Tuesday, August 18, 2009

பிசாசுகள்...

பிசாசுகள்...
வாழ்வின் சுவையறியாப் பிஞ்சுகள் மேல்
வெந்நீர் ஊற்றும் கொடிய பிசாசுகள்.
இதழ்கள் பிரிந்து துடிக்கும்
பூக்களை நிராகரித்து
வேர் அறுத்துச் சிரிக்க
அந்தப் பிசாசுகளால் மட்டுமே முடிகிறது.

புத்தனின்
பாதையில் நடந்தால் அல்லவோ
பூக்களின் அவலம் புரிந்திருக்கும்.
புழுக்களின் மேல் அல்லவா
படுக்கை போட்டுக் கொடுத்திருக்கிறது.
கொடுமையாய் இல்லை.

இடதும் வலதுமாய்
நாடிகள் ஊடே என் துடிப்பைப் பார்.
நரம்புகள் பிடுங்கப்பட்டு
ஆசைகள் புதைக்கப்பட்ட பிஞ்சுகளை
முட்கம்பிகளுக்கூடாக
காணக்கூட
கண் வேண்டாம் என்கிறேன் நான்.

இழப்புக்களும் பறிகொடுத்தலும்
இரத்த ஆற்று நீச்சலும்
பழக்கமில்லை உனக்கு.
அறிய மாட்டாய் நீ.

தலை தடவி...நீர் ஊற்றி
தளிர் ஒன்று தளைக்கும் வரை
தீக்குள் அவியும்
என் நெஞ்சு ஆறா.

பிசாசே ஓடிவிடு.
பச்சையம் உயிர்க்க வழிவிடு.
எங்கள் பிருந்தாவனங்களுக்குள்
ஏன் புகுந்தாய்.
ஆணிவேரின் அடியிருப்பை
அடியோடு ஏன் அகற்றினாய்.
உன் கரம் காத்து ஓடிவிடு.

அது வரை
புழுக்களோடு
சிநேகம் கொண்டாவது
உன் கை கடிப்பேனே தவிர
உன்னோடு ஒத்துப் போக
என் மனம் சாயா !!!

ஹேமா(சுவிஸ்)

49 comments:

  1. //இடதும் வலதுமாய்
    நாடிகள் ஊடே என் துடிப்பைப் பார்.
    நரம்புகள் பிடுங்கப்பட்டு
    ஆசைகள் புதைக்கப்பட்ட பிஞ்சுகளை
    முட்கம்பிகளுக்கூடாக//


    :((((

    ஒவ்வொரு முறையும் காணும் காட்சி படங்கள் மனதில் பாரம் ஏற்றிச்செல்கிறது!

    ReplyDelete
  2. என்னா டெரர் தலைப்பு ...

    ReplyDelete
  3. வெந்நீர் ஊற்றும் கொடிய பிசாசுகள்.
    இதழ்கள் பிரிந்து துடிக்கும்
    பூக்களை நிராகரித்து
    வேர் அறுத்துச் சிரிக்க]]


    வேதனை ...

    ReplyDelete
  4. நரம்புகள் பிடுங்கப்பட்டு
    ஆசைகள் புதைக்கப்பட்ட பிஞ்சுகளை
    முட்கம்பிகளுக்கூடாக
    காணக்கூட
    கண் வேண்டாம் என்கிறேன் நான்.]]


    இந்த வரிகளை படிக்கும் நிலை கூட அப்படித்தான் இருக்கு

    ReplyDelete
  5. அது வரை
    புளுக்களோடு
    சிநேகம் கொண்டாவது
    உன் கை கடிப்பேனே தவிர
    உன்னோடு ஒத்துப் போக
    என் மனம் சாயா !!!]]


    வேதனை நிலைகளின் உச்சம்.

