Sunday, May 17, 2009

தவிடு தின்னும் தமிழன்...

தூங்கமுடியா...
தூக்க முடியாச் சுமைகளாலே
நோய்களின் இடுக்குப் பிடிக்குள் நான்.
நுரை கக்கிய சவர்க்காரத் துண்டாய்
அடி நீருக்குள் அமிழ்ந்து கிடக்கிறேன்.
எழுத்துக்கள் குமிழியாய் எழுந்து
கண்ணீராய் சுரந்தபடி.

பெருந்துயரப் பாம்பொன்று என்னை
விழுங்கியும் கக்கியுமாய்.
அடங்காமல் மீண்டும்...மீண்டும் பற்றியெரியும்
போர்த்தீயின் சுவாலை
உடலையும் உள்ளத்தையும் சுட்டபடி.

என் இனத்தின் அவல ஓலம்
இரைச்சலாய் செவிப்பறை தெறிப்பதாய்.
இரத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் என் உறவுகள்.
நீ...ண்டகாலக் காய்ந்த இரத்த வாடையில்
நனைந்தும் ,உணர்ந்தும் ,கேட்டுமான மன ஓலங்கள்
இரவில்கூட அசந்து உறங்காதபடிக்கு.

கால்நடைகளுக்குக்கூட இடைநேரத் தீனி போட்டவன்.
வரும் விருந்து காத்திருந்து
வரவேற்ற வன்னித் தமிழன்-இன்று
தவிடு தின்னும் இனமாய்.
தான் தவழ்ந்த மண்ணே தன் காயத்து மருந்தாய்.
எலும்பில் தோல் தடவிய மனித எச்சக் குவியல்கள்
குமுறும் மனதால் மறக்க இயலவில்லை.

தீர்ப்பின் முட்டைகளுக்குள்
உயிர்கள் முழி பிதுங்கியபடி.
உடைக்கும் சொண்டுகள்
அலட்சியமாய் அல்லது திராணியற்றதாய்
அல்லது விலங்கிடப்பட்டதாய்.

சமாதானப் பருந்துகள்
ஒவ்வொரு முறை பறக்கையிலும்
இலவங்காய்க்காய் காத்திருக்கும் கிளியாய்
கிழிந்துவிடும் என் மனம்.
பனியின் விறைப்பை மிஞ்சி
முடங்கிகொள்ளும் ஏமாற்றம்.

உணவின் வாசனை
மூக்கின் நர்ம்புகளை உள் இழுத்தும்
பசியாத வயிறு.
மனம் முட்டிக் கிடந்தும்
எழுத முடியாக் கரங்கள்.

வேண்டுதலா எமக்கு.
பைத்தியமா எங்களுக்கு.
அடுத்த வீட்டிற்க்குக் கூட
கரைச்சல் தராத நாங்கள்
அடுத்தவன் நாட்டுத் தெருவில் கூச்சல் போட.
அதற்கா வந்தோம் அகதி முகவரி தேடி.
உண்ணாவிரதமும்...ஊர்வலமும்
கொடிகளும்...கூச்சல்களும் எதுவரை!
காக்கும் கரங்கள் எதுவுமின்றி.
இரங்கி எம்மை உணர மறுக்கும் உள்ளங்கள் இன்றி.

கனதூரம் கடந்த பின்னும்
என் தேசத்தின் திசையிலேயே என் மனப்பறப்பு.
பரிதாபம் பரிகசிக்க படுகிறான் பாடு தமிழன்.
அவலமும் களைத்துவிட
சகிக்கமுடியா அவதியோடு
உணர்விழந்து தவிக்கிறது என் புலம்பல் !!!

அன்பின் என் இனிய நண்பர்களுக்கு,
மனம் சரியில்லை.அதனால்தான் உங்கள் தளங்களைப் பார்க்கவோ
பார்த்துப் பின்னூட்டம் இடவோ மனமும் நேரமும் இல்லாத நிலை.
மன்னித்துக்கொள்ளுங்கள்.அதோடு இன்னும் ஒரு மாத விடுமுறையில் கனடா போகிறேன்.வந்து எப்பவும்போல குழந்தைநிலாவில் சுறுசுறுப்போடு சந்திப்பேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

ஹேமா(சுவிஸ்)

18 comments:

  1. மனம் லேசாகி.. பயணம் நல்லபடி அமையட்டும்:)

    ReplyDelete
  2. மனதின் வலி கன்னத்தில் வழிந்தோடுகிறது ஹேமா. வார்த்தைகள் வெக்கப்பட்டு வெளிவர மறுக்கிறது. வேறு என்ன சொல்ல?

    ReplyDelete
  3. எங்க போய்யிருந்தீங்க?? ரொம்ப நாள கானல்ல!

