Saturday, January 10, 2009

போரும் ஒரு காதலும்...

விலங்குகளோடு விலங்காய்
விலங்கு அவிழ்க்க,
விடுதலைக்காய்
விடு தலையை என
ஆயுதம் ஏந்தியபடி
நெடுந்தூரப் பயணத்தில் நான்.

பேய் பிசாசுகளின்
அசுத்த எச்சங்களைச்
சுத்தம் செய்யப் புறப்பட்டுவிட்ட
துப்பரவுத் தொழிலாளியாய் நான்.

அவலங்களின் ஓலங்களுக்குள்
குண்டுகளையே பசிக்கு உணவாய்
தின்று வாழும் எனக்கு
காதலின் சத்தங்கள்
சந்தங்கள் இல்லா சங்கீதமாய்.

கொலுசோ வளையலோ அணியாமல்
ஆயுதங்களையே தலையணையாக்கி
தேசத்தையே
தோழியாய் அணைத்திருக்கும்
நான் எப்படி?
ம்ம்ம்ம்....
உங்கள் மனதை வழி மறித்தேன்.
என்றாலும்
மன்னித்துக் கொள்ளுங்கள் தோழரே.
இன்று நீங்கள் வழிமறித்து வினவிய
வார்த்தையின் எதிரொலியே
என் குரலாய் இப்போ.

ஈழத்தாய் கண்ணீர் துடைக்க
எம் தேச வரைபடத்தின்
தூசைத் துடைக்க
இழந்திட்ட அத்தனைக்கும்
ஈடு கொடுக்க
பாசம் விட்டு...வீடு விட்டு
புறப்பட்டு விட்ட புயலாய் நான்.
என் நண்பன்
பாதியில் நிறுத்திய கனவைத்
தொடர
என் தோளில் கனமாய் கனவுகளோடு.

நிமிடமும் நொடியும்
என் நிலை எனக்கே தெரியாமல்
குப்பியின் துணையோடு
உலவும் என்னை
என் உலகம் தாண்டி!

ம்ம்ம்...
ஆசைதான்
உங்களோடு வேற்றுலகில் பிரவேசிக்க
அங்கும் நாம் அடிமைகள்தானே!
உடன்பாடு கொஞ்சமும்
இல்லை எனக்கு அதில்.
சிந்திக்கிறேன்
எம் சின்னக் குருத்துகளை.

காதல் கடவுள்போல
எனக்குள்ளும் காதலுண்டு.
என் மண்ணில்...மரத்தில்...என்னில்
உங்களில்...என் இனத்தில்.
நண்பரே
மீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
பாரமாய் உங்கள் மனதில் நானிருந்தால்
கொஞ்சம் இறக்கி
எனக்கும் வழி விட்டுச் செல்லுங்கள்.

வசந்தம் தேடும் வாழ்வு உங்களது கனவாய்
சுதந்திரம் தேடும் வாழ்வு எனதாய்.
தேடுவது என்னவோ
சந்தோஷம்தான் இருவரும்
என்றாலும்
இயல்பில் இலக்குகளில்
மாறுபட்டதாய்தானே.

என் வாழ்வு நிரந்தரமற்றதாய்.
இன்று மடியலாம் மண்ணில்
அல்லது நாளை நாளை மறுநாள்.
இனித் தொடரும் நாட்களில்
மாவீரர் துயிலும் இல்லத்தில்கூட ஒருசமயம்
சந்திக்கக் கூடும் நீங்கள் என்னை.

ஒன்று மட்டும்
மண்ணுக்குள் வித்தாகமுன்
மனதிற்குள் வித்தான பெருமை எனக்குள்.

உங்களுக்கும்
உங்கள் வருங்காலச் சந்ததிக்கும்
சுதந்திரக் காற்றைச் சுத்தம் செய்ய
ஆயுதம் ஏந்தி நடக்கிறேன் தோழர்களோடு
தயவு செய்து வழி விட்டு
வாழ்த்திச் செல்லுங்கள்.
சந்திப்போம் முடிந்தால்
மீண்டும் நாம்.
விலங்கு அவிழ்த்த
எம் தாயின் குழந்தைகளாய்!!!