    ReplyDelete
  6. தமிழனாய் பிறந்த்தற்கு வெட்கப்படுகின்றேன்...!
    :(

    ReplyDelete
  7. தமிழர் நெஞ்செல்லாம் ரணமாக்கிய பிசாசுகளை இந்த ஆயுள் உள்ளவரை எமது மனம் மறக்காது.

    ReplyDelete
  8. //பிசாசே ஓடிவிடு.
    பச்சையம் உயிர்க்க வழிவிடு.
    எங்கள் பிருந்தாவனங்களுக்குள்
    ஏன் புகுந்தாய்.
    ஆணிவேரின் அடியிருப்பை
    அடியோடு ஏன் அகற்றினாய்.
    உன் கரம் காத்து ஓடிவிடு.

    அது வரை
    புளுக்களோடு
    சிநேகம் கொண்டாவது
    உன் கை கடிப்பேனே தவிர
    உன்னோடு ஒத்துப் போக
    என் மனம் சாயா !!!//


    அவ‌னோடு ஒத்துபோக‌ நாம் என்ன‌ எட்ட‌ப்ப‌ன்க‌ளா? அல்ல‌து க‌ருணாக்க‌ளா?, ஆனா ஒன்று ஹேமா ஆணிவேரை அக‌ற்றிய‌தாக‌ நான் எண்ண‌வில்லை!

    ReplyDelete
  9. ஆயில்யன்,நிறைய இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம் சுகம்தானே.

    என்ன செய்ய மனம் வலித்தாலும் பார்த்து-கேட்டு அனுபவிக்கத்தானே வேணும்.
    எங்க நிலைமை அப்பிடியாப் போச்சு.

    ReplyDelete
  10. //நட்புடன் ஜமால் said...
    என்னா டெரர் தலைப்பு ...//

    நன்றி ஜமால்.நிலைமை டெரர் போலத்தான்.நாங்கள் என்ன ஆயுதம் எடுப்பது என்பதை எம் எதிராளியே தீர்மானிக்கிறான் என்பது உண்மையாகிறதே !

    ReplyDelete
  11. வாழ்வின் சுவையறியாப் பிஞ்சுகள் மேல்
    வெந்நீர் ஊற்றும் கொடிய பிசாசுகள்.
    இதழ்கள் பிரிந்து துடிக்கும்
    பூக்களை நிராகரித்து
    வேர் அறுத்துச் சிரிக்க
    அந்தப் பிசாசுகளால் மட்டுமே முடிகிறது.

    ராட்சசப் பிசாசுகள்

    ReplyDelete
  12. இடதும் வலதுமாய்
    நாடிகள் ஊடே என் துடிப்பைப் பார்.
    நரம்புகள் பிடுங்கப்பட்டு
    ஆசைகள் புதைக்கப்பட்ட பிஞ்சுகளை
    முட்கம்பிகளுக்கூடாக
    காணக்கூட
    கண் வேண்டாம் என்கிறேன் நான்.

    விரக்தி, கோபத்தின் உச்சகட்டம் தெரிகிறது ஹேமா எனினும் வடிகால் இல்லையே

    ReplyDelete
  13. வேதனை ...

    ReplyDelete
  14. சி.கருணாகரசு said...

    ஹேமா ஆணிவேரை அக‌ற்றிய‌தாக‌ நான் எண்ண‌வில்லை!

    இதுதான் என் எண்ணமும்

    ReplyDelete
  15. //அது வரை
    புளுக்களோடு
    சிநேகம் கொண்டாவது
    உன் கை கடிப்பேனே தவிர
    உன்னோடு ஒத்துப் போக
    என் மனம் சாயா !!!//

    எங்கள் தமிழர் மனங்களும் தான் சகோதரி.

    நல்ல உணர்ச்சியுள்ள பகிர்வு. வாழ்த்துக்கள்.

    நன்றி,
    க. பாலாஜி

    ReplyDelete
  16. அது வரை
    புளுக்களோடு
    சிநேகம் கொண்டாவது
    உன் கை கடிப்பேனே தவிர
    உன்னோடு ஒத்துப் போக
    என் மனம் சாயா !!!

