கை நிறையத் தந்த கடல்
நுரை கக்கி
கையோட அள்ளிப்போட்டுது
என்ர பிள்ளையை.
கண் நிறைஞ்ச புருஷனையும்
கருப்புக் காலன்
கொண்டு போட்டான்.
கடலுக்குள்ள தொலைச்சுப்போட்டன்
என்ர வாழ்க்கையை.
காத்திருக்கிறன் இப்பவும்தான்.
வருவினமோ இரண்டு பேரும்.
வானம் தொலைச்ச நிலவைப்போல
தேடுறனே நித்தம் நித்தம்.
நிறைய உயிரைக் குடிச்ச கடல் எண்டா
"உம்"எண்டு உறங்குதெல்லோ
கல்லுளி மங்கன் போல.
கரையில ஒதுங்குவினமோ
கடலுக்குள்ளேயே புதைஞ்சிட்டினமோ
காணேல்லையே.
வருஷமும் நாலாச்சு
காத்த வழியிலயும்
பூவும் பூத்திட்டுதே.
வந்திட்டுப் போங்கோவன் ஒருக்கா
பாவம்தானே பாவிப் பெட்டையும்.
பொட்டும் அழிக்கேல்ல.
பூவோட காத்திருக்கிறன்.
அம்மாளாச்சி சொன்னவ கனவில
காலம்புற வருவியள் எண்டு.
கனக்கக் காலையும் கடந்தே போச்சு.
பொய்யும் சொல்லிட்டா அவ.
போகமாட்டன் இனி அவவிட்டயும்.
மீன் சந்தையில
சந்தடிக்க கதைக்கினம்.
பேச்சியின்ர பெடியனும்
பத்தைக்க கிடந்தவனாம்
பதினைஞ்சு நாளா உயிரோட.
அப்பிடியெண்டாலும் வந்திடுவியள்
எண்டெல்லோ
பரதேசி நான் பாத்துக் கிடக்கிறன்.
ஏமாத்த மாட்டியள் நீங்கள் எப்பவும்.
இப்பவும் வந்திடுவியள்.
கொல்லைக்க நிக்கிற கிடாயும்
கூட்டுக்குள்ள
கொப்பர் தந்த கொண்டைச் சேவலும்
தேடுகினமெல்லோ.
கிடுகுப் படலையும் அசையுமெண்டு
அசையாமல் கிடக்குது மனசும்தானே.
குசினிக்க சிலந்தியும்
கூடு கட்டிப் படுத்திருக்கு.
சாராயம் உன்னை எரிச்சிப்போடும் எண்டு
கள்ளு வாங்கி வச்சனான்.
பூஞ்சணமும் கட்டிக்கிடக்கு அதில.
கொம்மாவும் புலம்பினபடி.
கொப்பருக்கோ விசர் பிடிச்சிட்டுது.
கொக்காத்தை கதைக்குதே இல்ல.
எப்பத்தான் வருவியள்
இரண்டு பேரும்.
சொல்லிட்டுப் போயிருந்தால்
கலண்டரில கணக்குப் பாப்பேன்.
வருத்தம் வந்து போனாலும்
விதி எண்டு வெந்திடுவன்.
"தேத்தண்ணி வை வாறன்"
எண்டுதானே போனியள்.
திரும்பவேயில்லையே.
காசு பணம் கனக்க இல்ல.
உழைப்பும் கொஞ்சம்தான்.
அப்பரும் தரேல்ல சீதனம்.
எண்டாலும்...
நாலு றால் போட்டு
கஞ்சி காச்சினாலும்
பகிர்ந்தல்லோ குடிச்சம்.
கொண்டு வாறதை
பொத்தித் தருவியள் கைக்குள்ள.
சில்லரையை அப்பிடியே கொட்டிப்போட்டு
சிரிக்குதடி காசும் உன்னைப்போல
என்று ரசிப்பியள்.
சின்னக்குட்டியும்
உங்களோட சேர்ந்துகொண்டு
கையை ஆட்டும்.
பசியும் பத்தும் பறந்தே போகும்.
கண்ணுக்குள்ள வச்சுக் காத்துப்போட்டு
இப்போ...
கண்ணைக் கட்டிக் காட்டுக்குள்ள
விட்ட மாதிரியெல்லோ தவிக்கிறன்.
கேள்விக்குறியை நிரப்பிக்கொண்டு
காத்திருக்கிறன் வருவியள் எண்டு.
நம்பிக்கையோட
நானும் தேய்ஞ்சு போறன்.
நாலு வருஷமும் பறந்து போச்சு.
மூச்சு முட்டி நிக்கமுந்தி வந்திடுங்கோ
இரண்டு பேரும்.
இல்லாட்டி...
என்னையும் கூட்டிக்கொண்டு
போங்கோவன் வந்து!!!