ஹேமா(சுவிஸ்)

44 comments:

  1. ம்ம்ம்...
    ஆசைதான்
    உங்களோடு வேற்றுலகில் பிரவேசிக்க
    அங்கும் நாம் அடிமைகள்தானே!
    உடன்பாடு கொஞ்சமும்
    இல்லை எனக்கு அதில்.
    சிந்திக்கிறேன்
    எம் சின்னக் குருத்துகளை.


    காதல் கடவுள்போல
    எனக்குள்ளும் காதலுண்டு.
    என் மண்ணில்...மரத்தில்...என்னில்
    உங்களில்...என் இனத்தில்.
    நண்பரே
    மீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
    பாரமாய் உங்கள் மனதில் நானிருந்தால்
    கொஞ்சம் இறக்கி
    எனக்கும் வழி விட்டுச் செல்லுங்கள்.//

    ஹேமா எங்கள் ஊரின் நிஜத்தை அப்படியே பதிவாகியுள்ளீர்கள்.. இன்று நீங்கள் சொல்வது போல எங்கள் தமிழர் படை எல்லைப் படையாக,,மக்கள் படையாக வீறு கொண்டுள்ளது.... இது இப்போது வன்னியில் உள்ள ஒவ்வோர் மக்களினூடாகவும் நாம் காண்பது... இறுதி வரை உறுதியோடு உள்ள மக்களின் கனவுகள் என்றும் வீண் போகாது... நீதி அழிந்து விடாது.. நியாயம் தூங்கி விடாது... தர்மம் ஒரு நாள் வெல்லும்.!

    கவிதை அருமை.. உணர்வின் வெளிப்பாடு!

    ReplyDelete
  2. சில நேரங்களில் காதலும் ஒரு போரே

    ReplyDelete
  3. \\என் நண்பன்
    பாதியில் நிறுத்திய கனவைத்
    தொடர
    என் தோளில் கனமாய் கனவுகளோடு.\\

    அருமை ...

    ReplyDelete
  4. \\நிமிடமும் நொடியும்
    என் நிலை எனக்கே தெரியாமல்
    குப்பியின் துணையோடு
    உலவும் என்னை
    என் உலகம் தாண்டி!\\



















    ...

    ReplyDelete
  5. ஒன்றும் எழுதாமல் போட்டேன் என கருதுகிறீர்களா ...

    வெற்று காகிதமாய் ஆனேன் நான் ...

    இரத்தம் தெரித்து என்னை என்னுள் இருக்கும் நினைவுகளை அழித்து விட்டன

    ReplyDelete
  6. \\கொலுசோ வளையலோ அணியாமல்
    ஆயுதங்களையே தலையணையாக்கி\\

    வலி தாங்கிய உண்மை சோகம்.

    வார்த்தைகள் என்னிடம் இல்லை ...

    ஆறுதல் சொல்லுவோம் என நினைப்பதுமில்லை, சொல்லுவதால் ஆறிடுமா இந்த ரணம்...

    ReplyDelete
  7. \\மண்ணுக்குள் வித்தாகமுன்
    மனதிற்குள் வித்தான பெருமை எனக்குள்\\

    ம்ம்ம் ... அருமை


    சோகத்திலும் சாகசம் ...

    ReplyDelete
  8. \\விலங்கு அவிழ்த்த
    எம் தாயின் குழந்தைகளாய்!!!\\

    எங்களது பிரார்த்தனைகள்

    ReplyDelete
  9. கமல்,நம்பிக்கையைத் தவிர வேறொன்றும் வழியில்லா அகதி வாழ்வு.மன அவதியை எப்படித் தீர்த்துக்கொள்ளலாம்?எழுத்துத்தான் வடிகாலாகிறது.

    ReplyDelete
  10. ஜமால்,எங்களோடு சேர்ந்துகொண்டு அவலப்படுகிறீர்கள்.அத்தனை வரிகளுக்குள்ளும் பிரவேசித்து விசாரித்து வந்திருக்கிறீர்கள்.நீங்கள் சொன்னதுபோல மனம் முட்டிக் கிடந்தாலும் வெறுமைதான் இப்போதைக்கு.நம்புவோம் நாளை ஒரு நாள் எங்களுக்காக விடியும் என்று.

