Friday, September 26, 2008

அண்ணா திலீபா...

உணர்வு கலைந்து
உயிர் உருகும் வேளையிலும்
யாழ் கோட்டைத் திசை
கை அசைத்துஇ
"புலிக்கொடி பறக்கும் ஒரு நாள் பார்"
என்ற பார்த்திபனின்
நினைவின் நாள் இன்று.

கலங்கித் தவிக்கிறோம் திலீபா.
வா ஒரு கணம்...
எம் முன்னால்.

திருத்தப்படா தேசம் திருத்த
நேசம் கொண்டு உன்னையே இழந்த
சிநேகிதனடா நீ.
தன் இனம் சுவாசிக்க
சுதந்திரமாய்
தன் சுவாசம் நிறுத்திய
நாயகனாய் நல்லவனே.

சித்தார்த்தன்
எழுதத் தவறிய போதனைகள்
பார்த்திபனால்
திருத்தி எழுதப்பட்டதாய்.

காந்தீயம் மறந்த பாரதம்
மீண்டும் ஒரு முறை
அகிம்சையை அசை போட
பறை தட்டிய அறிவாளியாய்.

உலகம் அழியும் முன்
அழிக்கப்பட்டவனாய்.
ஈழம் தளைக்க...முளைக்க
தானே
முன் விதையான சத்யவான்.

நம் மண் நனைய
முகிலோடு உரஞ்சிய சிரஞ்சீவியாய்.
முத்தாய் உருவாகச்
சிப்பிக்குள் துளியான
தியாகி திலீபன்.

மரணம் துரத்த தூரதேசம் பறந்த
நாங்கள் எங்கே...
நீ எங்கேயடா!
விந்தைக் குழந்தையடா நீ.

ஈழத்து வானின்
விடிவெள்ளியாய் வடிவானவன்.
யாழ் மக்களின்
செல்லப் பெடியன் அவன் சின்னவன்.
மரணத்தையே மலர் தூவி வரவேற்று
வாகனத்தில் ஏற்றி வலம் வந்த
வீரத் தாயின் தமிழன்.

சட்டங்கள் சரி செய்ய
தானே சரிந்த செம்மல்.
வல்லரசுக் களத்தினிலே
வாளாய் மாறிய சிறுத்தை.
சுதந்திர வேட்கைப் பசிக்கு
தானே உணவான உத்தமன்.

தமிழ் ஈழம் சமைக்க
தன்னைத் தானே
சமைத்துக் கொண்ட சூரியன்.
தாயகம் காக்க
துணிவையே ஆயுதமாக்கித்
தீயாகித்...தீபமான தங்கமகன்.

பொய் அரசியல்
பேசிப் பேசியே
காலம் கடத்திய கயவருக்குள்ளும்
சரித்திரமாய் வாழும்
புத்தகமான அற்புதன்.

இயமனுக்கே
நாட் குறித்துக் கூப்பிட்ட
நாட்டுப் பித்தனாய் சித்தார்த்தன்.
தன் நோய் மறந்து
தாய் தேசம் நினத்த
தாயாய் திலீபன்.

எங்கே....எங்கே
இருபத்தொரு வருடங்களாய் அவன்?
நல்லூர்க் கந்தன் காலடியில்
மயிலான மாயன்
அவன் எங்கே?
மன்னன்...மாவீரன்
மருத்துவப் பீடத்து
மருந்தான போராளி.

யார் சொன்னார் இறந்தானென்று?
இறந்தால்தானே பிறப்பொன்று.
ஈழம் பிறக்கையிலே
இன்னொரு பக்கத்தில்
பூத்திருக்கும்
கார்த்திகை மலராய்
பக்கத்திருப்பனாய்
பார்த்திபன்
எம் திலீபன்.

மறவோம் நாம்
மறவோம் நல்லவனே.
வாழும்
உன் நினைவோடு
உன் புகழும்.
தமிழன் என்றொரு
இனம் வாழும் வரை!!!

21 ம் ஆண்டு திலீபனின் நினைவோடு

ஹேமா(சுவிஸ்)

13 comments:

  1. திலீபன் அவர்களே உலகின் மகாத்மா என்று கூறிக்கொள்ள தகுதி உள்ள ஒரு தலைவன். வேறு யாரை அந்த வார்த்தை கொண்டு அழைத்தாலும் கண்டிப்பாக பொருந்தாது. வீரமறவன் திலீபன் மறைந்தாலும் அவன் எண்ணம் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது இனியும் வாழும்.

