Tuesday, September 15, 2009

மலையடிவாரத்துத் தோழியே...1

மலையடிவாரத்து
என் தூரத்துத் தோழியே...
உன்னைக் கண்டு எவ்வளவு காலமடி.
கனவில்கூட வரமாட்டாயாமே.
என்னைப்போலவே
நீயும் அதே மலையடிவாரத்தில்
சுகமாய் இருப்பாய் என்கிற
நம்பிக்கையோடு நான் இங்கு.
காற்று வாக்கில் கூட
உன்னைப் பற்றிய செய்திகள்
கேட்டு நாளாயிற்று.
நான் இங்கு அகதித் தமிழ்க் கிளியாய்
வெளிநாட்டுக் கூண்டில்.

மலையடிவாரத்து
தூரத்து என் நண்பியாய்
இளமைக காலங்களை
நினைக்க வரும்போதெல்லாம்
சடாரென்று உன் உருவம்தான்
ஓடி முன் வரும்.
என் இளமைக்காலத்தை
முழுதாய் பங்கிட்டவள் நீதானே.
சின்னப்பாப்பாவைக் காணாவிட்டால்
ரதியும் தொலைந்திருப்பாள்.

உன் அக்கா,நீ,உன் தங்கை
நான்,என் தம்பி,தங்கைகள் இரண்டு.
பார்ப்பவர் சொல்வது
ஒரு தாயின் பிள்ளைகளாய்.
அதுவும் உன் அக்காவும் நானும்
நிறத்தில் உருவத்தில் ஒன்றாய்.
குணத்தில் ஒன்றாய்.
இளமை தொலைந்துகொண்டிருக்க
முதுமை முதுகில் ஏற
அன்றைய நாட்களை மீண்டும் மீட்கையில்
கண்களில் சொல்லொணாச் சோகம்.

முதுமை நரைகளுக்கு
இளமை மை பூசி மீட்டிப் பார்க்கிறேன்.
நீயும் வேணுமடி அதற்கு.
சிட்டாய் சிறகடித்த கணங்களை
மனக்குழிக்குள் இருந்து
தோண்டி எடுக்கிறேன் நீயும் வா.

நாம் நடந்த விளையாடிய அதே இடங்கள்
இன்னும் இருக்கிறதா?
தேயிலை மலைகள்,ரப்பர் காடுகள்,
பறித்த பழ மரங்கள் இன்னும் எவ்வளவு.
எம் தடங்களாவது தெரிகிறதா தோழி.
வான் தொடும் மலைகள் எங்கும்
விதவிதமாய் எத்தனை வர்ணப் பூக்கள்.
உங்கள் வீட்டில் வளர்ந்த
சண்டை போடும் கொண்டைச் சேவல்.
உன்னைக் கண்டாலே
கலைத்துக் கொத்த வரும் தீக்கோழி.
கட்டை வாழையில் குலை பழுத்திருக்க
முன் பக்கப் பழங்கள் இருக்க
உள்ளால் கோதிவிடும் அணில்கள் நாம்.

கொட்டும் மழையில்
ரெயின் கோட் மறந்ததாய் பொய் சொல்லி
சேறு விளையாடி
தொப்பையாய் நனைந்து வர
தலை துடைத்து உலர்த்துமுன்
அழுதபடி முட்டுக்காலில் இருவரும்.
பின் சேற்றுப்புண்
இரண்டு காலையும் பற்றிக்கொள்ள
குண்டியால் நடந்ததும் ஞாபகம் இருக்கா.

ஒட்டி ஒட்டி உறவாடி
உள்ளிருந்து இரத்தம் உறிஞ்சும்
ரப்பர் அட்டை கௌவிக் கடித்திருக்க
நான் கத்திக்குளறி ஆர்ப்பாட்டம் போட
தேயிலை கொய்யும் அம்மா
போயிலை எச்சில் துப்பி மருந்திட
இரத்தமும் கக்கி
பந்துபோல அட்டையும் உருண்டு விழ
இரத்தம் கண்ட அதிர்ச்சியில் நீயும் மயங்கி விழ...
உயிருக்குள் உணர்வுக்குள்
உறைந்து கிடக்கும் நினைவுத் துகள்கள் அது.