    ReplyDelete
  11. இரத்த தேசத்தை நாங்களே துப்பரவு செய்வோம்.சாத்தான்களுக்கும் வேதம் சொல்லிக் கொடுப்போம்.காலம் நிச்சயம் கைகூடும்.எங்களோடு துணையாகக் கை கொடுத்தபடி இருங்கள்.நன்றி ஜமால்.

    ReplyDelete
  12. \\எங்களோடு துணையாகக் கை கொடுத்தபடி இருங்கள்.நன்றி ஜமால்.\\

    நிச்சியமாக ஹேமா ...

    எங்களின் பிரார்த்தனைகள் இருந்து கொண்டே இருக்கும்

    ReplyDelete
  13. ////ம்ம்ம்...
    ஆசைதான்
    உங்களோடு வேற்றுலகில் பிரவேசிக்க
    அங்கும் நாம் அடிமைகள்தானே!///

    ரணம் நிறைந்த வாழ்வின் வலிநிறைந்த வரிகள்....

    ReplyDelete
  14. //
    காதல் கடவுள்போல
    எனக்குள்ளும் காதலுண்டு.
    என் மண்ணில்...மரத்தில்...என்னில்
    உங்களில்...என் இனத்தில்.
    நண்பரே
    மீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
    பாரமாய் உங்கள் மனதில் நானிருந்தால்
    கொஞ்சம் இறக்கி
    எனக்கும் வழி விட்டுச் செல்லுங்கள்.
    //

    யாருப்பா அந்த நண்பர்
    நாங்களா இல்லை..............
    அது மொதல்ல சொல்லுங்க

    ReplyDelete
  15. \\நிமிடமும் நொடியும்
    என் நிலை எனக்கே தெரியாமல்
    குப்பியின் துணையோடு
    உலவும் என்னை
    என் உலகம் தாண்டி!
    \\


    வேண்டாம் தோழி யாரும் அப்படி
    இருக்க வேண்டாம் மனது கனக்கிறது
    ம்ம்ம்ம்..........

    ReplyDelete
  16. //
    வசந்தம் தேடும் வாழ்வு உங்களது கனவாய்
    சுதந்திரம் தேடும் வாழ்வு எனதாய்.
    தேடுவது என்னவோ
    சந்தோஷம்தான் இருவரும்
    என்றாலும்
    இயல்பில் இலக்குகளில்
    மாறுபட்டதாய்தானே.

    //

    சரியான வாசகம் சுதந்திரம் தேடும் வாழ்வு எனதாய்

    தேடுவது என்னவோ சந்தோசம் தானே
    மிகவும் அருமை அருமை

    ReplyDelete
  17. கவிதை அருமை
    உணர்வின் வெளிப்பாடு
    சும்மா சொல்ல கூடாது
    தோழி ரொம்ப நல்லா
    எழுதி இருக்கீங்க
    வாழ்த்துக்கள் !!!!

    ReplyDelete
  18. //உங்களுக்கும்
    உங்கள் வருங்காலச் சந்ததிக்கும்
    சுதந்திரக் காற்றைச் சுத்தம் செய்ய
    ஆயுதம் ஏந்தி நடக்கிறேன் தோழர்களோடு//
    கனமான வரிகள்..

    ReplyDelete
  19. ஹேமா,
    வலையில் உங்கள் பதிவை பார்த்தேன் - மிகவும் கஷ்டமாக இருக்கு.துயரங்களை
    துடைதெரியுங்கள் - விடியல் நிச்சயம் கைகூடும் - நாட்கள் வேண்டுமானால் மாறிப்போகலாம் - நடக்கபோவது மாறாது.