ஹேமா(சுவிஸ்)
1)என்ர-என்னுடைய 2)எண்டெல்லோ-என்றெல்லோ
3)வருவினமோ-வருவார்களோ 4) கனக்க-நிறைய
5)கதைக்கினம்-பேசுகிறார்கள் 6)கொல்லை-பின்பக்கம்
7)தேடுகினம்-தேடுகிறார்கள் 8)காலம்பற-காலையில்
9)கொப்பர்-அப்பா 10)கொம்மா-அம்மா
11)கொக்காத்தை-அக்கா 12)விசர்-பைத்தியம்
13)படலை-வாசல் கதவு 14)குசினி- சமையல் அறை
15)வருவியள்-வருவீர்கள்
ஹேமா,
ReplyDeleteஇந்த மாதிரி "ஒப்பாரி" எல்லாம் எழுதாதீங்க,
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
கஷ்டங்களை கால் சுண்டுவிரலால் உதறிவிட்டு-
நல்ல பொழுதை - நிம்மதியை நாடவிடுங்கள்.
தொடர்ந்து சோக பாடல், சோக நினைவு இருப்பின் -
சோகங்களே சுற்றி இருப்பதாக தோன்றும்.
இரவீ இன்று காலையில் சுனாமியின் பதிவு போட்டுவிட்டு வேலைக்குப் போனபிறகும் அதே நினைவாய் இருந்தது.வித்தியாசமான சிந்தனையில் எழுதிப் பார்ப்போமே என்றுதான் இதை எழுதிப் பார்த்தேன்.
ReplyDeleteஒரு புலம்பலாய் அல்லது நீங்க சொன்னதுபோல ஒப்பாரியாய் இருந்தாலும் உணர்வோடு ஒன்றியிருந்த மாதிரி இருக்கே என்றுதான் பதிவில் போட்டேன்.
ஏன் இரவீ இப்படி ஒரு பெண் அந்தச் சுனாமியின் வேதனையில் இப்போதும் காத்திருக்கக் கூடும்தானே!
ஒரு பெண்னல்ல , பலர் இருக்க வாய்புள்ளது,
ReplyDeleteஅவர்களுக்கு ஆறுதலும், ஆதரவுமாய் இருப்போம்.
படிக்கும் போதே பலர் அழ போவது என்னமோ நிட்சயம்.
//அம்மாளாச்சி சொன்னவ கனவில
ReplyDeleteகாலம்புற வருவியள் எண்டு.
கனக்கக் காலையும் கடந்தே போச்சு.
//
நிதர்சனமான வரிகள்
படிக்கும்போது மனசு பாரமாகிடுது
சுனாமியின் வடுக்கள் எத்தனை வருடங்களானாலும் அழிந்து போகமுடியாதவை
ReplyDeleteஅவர்களின் ஆத்மாசாந்திக்காக பிரார்த்திகிறேன்
வரிகளில் வலிகள்...மனம் கனக்கிறது...
ReplyDeleteசோகத்தை வார்த்தைகளில் சொல்லிவிட்டால்
கொஞ்சம் சுமை குறைந்த மாதிரி தான்
இருக்கிறது...
//இப்படி ஒரு பெண் அந்தச் சுனாமியின் வேதனையில் இப்போதும் காத்திருக்கக் கூடும்தானே!
ReplyDelete//
படிக்கையிலேயே நெஞ்சு பதறுகிறது
///அம்மாளாச்சி சொன்னவ கனவில
ReplyDeleteகாலம்புற வருவியள் எண்டு.
கனக்கக் காலையும் கடந்தே போச்சு.
பொய்யும் சொல்லிட்டா அவ.
போகமாட்டன் இனி அவவிட்டயும்.///
வாழ்க்கையின் கொடுமையான பக்கங்கள்!!!
இதுதான் சிறந்த பதிவு!!!
தேவா..
சுனாமியின் கோர வடுக்களை உங்கள் வரிகள் சாட்சியம் பகிர்கின்றன
ReplyDeleteநீங்கள் எழுதிய மொத்த கவிதைகளில் 90 சதவீதம் சோகம் தான் இருக்கு சகோதிரி. நாணயத்திற்கு இரு பக்கம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு பக்கம் தான் என்று நினைத்து சோகத்தை மட்டும் எழுதி வருகிறீர்கள்.
ReplyDeleteகொஞ்சம் மாற்றி பாருங்கள் சகோதிரி. தவறhக எடுத்துக்கொள்ள வேண்டாம் .
சொல்லிட்டுப் போயிருந்தால்
ReplyDeleteகலண்டரில கணக்குப் பாப்பேன்.
வருத்தம் வந்து போனாலும்
விதி எண்டு வெந்திடுவன்.
"தேத்தண்ணி வை வாறன்"
எண்டுதானே போனியள்.