இன்னும் ஒன்று சகியே...
பாவம் என்று நினையாத பருவம் அது.
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
உங்கள் வீட்டுத் தோட்டத்தில்
போஞ்சி,கீரை,புடலை என்று
காய்கறிகளின் நுனி கிள்ளிப் போகும்
நத்தையின் மேல் கோவம்.
நத்தை அழிப்பு.நாம்தான் ஆமிக்காரனாய்.
ஒரு நத்தைக்கு இரண்டு சதம்.
நிலா வெளிச்சத்தில் நத்தை வீட்டு விலாசம் தேடி
வெற்று மீன்டின்னுக்குள் சமாதி கட்டுவோம்.
சேரும் நாளொன்றுக்குக் குறைந்தது
இருபது முப்பது நத்தைகள்.
நத்தை பிடித்த பணம்
பல்லி முட்டை மிட்டாயாய்
எம் வாயில் இனிக்கும்.
இன்று நினைகையிலும்
இனிக்கின்ற நாட்களாய் அது.

பெரும் கரும்பாறைகளில் பொறித்த
நம் பெயர்கள் கரிக்கட்டைக் கோலங்களாய்.
நாம் உரக்கக் கத்துவதை
அப்படியே திருப்பிக் கூறும் அதிசய மலைகள்.
மரங்கள் நடுவில் உரக்கக் கீதம் பாடும் புள்ளினங்கள்.
அடை வைத்து
இறக்கிவிட்ட கோழிக்குசுகளுக்காய்
சிறகடித்துத் திரியும் பருந்துகளுக்கும்
கீரிப்பிள்ளைகளுக்கும் கூட
நாம்தானே காவல்காரர் கம்போடு !!!

ஹேமா(சுவிஸ்)
[ஞாபகங்கள் தொடரும் நாளை]

45 comments:

  1. //நாம் நடந்த விளையாடிய அதே இடங்கள்
    இன்னும் இருக்கிறதா?
    தேயிலை மலைகள்,றப்பர் காடுகள்,
    பறித்த பழ மரங்கள் இன்னும் எவ்வளவு.//

    மனதை கட்டிப் போட்டது இந்த வரிகள்......எத்தனை எத்தனை ஞாபகங்கள்...!!!!!

    அழகா எழுதியிருக்கீங்க ஹேமா !! ரசித்து வாசித்தேன்....

    அந்த "அகதிக்கிளியாய்" வார்த்தை என்னமோ செய்கிறது.

    ReplyDelete
  2. ஞாபகங்களை கொண்டாடும் உங்களுக்காக என்னுடைய ஒரு ஞாபகப் பதிவு.

    நேரமிருந்தால் படித்து பார்க்கவும்.

    http://amsyed.blogspot.com/2009/06/10.html

    ReplyDelete
  3. ஊர் நினைப்பு உள்ளதை
    வாட்டுகிறது தோழியே . உன் மனம் எனக்கு புரிகிறது

    ReplyDelete
  4. இந்த கவிதை நிச்சையமாக வாசிப்பவர் எல்லோர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை . எனக்கும் அவ்வாறே . இந்த கவிதை ஈழத்தின் வரலாறு தெரியாமல் இருக்கும் மக்கள் வரலாறு படிப்பதுடன் இது போன்ற அவர்களின் வாழ்வை பற்றிய நினைவுகளை படிப்பதும் அவசியம் . இந்த கவிதை எல்லா தமிழனும் படிக்க வேண்டும் . இப்படி அழகிய வாழ்க்கை நிறைந்த தமிழர்களின் நிலை இன்று மயான பூமியாக காட்சி அளிப்பதை எல்லோரும் உணர வேண்டும் .

    ReplyDelete
  5. Nice recall of your young age frnd Hema.Athilum nathai,athai pidithu atharku palli mittai,ilam vayathil mahizhciyaaha irunthirukkireerhal.The girls photo also is fantastic.

    ReplyDelete
  6. நோஸ்டால்ஜிக் கவிதை. மிக வளமான கற்பனை செறிவு ஹேமா. same pinch. நானும் நட்பை பற்றித்தான் எழுதிகொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. துல்லியமான உணர்வுகளை வெளிக் காட்டுகிறது தோழி. நாட்டின் நினைவுகளும், நட்பின் நினைவுகளும் உலுக்கி எடுக்கின்றன. அழகு.