    ரொம்ப வேதனையா இருக்கு ஹேமா

    ReplyDelete
  17. இதே கருத்துடன் நான் படித்த கவிதை இது ஹேமா

    ”பூக்கள் கனிகளாகும் காட்டில்
    குழந்தைகளின் அழுகிய சடலங்கள்

    உதடுகளில் குருதி வழிய
    ஓங்கி ஒலிக்கிறது சாத்தானின் குரல்
    புத்தம் சரணம் கச்சாமி

    தமிழனின் விழிகளை
    தோண்டியெடுத்த அதன் குரூரம்
    தரையிலிட்டு நசுக்கியது

    கர்ப்பிணியின் வயிறு கிழித்து
    சிசுக்களை குதறின் கூர் நகங்கள்

    பல்லாயிரம் உயிர்களை
    பலி கொண்டும் அடங்காப் பெரும்பசி
    தமிழனின் கடைசித்துளி தேடி அலைகிறது

    தமிழ் மந்திரம் ஓதும்
    போலிப்பூசாரிகள்
    ஓட்டு வேட்டையாடி
    உடுக்கை அடித்த ஒலியில்
    புறப்பட்ட பொய்கடவுள்கள்
    சாத்தானுடன் விருந்துண்டு திரும்பினர்

    நாதியற்றவன் கண்ணீர்
    தீயாய் மாறி சுட்டெரிக்கும்

    சாத்தனை ஏவியவன்
    சாத்தானால் சாவான்
    துணை போனாவனும்
    துடித்து மாள்வான்

    தேடும் கண்களுக்கு
    தெரியாமல் இருந்தாலும்
    கடைசி வெற்றி கடவுளுக்கே”

    ReplyDelete
  18. பிசாசே ஓடிவிடு.
    பச்சையம் உயிர்க்க வழிவிடு.
    எங்கள் பிருந்தாவனங்களுக்குள்
    ஏன் புகுந்தாய்.
    ஆணிவேரின் அடியிருப்பை
    அடியோடு ஏன் அகற்றினாய்.
    உன் கரம் காத்து ஓடிவிடு.


    அருமையான வரிகள் வலியுடன்

    ReplyDelete
  19. அது வரை
    புளுக்களோடு
    சிநேகம் கொண்டாவது
    உன் கை கடிப்பேனே தவிர
    உன்னோடு ஒத்துப் போக
    என் மனம் சாயா !!!
    ஹேமா, நெஞ்சில் நிற்கும் வரிகள்.
    "ஜெரி ஈசானந்தா"-மதுரை.

    ReplyDelete
  20. அருமை
    வலியை சொல்லுதல் இக்கவிதை

    ReplyDelete
  21. அப்பா...ஆக்ரோசமான வரியும் வலியும் ஹேமா.ஓட,விலக வழி கிடைக்காத போது விலங்கு கூட மூர்க்கம் காட்டும்.விலங்கினும் கீழான நம் இயலாமையை என்ன சொல்லட்டும்.ஜமால்,நவாஸ் சொல்வது போல் தலைப்பும் வரிகளும் வலியை மேலும் உயிர்க்கிறது.வலியும் உயிர்ப்பும் இயங்க உதவும்.உதவட்டும்...

    ReplyDelete
  22. //பிசாசே ஓடிவிடு.
    பச்சையம் உயிர்க்க வழிவிடு.
    எங்கள் பிருந்தாவனங்களுக்குள்
    ஏன் புகுந்தாய்.
    ஆணிவேரின் அடியிருப்பை
    அடியோடு ஏன் அகற்றினாய்.
    உன் கரம் காத்து ஓடிவிடு.//

    உண்மைதான் தோழி. நீங்கள் சொல்வதுபோல் எம் நாட்டில் பிசாசுதான் குடி கொண்டு விட்டது. அதுதான் இத்தனை அழிவைத் தந்து விட்டது.

