Friday, December 26, 2008

சுனாமியான கடல்....

தொலைத்துவிட்ட உறவுகளை
மீண்டும் காணவே முடியாது
என்று தெரிந்தபோதும்,
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
அடித்துக் கொள்(ல்)கிறது மனம்.

ஞாபகங்களைக் கிளறி
கோடு கிழிக்கும் நண்டாய்
சொந்தங்களில் சிரிப்பலைகள்.
கரை ஒதுங்கும் நுரையாய்
வந்து மறையும்
அவர் முகங்கள்.
பங்கருக்குள் காத்த உயிரை
நொடிக்குள் பறித்தாயே.

அகோரப் பசி தீர்ந்து
அமைதியாக நீ இப்போ.
அன்றிலிருந்து
அமைதி கலைந்த உறவுகளை
அறிவாயா நீ.
போற்றிய வாயாலேயே
தூற்றும் பொல்லாதவராய்
நாம்தான் உன் முன்னால்.

ஆறி மறக்கக்கூடிய நிகழ்வையா
நடத்தி மறைந்தாய் நொடிக்குள் நீ.
வெள்ளைச் சேலையில் அக்கா
அப்பாவைத் தேடும் குழந்தைகள்
மனம் குழம்பிய ஒருவர்
அனாதையான பாலகன்.

ம்ம்ம்.....
காணும்போதெல்லாம்
சபிக்கப்படுவது நீதானே.
கடல் சூழ்ந்ததால்
அழகானது எம் நாடு.
அதே கடலாலே
அழகிழந்தோர் ஆயிரம் ஆயிரம்.

மீன் வாங்கக் காத்திருந்த நாங்கள்
பிணங்களுக்காய் காத்திருந்தோமே.
கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாங்கள்
ஒதுங்கிய பிணங்களப் பொறுக்கினோமே.

மரணத்தை மொத்தமாய்
கூட்டி வந்த
கடலே...பேரலையே
மறவோம் உன் கோபத்தையும்
எம் உறவுகளையும்!!!
ஹேமா(சுவிஸ்)

23 comments:

  1. ஹேமா,
    சென்னையில் - கடலில் மிக அருகில் இருக்கும் என் அலுவலகத்தில் இரவு தங்கி வேலை முடித்து - காலை அறைக்கு திரும்பியபின் வந்தடைந்த இந்த கோரம் - நினைக்கையில் இந்த நிமிடமும் என் மண்டையை குடைகிறது.

    ReplyDelete
  2. சுனாமியின் தாக்குதலின் வடு மறையாமல் பலரும் ஒரு வித நடைப்பிண வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது நிஜம் தான்.

    ReplyDelete
  3. மறக்க முடியாத சம்பவம். இது போன்ற சம்பவத்தை பார்க்கும் போதும், கேள்வி படும் போதும் தங்கிக்கொள்ள முடிவதில்லை. பிஞ்சு குழந்தைகளை கூட ஆழிப்பேரலை விட்டு வைக்கவில்லையே?

    ReplyDelete
  4. நினைத்தாலே இன்னும் நடுங்குகிறது

    ReplyDelete
  5. அருமையான வரி(லி)கள்

    ReplyDelete
  6. //மரணத்தை மொத்தமாய்
    கூட்டி வந்த
    கடலே...பேரலையே
    மறவோம் உன் கோபத்தையும்
    எம் உறவுகளையும்//

    வார்த்தைகளில்லை..

    ReplyDelete
  7. தொலைத்துவிட்ட உறவுகளை
    மீண்டும் காணவே முடியாது
    என்று தெரிந்தபோதும்,
    உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
    அடித்துக் கொள்(ல்)கிறது மனம்.//


    மனதைத் தொடுகின்ற உணர்வும், யதார்த்தமும் நிரம்பிய கவி வரிகள்! நாங்கள் இழந்தவை தான் எத்தனை எத்தனை??? இனியும் இழப்பதற்கு ஏதுமில்லை என்று வாழ்பவர்களை இப்போது இயற்கை கூட விட்டு வைக்கவில்லையே??? என்ன செய்வார்கள் அவர்கள்???