    ReplyDelete
  8. பிரிவின் வலிகள்!

    ReplyDelete
  9. கவிதை மிக அருமையாக இருக்கு. மனதுள் எதுவோ உடைகிறது.

    ReplyDelete
  10. ஹேமா மலைநாட்டுப் பக்கம் எங்க இருந்தீர்கள்? அட்டைக்கதை ஏதோ ஏதொ எல்லாம் ஞாபகம் வர வைத்துவிட்டடீர்கள்.

    \\நாம் உரக்கக் கத்துவதை
    அப்படியே திருப்பிக் கூறும் அதிசய மலைகள்.\\

    இரத்தோட்டைப் பக்கம் போகும்போது நாங்களும் இது தவறாமல் பண்ணுவது. மற்றது பலூன் அல்லது சொப்பீன் பாக் கொண்டுபோய் காற்றில் பறக்க விடுவது.

    \\நான் இங்கு அகதித் தமிழ்க் கிளியாய்
    வெளிநாட்டுக் கூண்டில்.\\

    நல்ல வரிகள்.

    மழைல நல்லாத்தான் விளையாடி இருக்கிறீங்கள்.

    ReplyDelete
  11. வரிகள் ஒவ்வொன்றும் வரைந்திடும் ஞாபகக்குறிப்புக்கள் இதயம் வருடிச்செல்கிறது ஹேமா. மீண்டும் ஒரு அருமையான படைப்பு

    ReplyDelete
  12. கலைந்த கனவுகள்
    கவிதை வரிகளில்
    காட்சியாய் விரிந்தன.

    அட்டைக்கடி, நத்தை பிடி, பாறைக்கரி பெயர் பொறிப்பு.......
    அருமை ஹேமா.

    ReplyDelete
  13. சக உதிரமே ,

    மனதைச் சற்றே பாரமாக்கிவிட்டாய் ..சோகமும், மேகமும் நிலையானதல்ல .. விடியல் வரும் ...

    "அகதித் தமிழ்க் கிளியாய் வெளிநாட்டுக் கூண்டில்" ..என்ன ஒரு வாக்கியம் ...என் மனதை சல்லடைக் கண்ணாய் துளைக்கிறது...

    தொடர்்து எழுதுக ...அன்பன் ..

    ReplyDelete
  14. மிக நல்ல கவிதைக்குரிய எல்லா அம்சங்களோடும் இருக்குது ஹேமா
    நல்ல முன்னேற்றம் உங்களின் கவிதையின் போக்குகளில்

    ReplyDelete
  15. "நிறத்தில் உருவத்தில் ஒன்றாய்.
    குணத்தில் ஒன்றாய்.
    இளமை தொலைந்துகொண்டிருக்க
    முதுமை முதுகில் ஏற
    அன்றைய நாட்களை மீண்டும் மீட்கையில்
    கண்களில் சொல்லொணாச் சோகம்.

    இது உங்களது டச்.

    சோகம் நிலையானதல்ல, விடிவு பிறக்கும், கவிதை அருமை.

    ReplyDelete
  16. இளம்பிராயத்து நினைவுகளை ஒவ்வொன்றையும் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ள இந்த கவிதை படிக்கும் அனைவரையும் அவரவர் சிறுவயதிற்கு கூட்டிச்செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்ப என் மனதில், சிறு வயதில் எங்கள் ஊரில் சாப்பிடக் கிடைத்த கொடிக்காபுளி, பனைநுங்கு,பனங்கிழங்கு,நாவல்பழம்,ஆயா தரும் தேங்காய் புட்டு, தோழியுடன் சேர்ந்து விளையாடிய கண்ணாமூச்சி மற்றும் சில்லாக்கு விளையாட்டு, தட்டாம்பூச்சி பிடித்து விளையாடிய நினைவுகள், பஞ்சுமிட்டாய் வாங்கி கைக்கெடிகாரமாய் கட்டிக்கொண்டதும், ஊர்த்திருவிழாவின்போது தோழிகள் அனைவரும் ஒரே கலரில் பட்டுபாவடை சட்டை அணிந்து மகிழ்ந்ததும், வீட்டுமுன் வளர்ந்து நிற்கும் கொய்யா மரத்து பழங்களை ஒருவர்தோள்மேல் ஒருவர் ஏறிநின்று பறித்து சாப்பிட்டதும், அடடா.... இன்னும் எத்தனையோ சொல்லிகொண்டும்போகும் அளவிற்கு இந்தக்கவிதை பெரும் தாக்கத்தை மட்டுமல்ல, மிகுந்த ஏக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது.