    உன் இனம்,
    ரவீ

    ReplyDelete
  20. வணக்கம் ஜீவராஜ்.எங்கள் வலிகளை எழுதியே கொஞ்சம் குறைத்துக் கொள்வோம்.நன்றி என் பக்கம் வந்ததுக்கும் ஜீவா.அடிக்கடி வாங்கோ.உங்கள் பதிவுகள் நான் பார்க்கிறேன்.பதில் இடத்தான் முடிவதில்லை உங்கள் பின்னூட்ட முறை.ஏனோ என் கணணியில் பிரச்சனை.

    ReplyDelete
  21. //யாருப்பா அந்த நண்பர்
    நாங்களா இல்லை..............
    அது மொதல்ல சொல்லுங்க//

    ரம்யா. அவர்களை எங்களோடு சேர்க்கவே முடியாது.தியாகப் பிறப்புக்கள்.நாங்கள் பாருங்கோ அரட்டை அடிச்சுக்கொண்டு பயந்து போய் ஓடி ஒளிச்சிக்கொண்டு இங்க வந்திருக்கிறம்.அந்த நண்பர்கள் எங்கே நாங்கள் எங்கே.கண்ணுக்குத் தெரியாத தோழர்கள் அவர்கள்.

    ReplyDelete
  22. நன்றி தோழி ரம்யா.அவர்கள் குப்பி அணிந்திருக்கிறபடியால்தான் எங்கள் தமிழ்மானம் ஓரளவாவது வாழ்ந்து கொண்டிருக்கிறது.அவர்களது துணிவும் நம்பிக்கையும்தான் எங்கள் வாழ்வு.காத்திருப்போம்.

    ReplyDelete
  23. வாங்கோ கவின்.வலிகளோடுதானே அகதி வாழ்க்கை எங்களது.

    ReplyDelete
  24. //ஆசைதான்
    உங்களோடு வேற்றுலகில் பிரவேசிக்க
    அங்கும் நாம் அடிமைகள்தானே!//

    அருமையான வரிகள் வலிகளோடு...

    ReplyDelete
  25. //சந்திப்போம் முடிந்தால்
    மீண்டும் நாம்.
    விலங்கு அவிழ்த்த
    எம் தாயின் குழந்தைகளாய்!!!//

    மனது வலிக்கிறது
    ஒன்றும் சொல்லத்
    தெரியவில்லை ஹேமா...

    ReplyDelete
  26. நன்றி இரவீ.ஊருக்கு விடுமுறையில் நின்றபோதும் கருத்துக்கு.
    உண்மைதான்.நாட்கள்தான் மாறும்.
    நடப்பவை தாமதம் ஆனாலும் நடந்தே தீரும்.

    ReplyDelete
  27. வாங்க புதியவன்.ஆறுதல் வார்த்தைகளின் நம்பிக்கையில் மட்டுமே எங்கள் வாழ்வின் தொடர்.

    ReplyDelete
  28. பூர்ணி.சுகமான விடுமுறையாய் அமைந்ததா?சந்தோஷம்.சந்திப்போம் கருத்துக்களோடு.

    ReplyDelete
  29. விலங்கு கூட ஒருபொருட்பன்மொழியாய்....


    கவிதைகளில் கண்ணீராய்....

    அதுகூட கம்பீரமாய்...

    உணர்வு மட்டும் உண்மையாக

    ஒரு கவிதை..

    விதையாய்...

    ReplyDelete
  30. விழித்துக்கொண்டே
    விடியலை நோக்கி....
    தூக்கிவிடாதீர்கள்
    துரத்தும் துச்சர்களை
    தூசியாய் துடைத்துவிடுங்கள்!

    காலம் பலரை
    காலமாங்கினாலும்
    விதைக்கப்பட்ட விதைகள்
    விருட்சமாகும் விரைவில்....

    ஈழத்தின் கொடுமை
    இதயங்களை ஈரமாக்கியிருக்கிறது
    ஈரமான இதயங்களின்
    ஆசிர்வாதங்கள்
    அவர்களுக்கு என்றும் உண்டு!
    வாழ்த்தி நிற்போம்....
    வாழவைப்போம் தமிழர்களை...

    ReplyDelete
  31. SUREஷ்,நன்றி கவிதை தொடுத்த கருத்துக்கு.உங்கள் உணர்வு கண்டேன்.அருமை.

