற்று கொள்ளடாம். ஏற்றாலும் ஏற்காவிடாலும் இது தான் ,என்ன பாவப்பட்ட இனமோ .........இந்த தமிழ் இனம்.

    ReplyDelete
  14. அன்பிற்குரிய ஹேமா
    உங்கள் கடிதம் வெளியாகி உள்ளதே
    இங்கு மின்சாரம் இல்லை அதனால் பதில் வெளிவரத்தாமதம் ஆகி விட்டது
    நான் இடுகையில் உங்கள் கருத்துரையும் என்னுடைய பதிலும் எழுதி இருக்கிறேன்
    என் மனம் நோகவா ----காலதாமதம் உங்களைஇவ்வாறு
    எண்ணமிட வைத்து விட்டது
    என்னை மன்னியுங்கள்
    உங்களிடம் இருந்து பதிலும் ஆதரவும் வரும் என நான்
    நினைக்கவேஇல்லை
    எனக்கே அது இன்ப அதிர்ச்சி
    நன்றி ஹேமா
    அன்புடன் தேனு

    ReplyDelete
  15. //செத்துப் போகலாம் போல இருக்கு.
    சாகக் கூட உரிமையற்ற
    பிறப்புக்களா நாங்கள்.//

    அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.......

    ReplyDelete
  16. 200 ஆவதாக வந்த தோழியே நீ நீடு வாழி
    உன் துன்பம் தொலைய ஒரு வழி வேண்டி... வேண்டும் தோழி

    ReplyDelete
  17. ஐயோ வேண்டாம் ஹேமா! என்னால் வாசிக்கவே முடியவில்லை. இத்தனை கொடுமைகளா? தலை சுற்றுகின்றது.

    ReplyDelete
  18. ஹேமா ...... படித்த பிறகு அழுகையாய் வருது,

    ReplyDelete
  19. இங்கு கண்ணீரை கூட
    சுகமாக சிந்தமுடிகின்றது..
    ஆனால் அங்கு....................
    ........................................கூட
    வழியில்லாமல்.....
    .....................................
    வார்த்தைகள் வரவில்லையடி..

    நிலம் எல்லாம்
    களம் ஆகிவிட்டால்,
    கணமெல்லாம்
    ரணமாகிவிடும்.

    //துயரங்கள் சுமப்போம் முடியும் வரை.
    அதே பாரம் கனமாய் மாறிமுடியாமல் போகும் ஒரு நாள்.//
    இந்த வரிகளில் மட்டுமே
    வாழ்க்கை துளிர்விடும்...

    ReplyDelete
  20. உரிமைகள் இழந்தோம் , உடைமைகள் இழந்தோம் உணர்வை இழக்கவில்லை தோழி .. உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த கனவையும் இழக்கவேண்டாம் ...

    பொறுத்திருப்போம் ..விடியல் வரும் .. அந்த விடியலின் வெப்பத்தில் வெந்து சாகும் அந்த பிணம் தின்னி கழுகுகளின் சடலங்கள் ..

    ReplyDelete
  21. வரிகளில் வலிகள்...!!
    விழிகளில் துளிகள்..!!
    விடியலை நோக்கி.....

    ReplyDelete
  22. தடக்கி விழும் இடமெல்லாம் தமிழனின் அவலம்!
    அடுக்கு மொழியில் துடிக்கும் உன் கவிதை
    படிக்கும் எனக்கும் புரியவில்லை
    விடிவு எமக்கு எப்போது என்று!

    ReplyDelete
  23. அப்பப்பா... வலி..வலி...வலி மட்டுமே. பாரட்டமுடியவில்லை. மனிதம் இழந்தக் கூட்டம்,ஒப்பாரியிடும் கூட்டம்,கத்திக் கொண்டிருக்கும் கூட்டம்.. கேவலத்தின் உச்சியில், வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, தொப்புள் கொடி உறவு என எதை எதையோ உளறும் கூட்டமிடமிருந்து ஒயாமல் அறிக்கை மட்டும் வருகிறது ஒன்றும் செய்யாமலே.

    ReplyDelete
  24. மிகவும் வலிமையான வலியின் வரிகள், சில வலிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. படித்தாலே மனது கனக்கின்றது. எப்படி வாழ்கின்றார்கள். தமிழன் என்று பிறந்தாற்காக இந்த கொடுமை இது.

    ReplyDelete
  25. சொந்த பந்தம்
    பதறும்போது
    சோற்றுக்காக
    அலையும்
    ஆறு கோடி பேரில்
    ஒருவனாய் இருப்பது
    நினைத்து வெட்கமடைகிறேன்

    நிச்சயம் விடியும்....

    ReplyDelete