    ReplyDelete
  17. "அகதித் தமிழ் கிளியாய் வெளிநாட்டுக் கூண்டில்"

    இறைவனுக்கு சொந்தமான இந்த பரந்த பூமியில் யாருமே அகதிகள் இல்லை. நாம் அனைவரும் அவனது பிள்ளைகள். அவனது விருப்பப்படி வெவ்வேறு இடங்களில் பிறந்து சூழ்நிலையின் காரணமாக வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வருத்தப்பட வேண்டாம் பிரிய தோழியே.

    ReplyDelete
  18. அகதி தமிழ் கிளியாய்

    கிள்ளியது மனதை

    -------------------

    அழகான தோழமை

    -------------------

    முதுமை நரைகளுக்கு
    இளமை மை பூசி மீட்டிப் பார்க்கிறேன்.]]

    அழகு ஹேமா.

    ஞாபகங்களின் மீட்டெடுப்பு இலட்சம் வயலின்கள் சத்தமெழாமல் வாசிப்பது போன்றது ...

    ReplyDelete
  19. என் அதிகாலைக் கனவை பதிப்பாக வைத்துள்ளேன். பார்த்துவிட்டுச் செல்லுங்கள்...

    ReplyDelete
  20. வாங்க செய்ய்து.ரொம்ப நாளா என் பக்கம் காணல உங்களை சுகம்தானே.
    ஞாபகங்கள் என்றுமே இளமையானவை.சுகமானவையும்கூட

    மன்னிசுக்கோங்க செய்யது.
    உங்கள்"யூன் 10"பதிவு பார்த்தேன்.
    நான் இடையில் ஒரு மாத கால இடைவெளிக்கு மேல் பதிவுகள் போடாமல் மௌனித்து இருந்த வேளை உங்கள் இந்தப் பதிவு.மனதைக் கலக்கி வைக்கிறது.
    காதல் வார்த்தைகள் அமுங்கி அழுகின்றன.நினைவுகளைச் சுமந்தபடியே வாழ்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.தொகுத்து எழுதிய விதமும் அருமை.

    ReplyDelete
  21. //கவிக்கிழவன் ... ஊர் நினைப்பு உள்ளதை வாட்டுகிறது தோழியே . உன் மனம் எனக்கு புரிகிறது//

    யாதவன்,இந்தக் கவிதை என் வளர்ந்த காலத்து நினைவு.

    ***********************************
    //இராஜ்குமார் ...
    இந்த கவிதை நிச்சையமாக வாசிப்பவர் எல்லோர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை . எனக்கும் அவ்வாறே . இந்த கவிதை ஈழத்தின் வரலாறு தெரியாமல் இருக்கும் மக்கள் வரலாறு படிப்பதுடன் இது போன்ற அவர்களின் வாழ்வை பற்றிய நினைவுகளை படிப்பதும் அவசியம் . இந்த கவிதை எல்லா தமிழனும் படிக்க வேண்டும் . இப்படி அழகிய வாழ்க்கை நிறைந்த தமிழர்களின் நிலை இன்று மயான பூமியாக காட்சி அளிப்பதை எல்லோரும் உணர வேண்டும்.//

    வணக்கம் தோழரே இராஜ்குமார்.
    எங்கள் பூமியை அழிக்கிறது பிசாசுகள்.புத்தனும் பேசாமல் இருக்கிறான்.தொலைத்துவிட்டானாம் போதனைகளின் ஏடுகளை.
    காத்திருப்போம் திரும்பவும் எழுதும்வரை.