    ReplyDelete
  8. இரவீ,சுனாமி என்கிற அந்தச் சொல்லைக் காணும்போதே ஏதோ ஒரு பீதி படர்கிறதே.அவ்வளவிற்கு மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது எல்லோர் மனதிலும்.

    ReplyDelete
  9. வாங்க முதல் வணக்கம் இராகவன்.
    சுனாமியை மறந்திருந்தால் அவன் நிச்சயம் மனநிலை சரியில்லாத
    வனாகவே இருப்பான்.எவரால்தான் சுனாமியை மறக்க முடியும்.நன்றி முதல் வருகைக்கு.அடிக்கடி வாங்கோ.

    ReplyDelete
  10. வாங்கோ ஆனந்த்.இனி ஒரு தடவை இப்படிப்பட்ட அழிவைத் தடுக்க அரசாங்கங்கள் ஆவன செய்யும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  11. ஜமால்,அநேகமாக இலங்கை,இந்திய மக்கள் மனதில் சுனாமி என்கிற அரக்கன் நினைவில் எப்போதும் இருப்பான்.

    ReplyDelete
  12. பூர்ணிமா...அழிவின் தாக்கங்களுக்கு என்றுமே வார்த்தைகள் இல்லைதானே!உணர்வதைத் தவிர

    ReplyDelete
  13. கமல்,இங்குதான் சொல்ல வேணும் கடவுளுக்கும் கண் இல்லையெண்டு.
    எங்கட மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாப்போச்சு.

    ReplyDelete
  14. Hi kuzhanthainila,

    Congrats!

    Your story titled 'சுனாமியான கடல்.... ‍ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th December 2008 09:22:01
    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  15. \\அகோரப் பசி தீர்ந்து
    அமைதியாக நீ இப்போ.
    அன்றிலிருந்து
    அமைதி கலைந்த உறவுகளை
    அறிவாயா நீ.\\
    யதார்தமான வரிகள்

    ReplyDelete
  16. //மீன் வாங்கக் காத்திருந்த நாங்கள்
    பிணங்களுக்காய் காத்திருந்தோமே.
    கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாங்கள்
    ஒதுங்கிய பிணங்களப் பொறுக்கினோமே.//


    வாசிக்கும் போதே நெஞ்சம் வலிக்கத்தான்
    செய்கிறது...

    ReplyDelete
  17. வணக்கம் ஹேமா அக்கா...
    நான் ஜெயா. நல்லா இருக்கீங்களா? படிக்க படிக்க அழ வைக்குது உங்க வரிகள்.... உண்மை சில நேரம் ரொம்ப கொடுமை ஆனது.....அக்கா எனக்கு காலேஜ் இருந்ததால இவளோ நாள் வர முடியல...

    ReplyDelete
  18. வலியின்
    வடுகள், இன்னும் மனத்தில்
    வதைப்பதைச் சொல்லுவதற்கு
    வார்த்தைகளில்லை.

    ReplyDelete
  19. கவின்,நன்றி வந்ததற்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  20. புதியவன்,கற்பனையில் இயல்பு வாழவ்வைக் கற்பனையில் நினைத்து எழுதியதே வலித்தால்,அதைப் பட்டவர்களது வலி எப்படியிருக்கும்.

    ReplyDelete
  21. ஜெயா....வாங்கோ வாங்கோ.எங்க ரொம்ப நாளாவே காணொம்ன்னு நினைச்சேன்.குழந்தைநிலாவை மறக்கல.சந்தோஷம்.சுகம்தானே ஜெயா.நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் வந்திட்டுப் போங்க.இனிய வாழ்த்துக்களும் நன்றியும் கூட.
    சுனாமியின் வலியோடு கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  22. திகழ் வாங்க சுகமா!சுனாமி வெறும் காயம் இல்லையே.மறக்கமுடியாத வடுக்கள் அவை.

    ReplyDelete
  23. சுனாமியின் வலிகள் அருமை ஹேமா.

    ReplyDelete