    ReplyDelete
  32. தமிழன்,சில சரித்திரக் கதைகள் அழித்து புதுக்கதை உருவாக்க முயற்சி நடக்கிறதே எங்கள் தேசத்தில் .அந்தக் கதைகளில் ஒன்றுதானே இது.நாமே அலுத்துக்கொண்டால் எப்படி?

    ReplyDelete
  33. வணக்கம் பிரியமுடன்.முதல் வருகையிலேயே அருமையான கவிதையோடு.வலியும் வீரமும் நம்பிக்கையும் தருகின்ற அருமையான வரிகள்.இந்தத் தமிழர் திருநாளில் எல்லோருடைய பிரார்த்தனைகளும் நல்லதாய் அமையட்டும்.என்றும் எங்கள் கை கோர்த்து ஆதரவாய் இருங்கள்.வெல்வோம்.

    ReplyDelete
  34. dear Hema,
    when ever I think of our brethren suffering hell there, I feel guilty, for the inability to help them.But my heart bleeds with your heart, and honestly wishes that there should not be any more life loss. Not even one.
    Sadly,
    karthik +amma

    ReplyDelete
  35. ஆக என்ன அருமையான கவிதை வசீக்கிறப்போ நிஜத்திலை நடக்கிறது போல இருக்கு

    ReplyDelete
  36. Izhanthitta aththanaikkum eedu kodukka-highly confidential wordings Hema.

    ReplyDelete
  37. வாங்க அம்மா.உங்கள் கருத்துக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.நன்றி அம்மா.சந்தோஷமா இருங்க.

    ReplyDelete
  38. வாங்கோ கஜன்.உங்கள் முதல் வருகைக்கு நன்றியும் நிறைந்த சந்தோஷமும்கூட.அடிக்கடி வாங்கோவன் இனி.சந்திப்போம்.

    ReplyDelete
  39. நன்றி முனியப்பன்.எங்கள் வலிகளை உணர்கிறீர்களே.அதுவே எங்கள் நம்பிக்கையின் வெற்றி.

    ReplyDelete
  40. நல்ல கவிதை ஹேமா ..
    மிக கருத்தாழமிக்க வரிகள் ...

    ஒவ்வொரு வரிகளிலும் தமிழனின் உண்மை உணர்வுகளை காண்கிறேன் ...



    // மீண்டும் நாம்.
    விலங்கு அவிழ்த்த
    எம் தாயின் குழந்தைகளாய்!!!//

    அருமை அருமை ஹேமா


    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  41. உங்களுக்கும்
    உங்கள் வருங்காலச் சந்ததிக்கும்
    சுதந்திரக் காற்றைச் சுத்தம் செய்ய
    ஆயுதம் ஏந்தி நடக்கிறேன் தோழர்களோடு
    தயவு செய்து வழி விட்டு
    வாழ்த்திச் செல்லுங்கள்.
    சந்திப்போம் முடிந்தால்
    மீண்டும் நாம்.
    விலங்கு அவிழ்த்த
    எம் தாயின் குழந்தைகளாய்!!!///

    என்னுடன் படித்த ஈழத்தமிழர்கள் ஆங்கிலேயர்போல் தமிழ் வாடையற்று
    பணக்காரர்களாய் இருந்தனர்..
    இவ்வளவு உணர்வுடன் இருந்ததில்லை....

    ReplyDelete
  42. //என்னுடன் படித்த ஈழத்தமிழர்கள் ஆங்கிலேயர்போல் தமிழ் வாடையற்று
    பணக்காரர்களாய் இருந்தனர்..
    இவ்வளவு உணர்வுடன் இருந்ததில்லை....//

    வாங்க தேவா.அப்படிப்பட்ட மனிதர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமலேயே பவுண்ஸ்,பிராங்,ஈரோ என்று சேர்க்கிறார்கள்.இத்தனை யுகங்களாக நடக்கும் போரை "ஊரில இண்டைக்குச் சண்டையாம்
    "என்பார்கள் சிலர்.என்ன செய்யலாம்?

    ReplyDelete