    **********************************
    //Muniappan Pakkangal said...
    Nice recall of your young age frnd Hema.Athilum nathai,athai pidithu atharku palli mittai,ilam vayathil mahizhciyaaha irunthirukkireerhal.The girls photo also is fantastic//

    வாங்க டாகடர்.இன்னும் தொடர்ந்து இரண்டு ஞாபகத் தொடர் வரும் முழுதுமாக.

    *********************************
    //கவிதை(கள்)... நோஸ்டால்ஜிக் கவிதை. மிக வளமான கற்பனை செறிவு ஹேமா. same pinch. நானும் நட்பை பற்றித்தான் எழுதிகொண்டிருக்கிறேன்.//

    வாங்க விஜய்.நட்புத்தான் எம் முதல் காதல்.அதை எப்படி மறக்க!எழுதுங்கள் வருவேன்.

    ReplyDelete
  22. //ஜெஸ்வந்தி ... துல்லியமான உணர்வுகளை வெளிக் காட்டுகிறது தோழி. நாட்டின் நினைவுகளும், நட்பின் நினைவுகளும் உலுக்கி எடுக்கின்றன.அழகு//

    ஜெஸி சில சம்பவங்கள் மறந்துவிட்டாலும் அந்த நினைவுகள் நிழல்போல மேகத்துக்குள் மிதப்பதுபோல அழகாயிருக்கும் எங்களுக்குள்.

    *********************************
    //வால்பையன் ... பிரிவின் வலிகள்!//

    வாலு வாங்க.கொஞ்சம் மனசு விட்டுப் பேசலாமே !நீங்க இப்பிடி ஒண்ணு எழுதுங்க.சுவாரஸ்யமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.நன்றி.

    *********************************

    //நையாண்டி நைனா ... கவிதை மிக அருமையாக இருக்கு. மனதுள் எதுவோ உடைகிறது//

    உங்கள் ஞாபகங்களும் திரண்டு வரும் எழுதுங்க நைனா.

    ReplyDelete
  23. //வாலு வாங்க.கொஞ்சம் மனசு விட்டுப் பேசலாமே !நீங்க இப்பிடி ஒண்ணு எழுதுங்க.சுவாரஸ்யமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.நன்றி.//

    உங்க அளவுக்கு எனக்கு மொழி ஆளுமை இல்லைங்க ஹேமா!
    நான் வேண்டுமானால் உரைநடையில் எழுதுகிறேன்!

    ஆனா நான் சீரியஸா எழுதுனா மக்கள், யார் எழுதி கொடுத்ததுன்னு கேக்குறாங்களே!

    ReplyDelete
  24. //சினேகிதி ... ஹேமா மலைநாட்டுப் பக்கம் எங்க இருந்தீர்கள்? அட்டைக்கதை ஏதோ ஏதொ எல்லாம் ஞாபகம் வர வைத்துவிட்டடீர்கள்.//

    தோழி நாங்கள் இரத்தினபுரிப் பகுதியில் டேனாக்கந்த என்கிற தோட்டத்தில் இருந்தோம்.எனக்கு மலையகம் அந்த மக்கள் நிறையப் பிடிக்கும்.மறக்கமுடியாத வாழ்வின் பக்கங்கள் அவை.

    **********************************

    //ஸ்.ஆ. நவாஸுதீன்... வரிகள் ஒவ்வொன்றும் வரைந்திடும் ஞாபகக்குறிப்புக்கள் இதயம் வருடிச்செல்கிறது ஹேமா. மீண்டும் ஒரு அருமையான படைப்பு//

    நவாஸ் இதன் தொடர் வரும் நாளைக்கு இன்னும் ஒன்று.

    **********************************

    //துபாய் ராஜா ... கலைந்த கனவுகள் கவிதை வரிகளில் காட்சியாய் விரிந்தன.//

    ராஜா,ஞாபகங்கள் நட்பு கலையாமல் எப்போதும்.

    ReplyDelete
  25. //வால்பையன்...உங்க அளவுக்கு எனக்கு மொழி ஆளுமை இல்லைங்க ஹேமா!
    நான் வேண்டுமானால் உரைநடையில் எழுதுகிறேன்!