    ReplyDelete
  2. இதை விட அந்த மாவீரனுக்கு மரியாதையை செலுத்த முடியாது. படித்ததும் கண்ணில் கண்ணீர் துளி. நெஞ்சில் ரண வலி.

    ReplyDelete
  3. வல்லரசிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து,பாரத தேசத்துக்கு புரிந்த மொழியான அகிம்சா வழியை கடைப்பிடித்து உயிர் நீத்த தியாகி திலீபனை நினைவு கொள்ளும் இந் நாளில் ஈழ விடுதலை போரில் உயிர் நீத்த அத்தனை போரளிகளையும் நினைவு கொள்வோம்.

    பொய் அரசியல்
    பேசிப் பேசியே
    காலம் கடத்திய கயவருக்குள்ளும்
    சரித்திரமாய் வாழும்
    புத்தகமான அற்புதன்.

    இந்த‌ வ‌ரிக‌ள் எக்கால‌த்துக்கும் பொருத்த‌மான‌தாய் இருக்கின்ற‌ன‌.ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் உயிர் நீத்த‌ பூப‌தியையும் நினைவு கொள்வோம்.


    அப்புச்சி

    ReplyDelete
  4. நன்றி திலீபன்,அப்புச்சி.
    எங்கள் மாவீரர்களுக்கு எங்கள் அஞ்சலிகள் எப்போதும்.அவர்களின் மூச்சில்தானே எங்கள் வாழ்க்கை!

    ReplyDelete
  5. நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.விடுமுறையில்
    முடிந்தால் பதிவுகள் போடுகிறேன்.சந்திப்போம்.

    ReplyDelete
  6. கானா பிரபாவின் தளத்தில்...
    http://videospathy.blogspot.com/2008/09/blog-post_26.html
    திலீபன் அவர்களின் பன்னிரண்டு நாள்.

    ReplyDelete
  7. திலீபன் அண்ணாவை நினைவில் இருத்தி உயரிய இரங்கல் நினைவை உங்கள் கவிவரிகளில் தந்துவிட்டீர்கள் ஹேமா. இப்போதும் அந்த நினைவுகள் பசுமையாய் இருக்கு. அந்த 12 நாட்களும் ஏதாவது செய்து, எப்படியாவது செய்து திலீபன் அண்ணாவின் வேள்வியை நிறுத்தமாட்டார்களா என்று கலங்கித் தவித்த உள்ளங்கள் பல்லாயிரம்.

    ReplyDelete
  8. திலீபனின் தியாகத்திற்கு தலை வணங்குவோம்...
    //மறவோம் நாம்
    மறவோம் நல்லவனே.
    வாழும்
    உன் நினைவோடு
    உன் புகழும்.
    தமிழன் என்றொரு
    இனம் வாழும் வரை!!!//
    தமிழனும் அழிய மாட்டான். நின் புகழும் அழியாது நிலைத்திருக்கும்...

    ReplyDelete
  9. திலீபனின் நினைவு நேரக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. நான் யார்
    ஹேமா.
    கோண்டாவில்,யாழ்ப்பாணம்,ஈழம்,
    இலங்கை.

    எனக்காக இதை மாற்றி
    ஹேமா.
    கோண்டாவில்,யாழ்ப்பாணம்,தமிழீழம்.

    இப்படி வைக்க முடியுமா.

    தோழமையுடன் திலீபன்.

    ReplyDelete
  11. திரு அப்புச்சி அவர்கள் சொன்னதை தான் நானும் சொல்ல நினைக்கிறேன் ஹேமா ..

    அந்த மாவீரனின் நினைவுகள் என்றும் அழியாது ...

    ReplyDelete
  12. அருமை சகோதரி உங்கள் கவிதை. திலீபன் அண்ணா என்றும் எல்லோர் மனதிலும் சுடர் விட்டு எரியும் ஒளி.

    ReplyDelete
  13. தியாகி திலீபன் அவர்களின் நினைவோடு தீபம் ஏற்றிய
    திலீபன்,அப்புச்சி,பிரபா,தமிழப்பறவை,விஷ்ணு,காரூரன் அனைவருக்கும் என் நன்றிகள்.எம் இனத்தின் விடுதலைக்காக உயிரை விதைத்த அத்தனை பேரையுமே நினைவு கொள்வோம்.

    காரூரன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி.இன்னும் வாருங்கள்.

    ReplyDelete