    ReplyDelete
  23. //அது வரை
    புளுக்களோடு
    சிநேகம் கொண்டாவது
    உன் கை கடிப்பேனே தவிர
    உன்னோடு ஒத்துப் போக
    என் மனம் சாயா !!!//

    ஆழமான வரிகள் ஹேமா...
    பிஞ்சுகளை நினைத்தால் தான் மிகவும் வலிக்கிறது... பட்டாம்பூச்சியாய் பறக்க வேண்டிய காலத்தில் இப்ப்படி இரும்பு வெளிகளுக்கு பின்னால் ஏக்கம் நிறைந்த கண்களுடன்... கொடுமை...
    காலம் மாறும்.. நம்பிக்கையோடு காத்திருப்போம்...

    ReplyDelete
  24. வழிகள் வலி தருபவையா

    விழி கண்ணீர் துளிகள்

    புத்தன் பெயரில் பித்து

    பன்னீரில் குளிக்க வேண்டிய

    ரோஜாக்கள் வெந்நீரில் இறக்கின்றது

    ReplyDelete
  25. அமைதியின் தேசம்

    மயான அமைதியில்

    புத்தன் அழுகிறான்

    ஏன் சிலரின் மனதில்

    இருந்தோம் என்று எண்ணி

    ReplyDelete
  26. ஹேமா,
    வலியின் உணர்வுகளை ஆழ்ந்து கூறும் இக்கவிதை அருமை. வாசிப்பவரையும் வலியை உணரச் செய்கிறது.

    //புளுக்களோடு//
    புழுக்களோடு என்பதுதானே சரி ?

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  27. வலி மிகுந்த வார்த்தைகள் தோழி..:-((((((

    ReplyDelete
  28. //டக்ளஸ்... said...
    தமிழனாய் பிறந்த்தற்கு வெட்கப்படுகின்றேன்...!//

    டக்ளஸ் என்ன செய்யலாம்.
    பிறந்திவிட்டோமே .அதுவும் ஈழத்தில்.உண்மை சொன்னால் உங்கள் பெயரிலும் ஒரு தமிழினத் துரோகி எங்கள் தேசத்தில்.

    ReplyDelete
  29. //துபாய் ராஜா said...
    தமிழர் நெஞ்செல்லாம் ரணமாக்கிய பிசாசுகளை இந்த ஆயுள் உள்ளவரை எமது மனம் மறக்காது.//

    ராஜா மறக்காமல் இருப்பதே இன்றைய தேவையும் பலமும்.

    ReplyDelete
  30. //கருணாகரசு...அவ‌னோடு ஒத்துபோக‌ நாம் என்ன‌ எட்ட‌ப்ப‌ன்க‌ளா? அல்ல‌து க‌ருணாக்க‌ளா?, ஆனா ஒன்று ஹேமா ஆணிவேரை அக‌ற்றிய‌தாக‌ நான் எண்ண‌வில்லை!//

    கருணாகரசு நம்பிக்கைகளின் கைகளில்தான் இவ்வளவு காலமும் வாழ்ந்தோம் இன்னமும்...

    இன்றைய செய்தி..."முகாம்களில் இருக்கும் கூடாரங்களில் எலிகளே வாழ முடியும்" என்றும் அங்கு மனிதர்கள் பல மாதங்களாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
    ஆனந்த சங்கரி"

    ReplyDelete
  31. நன்றி நவாஸ் உணர்வின் பகிர்வுக்கு.

    *********************************

    ஆனந்த் நன்றி.வார்தைகள் கிடைக்காத பகிர்வுக்கு.

    ***********************************

    பாலாஜி,வாங்க.
    முதல் வருகையே வருத்ததோடு. வரவேற்றுக்கொள்கிறேன்.நன்றி .

    ReplyDelete
  32. சக்தி அருமையான கவிதையோடு உங்கள் உணர்வு கலந்த பின்னூட்டம்.என்ன தோழி செய்யலாம்.மனம் அழுவதை வரிகளாக்குவோம்.முடிந்தவர்கள் முயற்சிக்கட்டும்.