    ஆனா நான் சீரியஸா எழுதுனா மக்கள், யார் எழுதி கொடுத்ததுன்னு கேக்குறாங்களே//

    தப்பு...அப்பிடி இல்ல ஏன் நீங்க மத்தவங்க சொல்றதைக் கவனிக்கிறீங்க.உங்களுக்கு சரின்னு படுறதை உங்களுக்கு முடிஞ்சதை எழுதுங்க.நீங்க நிறையவே எழுதுறீங்க என் கவனிப்பின்படி.மத்தவங்க சொல்ற விஷயத்தையெல்லாம் காது குடுத்துக் கேட்டீங்கன்னா எதுவுமே எழுத மாட்டீங்க.எழுத முடியாது.
    எழுதணும் நீங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. //செம்மொழி ... சக உதிரமே ,
    மனதைச் சற்றே பாரமாக்கிவிட்டாய் ..சோகமும், மேகமும் நிலையானதல்ல .. விடியல் வரும் ...

    "அகதித் தமிழ்க் கிளியாய் வெளிநாட்டுக் கூண்டில்" ..என்ன ஒரு வாக்கியம் ...என் மனதை சல்லடைக் கண்ணாய் துளைக்கிறது...

    தொடர்்து எழுதுக ...அன்பன்//

    வாங்க வணக்கம் செம்மொழி.
    அழகான பெயரோடு ஒரு தோழமை.

    நான் அகதி என்பதை நான் மறக்க விரும்பவில்லை.சொல்லச் சொல்லத்தான் அதனின்றும் வெளிப்பட வல்லமை பிறக்கும்.

    ********************************

    //நேசமித்ரன் ... மிக நல்ல கவிதைக்குரிய எல்லா அம்சங்களோடும் இருக்குது ஹேமா நல்ல முன்னேற்றம் உங்களின் கவிதையின் போக்குகளில்//

    நன்றி நேசன் என்றாலும் உங்கள் கவிதைகளுக்கும் அதனுள் புதைந்திருக்கும் சொற்களின் அற்புதஙகளுக்கும் என் கவிதைகள் இணை இல்லை.என்றாலும் உங்கள் பாராட்டுக்கள் என்னை இன்னும் வழி நடத்தும்.

    ********************************

    //கும்மாச்சி ... சோகம் நிலையானதல்ல, விடிவு பிறக்கும், கவிதை அருமை.//

    நன்றி கும்மாச்சி.நட்பின் நிழலும் ஆறுதலும் எதையும் மிஞ்சாத ஒன்று.அது அருகே இல்லாதபோது...!

    ReplyDelete
  27. மனசை தொடும் கவிதை ஹேமா! மிக மிக நல்லாயிருக்கு!

    ReplyDelete
  28. //uthira said...
    ஊர்த்திருவிழாவின்போது தோழிகள் அனைவரும் ஒரே கலரில் பட்டுபாவடை சட்டை அணிந்து மகிழ்ந்ததும், வீட்டுமுன் வளர்ந்து நிற்கும் கொய்யா மரத்து பழங்களை ஒருவர்தோள்மேல் ஒருவர் ஏறிநின்று பறித்து சாப்பிட்டதும், அடடா.... இன்னும் எத்தனையோ சொல்லிகொண்டும்போகும் அளவிற்கு இந்தக்கவிதை பெரும் தாக்கத்தை மட்டுமல்ல, மிகுந்த ஏக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது.


    "அகதித் தமிழ் கிளியாய் வெளிநாட்டுக் கூண்டில்"

    இறைவனுக்கு சொந்தமான இந்த பரந்த பூமியில் யாருமே அகதிகள் இல்லை. நாம் அனைவரும் அவனது பிள்ளைகள். அவனது விருப்பப்படி வெவ்வேறு இடங்களில் பிறந்து சூழ்நிலையின் காரணமாக வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வருத்தப்பட வேண்டாம் பிரிய தோழியே.//

    வாங்க உத்ரா.பெயர் சரியா?என்னைவிட நீங்க நிறைய விளையாடி இருக்கீங்க போல.
    இளமைக்காலம் ....நினைக்கவே இறக்கைகள் முளைத்திருந்த காலம் அது.அதுவும் வெளிநாடுகளில் பனிப்போருக்குள் சிக்கித் தவிக்கையில் அந்த எண்ணங்களே மனதைச் சூடேற்றிவிடுகிறது கொஞ்சம்.