    ReplyDelete
  4. சான்ஸே இல்லைங்க... இன்னிக்குத்தான் உங்க தளத்துக்கு வந்து பார்த்தேன்.. ஆளையே காணோம்னு!!!! உங்களுக்கு 100 ஆயுசு!!!

    கவிதை அப்பறமா வந்து படிக்கிறேன்!!

    ReplyDelete
  5. என் இனத்தின் அவல ஓலம்
    இரைச்சலாய் செவிப்பறை தெறிப்பதாய்.
    இரத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் என் உறவுகள்.
    நீ...ண்டகாலக் காய்ந்த இரத்த வாடையில்
    நனைந்தும் ,உணர்ந்தும் ,கேட்டுமான மன ஓலங்கள்
    இரவில்கூட அசந்து உறங்காதபடிக்கு

    வலிக்கின்றது படிக்கின்றபோதே

    ReplyDelete
  6. கால்நடைகளுக்குக்கூட இடைநேரத் தீனி போட்டவன்.
    வரும் விருந்து காத்திருந்து
    வரவேற்ற வன்னித் தமிழன்-இன்று
    தவிடு தின்னும் இனமாய்.

    கையறு நிலையில் நாங்கள்

    ReplyDelete
  7. கவிதையில் அந்த வலி தெரிகின்றது.
    இதுவும் கடந்து போகும்னு ஒரு பழமொழி உண்டு அது போல எல்லாம் கடந்து போய் விடும்.
    உங்கள் பயணம் உங்கள் மனதை
    லேசாக்கட்டும். மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  8. \\மனம் முட்டிக் கிடந்தும்
    எழுத முடியாக் கரங்கள்.\\


    கடின நிலை ...

    ReplyDelete
  9. வேதனையான சமயங்கள்.. மனதை தேற்றிக் கொண்டு ஊர் போய் வாருங்கள் தோழி.. குழந்தை நிலாவுக்கு என் அன்பான ஆசிகள்..

    ReplyDelete
  10. The Tamil Tiger supremo, Velupillai Prabhakaran, has been shot dead by Sri Lankan forces as he tried to stage a dramatic breakout from the army encirclement, Sri Lankan government confirmed today in a statement. Prabhakaran was in a small convoy of a van and ambulance along with several close aides which tried to drive out of the battle zone, but was attacked and killed.

    http://www.timesnow.tv/videoshow/4317131.cms

    ReplyDelete
  11. வழக்கம் போல் கவிதை வரிகளில் வலிகள்...

    பயணத்தின் வழியில் உங்கள் வலிகள் கொஞ்சம் குறையட்டும்...சென்று வாருங்கள் ஹேமா...

    ReplyDelete
  12. Kakkum karangal ethuvum inri-relax Hema.

    ReplyDelete
  13. //தூங்கமுடியா...
    தூக்க முடியாச் சுமைகளாலே
    நோய்களின் இடுக்குப் பிடிக்குள் நான்.
    நுரை கக்கிய சவர்க்காரத் துண்டாய்
    அடி நீருக்குள் அமிழ்ந்து கிடக்கிறேன்.
    எழுத்துக்கள் குமிழியாய் எழுந்து
    கண்ணீராய் சுரந்தபடி.///

    வலிகளில் நானும்
    பயணம் நன்றாக இருக்கட்டும்

    ReplyDelete
  14. ஆளையே காணும் ரெம்ப நாளா?????

    ReplyDelete
  15. பிசாசு வென்றிருக்கும்
    இந்த சூதாட்டத்தில் அரிந்து கொடுத்தாயிற்று

    உயிர் பருகத்தந்த பாகங்களை
    காவலிருந்த கருவறைகளை
    சுரக்கத் துவங்காத விரைப்பைகளை

    தாள இயலாததாய் இருப்பது
    துரோகத்தின் துயர் மிகு தீவதைகளை
    இறையாண்மையின் பெயரால்
    பிள்ளைக்கறி தின்னும் நீதி தேவதைகளை
    துப்பாக்கிகள் தாழ்ந்ததும் அகதிகள்
    கைதிகளாவதை

    ஒரு அபத்தமாக
    ஒரு முடிந்த கொடுங்கனவாக
    ஒரு பைத்தியக்காரனின் திமிராக
    நசியத் துவங்கும் நம்பிக்கைகள்
    மாற்ற துவங்குவதை......

    ReplyDelete
  16. ஹெமா எப்படி இருக்கிங்க

    ReplyDelete
  17. ஏனோ மனிதனின் மனமும் ரத்தவெறி பிடித்து சக மனிதனை துன்புறுத்தி அழிக்கிறது !
    மனிதனை காப்பதற்காக படைக்கப்பட்ட கடவுள்களும் அதை சந்தோசமாய் ரசிக்கிறது!


    இந்த பூமியில் மனிதமும் இல்லை தெய்வமும் இல்லை !

    ReplyDelete