    *********************************

    வாங்க ஜெரி,மனங்களின் பாரத்தொடேயே முதல் வருகை.நன்றி.இன்னும் வாங்க.

    ******************************

    நேசன் வாங்க.நன்றி.ஊருக்குப் போனாலும் எஙகளையும் மறக்காம வாறீங்க.
    ஊரில எல்லாரும் சுகம்தானே.

    ReplyDelete
  33. ////தலை தடவி...நீர் ஊற்றி
    தளிர் ஒன்று தளைக்கும் வரை
    தீக்குள் அவியும்
    என் நெஞ்சு ஆறா.///

    மனம் ஓவென்று அழுகிறது.....

    உங்கள் கவிதைகள் எதையோ ஒவ்வொரு முறையும் சிந்திக்க வைக்கிறது.... வாழ்த்துக்கள் ஹேமா அக்கா........

    ReplyDelete
  34. Aasaihal puthaikkappatta pinjuhalai-really terrific Hema.Pisasu odum naal varum nichayamaaha.

    ReplyDelete
  35. //பிசாசுகள்...
    வாழ்வின் சுவையறியாப் பிஞ்சுகள் மேல்
    வெந்நீர் ஊற்றும் கொடிய பிசாசுகள்.
    இதழ்கள் பிரிந்து துடிக்கும்
    பூக்களை நிராகரித்து
    வேர் அறுத்துச் சிரிக்க
    அந்தப் பிசாசுகளால் மட்டுமே முடிகிறது//


    என்ன சொல்வதென்று தெரியவில்லை மனம் வேதனைப்படுகின்றது.

    ReplyDelete
  36. பிணம் தின்னும் பிசாசுகள்,புத்தனை நினைப்பதும் இல்லை,மதிப்பதும் இல்லை. தலை நிமிர்ந்த காலம் போய் தலை சொறியும் காலம் இது. வலிக்கிறது, என்ன சொல்ல, நம்மிடையேயும் பல ஓநாய்கள்,நம் இரத்த ருசிக்காக அலைகிறது.காட்டிக் கொடுத்து விட்டு காரில் அலைகிறது வெட்கம் ஏதுமின்றி.

    வலி(மை)யான வார்த்தைகள்.

    ReplyDelete
  37. :-((
    மனம் வலிக்கின்றது என்று சொல்வதத்தவிர எதுவும் சொல்ல முடியா வலியோடு...

    ReplyDelete
  38. வாங்க ராஜாராம் அண்ணா.என்ன செய்ய.மனதின் அவல அழுகையை இப்படித்தான் ஆற்றிக்கொண்டிருக்க வேண்டியிருக்கு.எங்கள் நிலைமை ?

    ********************************

    ஜெஸி,எங்கள் நாடு பிசாசுகளின் ஆளும் நாடாகவே ஆகிவிட்டது.வேப்பிலை அடிக்க ஆள் இல்லைத்தானே !

    ***********************************

    நிலா காத்திருப்புக்களும் நம்பிக்கைகளுமே எங்கள் வாழ்வாகிவிட்டது.எங்கள் பிஞ்சுகளின் எதிர்காலம் ?

    ***********************************

    மேவீ,உங்கள் வரிகள் இன்னும் மனதைக் கலங்க வைக்கிறது.இப்போ சொல்லுங்கள் என் பெயருக்கு முன்னால் சுவிஸ் என்பதை எடுத்துவிட்டு இலங்கை என்று போட்டுக்கொள்ளவா ?

    ReplyDelete
  39. வாசு அண்ணா,நன்றி.எழுத்துப்பிழை மாற்றிவிட்டேன்.என் பிழைகளைச் சொல்லித் தாருங்கள் இன்னும் கற்றுக்கொள்வேன்.