    எப்படி யார் இல்லை என்று சொன்னாலும் நான் அகதிதானே தோழி.உங்கள் ஆறுதல் வார்த்தைக்கு மிக்க நன்றி தோழி.

    *********************************
    ஜமால்,என்ன இப்பிடி ஆச்சு,உங்கள் வருகையும் பின்னூட்டமும் இப்படித் தாமதம்?உங்கள் பதிவுகள் பக்கமும் வரமுடியவில்லை ஏன்?என்றாலும் உங்கள் வருகையும் கருத்தும் சந்தோஷம் தருகிறது.

    உப்புமடச் சந்திப் பக்கமும் பாருங்களேன்.

    ReplyDelete
  29. //முதுமை நரைகளுக்கு
    இளமை மை பூசி மீட்டிப் பார்க்கிறேன்.
    நீயும் வேணுமடி அதற்கு.
    சிட்டாய் சிறகடித்த கணங்களை
    மனக்குழிக்குள் இருந்து
    தோண்டி எடுக்கிறேன் நீயும் வா.//


    அத்தனை வரிகளும் அருமை

    ReplyDelete
  30. அன்றைய நிகழ்வுகளை
    இன்றைய நினைவுகளாக்கி
    வரைந்திருக்கின்றாய்..

    நினைவுகள் எல்லாம்
    நிழற் பிரதிகளாய்
    கனவுகள் எல்லாம்
    கானல் நீராய் மாறிவிட்ட
    கதை அல்ல காதை.

    ReplyDelete
  31. மைன்ட் ப்ளோவிங்.

    ReplyDelete
  32. நினைவுகளின் மீள்பதிவு....

    இனிமையான நாட்கள்
    மறக்க மனம் கூடுதில்லையே....

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  33. அஸ்தமனத்துக்குப்பிறகு சூரியன் உதயமாவதுபோல் நல்ல விடியல் விரைவில் ஏற்படும். நீங்களும் வல்லமை பெறுவீர்கள், உங்கள் கனவுகளும் நனவாகும் தோழி

    ReplyDelete
  34. //யாழினி ... மனசை தொடும் கவிதை ஹேமா! மிக மிக நல்லாயிருக்கு!//

    யாழினி வாங்கோ.நன்றி தோழி.
    *******************************

    சந்ரு நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  35. வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள் ஹேமா ஞாபங்களையும் கவிதையாய் வடித்துவிட்டீர்கள் கிரேட்...

    ReplyDelete
  36. சங்கர் கனவுகள் கானலாய்ப் போகலாம்.நினைவுகள் எங்கள்கூடவே வரும்.நன்றி உங்களுக்கு.

    *********************************

    //ஜெரி ஈசானந்தா. ... மைன்ட் ப்ளோவிங்//

    என்ன ஜெரி.இப்பிடி சொல்லிட்டா சரியா!நீங்க உங்க profile photo மாத்தினதுக்கு நன்றியும் சந்தோஷமும்.

    **********************************

    ஆரூரன் ஞாபகங்கள் நாளையும் கொஞ்சம் வரும் வாருங்கள்.

    *********************************

    நன்றி உத்ரா,காத்திருப்போம் காலங்களின் பதிலுக்காக.மீண்டும் உங்கள் வார்த்தைகள் மருந்தாக மனதில் நன்றி.

    *********************************

    வசந்த்,வரம் தருகிறாள் தேவதை நிறைய எழுது என்று...நன்றி படம் எனக்கும் பிடிச்சிருக்கு வசந்த்.

    ReplyDelete
  37. கவுஜையிலே தொடர் நல்லா இருக்கு

    ReplyDelete
  38. பொதுவாக கவிதையைப் படித்து பாராட்டுவதுண்டு.ஆனால் உங்கள் கவிதையைப் பாராட்டுவதற்கு முன் ஏதோ எண்ணங்களின் மூட்டத்தால் மூழ்கிப்போகிறேன். என் இளமைக் காலம் நினைவில் வந்தாலும்,உங்களின் வலி என்னமோ செய்கிறது.