திரும்பவேயில்லையே//
எதிர்பார்ப்பு, நிறைவேறாமை, மனதின் வலிகள், நம்பிக்கை, ஏக்கம், பிரதேச மொழி வழக்கு அனைத்தும் கலந்த கவிதை.... ம்...நல்ல லயம் மிக்க கற்பனை.... எப்ப வருவார் அவர்??? இன்னும் வரவில்லையா???/ வந்துட்டாரா??? ஏங்க பதில் சொல்ல மாட்டிங்களா???
நன்றி கவின்,பூர்ணிமா,புதியவன்.
ReplyDeleteமீண்டும் ஒரு சுனாமி நினைவுப் பதிவுக்கு கருத்துத் தந்தமைக்கு.
தேவா வாங்க.சுனாமி போலவே வந்தீங்க.கருத்தும் சொன்னீங்க.சந்தோஷம்.
ReplyDeleteபிரபா வாங்கோ வாங்கோ.நீங்களும் சுனாமி போலத்தான்.எப்போவாவது வருவீங்க.முத்துப்போலக் கருத்துக்கும் நன்றி பிரபா.
ReplyDeleteஆனந்த்,நீங்களும் ரொம்ப நாளாவே சொல்லிப் பாக்கிறீங்க.நானும்....!என்ன செய்ய நான். முயற்சி பண்ணினாலும் கொஞ்சம்தான் சந்தோஷமா எழுத வருது.என்ன ஆனந்த் நீங்க...சுனாமி ன்னாலே கவலைதானே!
ReplyDeleteகமல் நான் எழுதின யாழ்ப்பாணத் தமிழோடு கலந்த இந்தக் கவிதையை நானும் ரசித்தேன்.உணர்வோடு இயல்பாய் இருந்தமாதிரி இருந்தது.
ReplyDeleteநன்றி ஊக்கம் தரும் கருத்துக்கு.
சுனாமி பற்றி கவி தந்தமைக்கு நன்றி. புலம் பெயர்ந்த உங்க ஊர் மக்களின் சுனாமி பற்றிய நிகவுப் படங்கள் இங்கே
ReplyDeletehttp://www.ninaivukal.com/gallery/6930056_rfSb3/1/443460091_eTB9m#443460091_eTB9m
Vaanathai tholaitha nilavai pola & Yeppaththan varuuviaval rendu perum , wordings are super.A poem felt in most houses affected by Psunami.Nalla pathivu Hema.
ReplyDelete"சுனாமி" இந்த வார்த்தையை இன்று கேட்டாலும்..திகில் கலந்த சோகம் தான் வருகிறது! எப்படி மறக்க முடியும் அந்த 26.12.2004. தமிழ்நாட்டிலும் பலத்த உயிர் சேதங்கள்...அந்த கருப்பு ஞாயிரின் கண்ணீர் கதறல்கள்..
ReplyDeleteசுனாமியால் சிக்குண்டு உயிர் பிழைத்தவர்கள் இன்றும் அந்த அதிர்ச்சியல் இருந்து மீளாமல் உரை கற்களாகவும் இருக்கிறார்கள்..
பேச்சு வழக்கில் கிராமிய மொழி நடையில் எழுதியிருந்தாலும் காத்திரமாகவுள்ளது ஹேமா, பாராட்டுக்கள்.
ReplyDeleteஇலக்கியமேட்டில் சுனாமி பற்றிய சிறுகதை பதிவாகியுள்ளது வாசித்தீர்களா?
சுனாமிப் பேரலையை நேரில் கண்டவன் என்பதால் மறக்கவே முடியாமல் உள்ளது ஹேமா.
காரூரன் நன்றி.பார்தேன் நீங்கள் அனுப்பிய காட்சிகள்.மனதின் பாரங்கள் வருட இறுதியிலும்.
ReplyDeleteமுனியப்பன்.சுனாமியின் நினைவு
ReplyDeleteகளைப் பகிர்ந்து மனதைக் கொஞ்சம் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
இசக்கிமுத்து,பாதிக்கப்பட்டவர்களும் சரி,பாதிக்கப்படாதவர்களும் சரி சுனாமி என்றாலே அதிர்வடையாமல் இல்லையே!கறுப்பு ஞாயிறு என்பதை விட கறுப்புக் காலன் சுனாமிப்பேய்.
ReplyDeleteஓ...ஈழவன் நேரில் பார்த்தீர்களா?அப்பாடி.என் அம்மாவும் சொன்னா.
ReplyDeleteஎன்னவோ கறுப்பாய் உயரமாய் தெரிந்தது என்று.நினைக்கவே பயமாயிருக்கே.உங்கள் கண்களுக்குள்
அந்தக் கறுப்பு இருந்து கொண்டேதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஈழவன்.மன்னிச்சுக்கொள்ளுங்கோ.
இலக்கிய மேட்டில் அதிகம் பதிவு இல்லாத்தால் போவது குறைவுதான்.அமைதியாக நேரம் எடுத்து வாசிப்பேன்.நன்றி ஈழவன்.
வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html
சுனாமி போலவே வரிகளும் அள்ளிச்செல்கின்றன சோகத்தினை.
ReplyDelete