    என் வலியை பகிர்ந்துகொண்டேன் அண்ணா.யார்தான் என்ன செய்யமுடியும் என்ற கேள்விக்குறியின் முதுகில்தான் என் மக்கள் !

    ********************************

    கார்த்தி,இன்னும் என்ன நடக்கிறதோ...என்கிறமாதிரித்தானே நிலைமை !

    ********************************

    வாங்க மகி.அதென்ன ரெட் மாதவ் மாதிரி ரெட்மகி?சந்தோஷம் வந்ததுக்கு.இனி அடிக்கடி சந்திப்போம்.வாங்க.

    ReplyDelete
  40. வாங்க வணக்கம் மணிவண்ணன்.கலங்கிய மனங்களோடு கை கோர்த்துக்கொள்வோம்.நன்றி.
    அடிக்கடி சந்திக்கலாம் தோழரே.

    ***********************************

    அபூ வாங்க.கதை சொல்வதும் கேட்பதுமே வாடிக்கையாகிவிட்டது ஈழத்தமிழன் வாழ்க்கை.

    ********************************

    நன்றி டாகடர்.உங்களோடு என் வேதனைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
    ஆறுதல் தருகிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  41. வாங்க ஞானம்.உதவிகள் செய்தாலும் கிடைக்கப்பெறாத நிலையிலேயே என் மக்களின் நிலைமை.ஆனால் அவர்களோ எலிகளை அடைத்து வைத்திருப்பதாகக் கொக்கரிக்கிறார்கள்.யார் சொல்லுக்கும் செவி கொடுப்பதாக இல்லை.அதற்கு எங்கள் எட்டப்பரும் கை கொடுக்கிறார்கள்.

    ***********************************

    கலை சொல்ல ஏதுமில்லையா இல்லை சொல்லி முடீத்துவிட்டீர்களா !

    ***********************************

    பெருமாள்,நன்றாக எங்களை எங்கள் துரோகிகளை இனம் பிரிக்கிறீர்கள்.
    இன்றும் கருணா சொல்லியிருக்கிறார்.
    புலிகளுக்கு இனி தலைமை வகிக்க அங்கு யாரும் இல்லை என்று.
    உள்வீட்டுக்குள் இருந்தவனுக்கு தெரியும்தானே கொல்லைப்புறம் எதுவென்று.

    ********************************

    அமுதா வார்த்தைகளை எழுத்துக்களாக்கி
    வலி குறைப்போம் தோழி.

    *******************************

    தமிழ்ப்பறவை அண்ணா வார்த்தைகளைத் தேடி மீண்டும் பறந்து வாருங்கள்.உயிர் இருந்தால் ஒரு துளி ஆறுதல் தர.

    ReplyDelete
  42. ஹேமா,

    உங்கள் வரிகளுக்கே மருந்திட வேண்டியிருக்கிறது. வரிக்குவரி வலியைச் சுமந்தபடி. அங்கே வதைப்படும் நம் உறவுகளுக்காக எழுத்துக்களைத் தவிர எதுவும் செய்ய இயலவில்லையே.

    ReplyDelete
  43. சோகங்கள் வேதனைகள் வலிகள் இதுவே வாழ்க்கையாகி விட்டது

    ReplyDelete
  44. இந்தக் கவிதையை படிக்கும்போது அழுகைதான் வருகிறது... அத்தனையும் நம் உறவுகளின் நிலை சொல்கின்றது...

    அத்தனை வரிகளுக்கு முத்துக்களே...
    தமிழனாய் பிறந்ததைத் தவிர நாம் செய்த தவறு என்ன என்று தெரியவில்லை..

    தமிழனாய் பிறந்ததில் பெருமைப்பட வேண்டும். வீரத் தமிழனவன் காலத்தில் வாழ்ந்தோம் என்று...

    ReplyDelete
  45. I am not sure where you're getting your info, but good topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for great info I was looking for this info for my mission.
    Also see my website: Wedding Photographer in Yorkshire

    ReplyDelete