    //
    அப்பறம்.... றப்பரா? ரப்பரா?
    //

    ReplyDelete
  39. அருமையாய் இருக்குடா ஹேமாம்மா, என்னா மாதிரியான மண்மொழிடா!கிறங்கி போகலாம்,யாரும்!உதிராவின் பின்னூட்டமும் மிக நெகிழ்வு!சித்தப்பா இன்று ஊர் போய்ட்டார்.அலைபேசியில் உன்னை பற்றியும் நிறைய பேசிக்கொண்டிருந்தார்.எங்கள் வீட்டு மனுஷியாகிவிட்டாய் நீயும்!உன் மின் முகவரி கிடைத்தால் சந்தோசம் ஹேமாம்மா.அண்ணாவின் மின் முகவரி,தொடக்க பள்ளி கவிதையில் இருக்கும்.நேரம் இருக்கும் போது தொடர்பு கொள்ளுங்கள்.நன்றிடா!

    ReplyDelete
  40. முதுமை நரைகளுக்கு
    இளமை மை பூசி மீட்டிப் பார்க்கிறேன்.
    நீயும் வேணுமடி அதற்கு.
    சிட்டாய் சிறகடித்த கணங்களை
    மனக்குழிக்குள் இருந்து
    தோண்டி எடுக்கிறேன் நீயும் வா.//

    இவ்வ‌ரிக‌ள் என‌க்குள்ளும் எதோ செய்கிற‌து.
    இழ‌ந்த‌தை நினைத்தால் அது சோக‌ம் க‌ல‌ந்த‌ சுக‌ம்.

    த‌ங்க‌ளின் ப‌திவு ந‌ச்!

    ReplyDelete
  41. தூரத்து தோழிக்கு,

    இக்கவிதையில் என்னால்​மொழி சாதுர்யம், வடிவம், படிம நேர்த்தி ​போன்ற தத்துவார்த்தங்கள் மேல் கவனம் எடுக்க முடியவில்லை. கவிதையில் உண்மையாய் உறைந்திருக்கும் இயல்பான அன்பு என்னை நெகிழ​வைக்கிறது.

    ஏதோ ஒரு அன்னியோன்யம் என்னை, இக்கவிதை காட்டும் தளத்தை (ரத்னபுரி) மனதுக்குள் பச்சை சூழ் வெளியாய் படம் வரைந்து கொள்கிறது.

    நான் மனதுள் வரையும் படம் நிறத்தில் உருவத்தில் அல்லது குணத்தில் நீங்கள் வாழ்ந்த மலையடிவார ஊர்​போலவும்​ இருக்குமா? என்ற நினைப்பு​மேலும் சிலிர்க்க வைக்கிறது.

    மீண்டும் மீண்டும் மனம் பச்சை அடர்ந்த ஊரை வரைந்து ​கொண்டிருக்கிறது. ஒரு கவித்துவமான அமானுஷ்யத்துக்குள் பிரவேசிக்கிற உணர்வு!

    வாசிப்பவர்களுக்குள் இருக்கும் சில அசையா நினைவுகளை, இணைத்து சலனப்படுத்துவதுதான் கவிதையின் ​வெற்றி!

    அதை உங்களின் மலையடிவாரத்துத் ​தோழி செய்துவிட்டது!

    உறைந்து கிடக்கும் நினைவுத் துகள்கள் உருப்பெற்று சலனமிடுகின்ற பிரேமை என்னுள்!

    இது வித்யாசமாக இருக்கிறது!

    நன்றியும் வாழ்த்துமாக..

    ReplyDelete
  42. மீண்டும் போகத்தூண்டும் அந்த மலையடி வாரத்துக்கு உங்கள் கவிதை மனதைக் கனக்கவைக்கினறது . தோழியின் நினைவு மறக்கமுடியாது.

    ReplyDelete
  43. இத்தனை வலையுலக உறவுக்ளுடன் வலம் வந்த அக்காச்சி என்னோடும் பின்னூட்ட்த்துட்ன் வருவது என் பாக்கியம். நன்றி அக்காள்

    ReplyDelete