Wednesday, August 20, 2008

வேண்டும் நீ...வேண்டும்

உன்னோடு நான் வேண்டும்.
உயிரோடு கலந்தே வேண்டும்.

விழிகளுக்குள் மலராய் வேண்டும்.
வாடாமல் நீர் வார்க்க வேண்டும்.

காலை மாலை நீயாக வேண்டும்.
குழந்தையாய் மடிதவழ்ந்து
மார்புக்குள் புதைய வேண்டும்.

விடியாத இரவில் நீ
நிலவாக வேண்டும்.
முடியாத கதையொன்றை
மொழிகடந்த மொழியாலே
மௌனமாய் பேசவேண்டும்.

தாயாக நீ வேண்டும்.
சே(தா)யாகும் வரம் ஒன்றை
விரும்பியே தர வேண்டும்.

தலை தடவி முடி கோதி
தமை மறக்கும் அன்பு வேண்டும்.
அழியாத முத்தங்கள்
மூச்சுக்குள் நிறைய வேண்டும்.

காதலால் மனம் கனிய வேண்டும்.
கண்ணுக்குள் உனை இருத்தி
கவிதையாய் வாழவேண்டும்.

விரல்கள் இருபதும்
இணைய வேண்டும்.
விண்ணோடு மறையும்வரை
பிரியாத உறவு வேண்டும்.

நீ மட்டும் முழுதாய் வேண்டும்.
எனக்கே எனக்காய்
இறுதிவரை வேண்டும்.

அன்பே...அன்பே நீ வேண்டும்.
அலுக்காமல் என் பெயரை
சொல்ல வேண்டும்.

காமம் கடந்தும்
காதல் கடக்கவேண்டும்.
குறைவில்லாச் செல்வங்கள்
இறைவன் தரவேண்டும்.

பிறர் அன்பைப்
புறம் தள்ள வேண்டும்.
வீணாகக் கண் வைத்தால்
அவர் கண்
காணாமல் போக வேண்டும்.

காகிதக் கப்பல் ஒன்று
கரை சேர வேண்டும்.
காணாத வாழ்வொன்று
கற்பனையில் வரையவேண்டும்.

கனவோடு போராட வேண்டும்.
நினைவோடு நிறைந்திருக்க வேண்டும்.

கவிபுனையக் காதலனாய்
கருவாக வேண்டும்.
தவறென்று நினைத்தால் நீ
பொறுத்தருள வேண்டும்!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

  1. இக்கவிதையை மெட்டமைத்து பாடலாக்கலாம். அது போன்ற எதுகை மோனையோடு அமைந்திருக்கிறது. அது சரி எங்கே பிடிக்கிறீர்கள் கவிதைகளுக்கான படங்களை? அழகான படங்கள். மற்றும் தங்கள் இணைய முகப்பில் போட்டிருக்கும் நிலவும் வானும் காதலர்களும்.. மிக அழகு. நிலவும் முகிலும் நிலா முகிலன் இணையத்துக்கும் சரியாக இருக்கும் தானே...

    ReplyDelete
  2. வாவ்..இவ்வளவு சீக்கிரமா உங்கள் பின்னூட்டம்.இப்போதான் பதிவு இட்டுக்கொண்டு இருக்கிறேன்.படங்கள் தளங்களில்தான் தேடுதல் வேட்டை.

    என் தளம் என்னமோ குழப்பமா இருக்கு.அதான் மாத்திப் பாக்கிறாங்க.
    உங்க தளத்துக்கும் பொருத்தமாத்தான் இருக்கும்.ம்ம்ம்...நிலா இருக்கு முகில் இருக்கு.

    உங்க பெயரைப் பாராட்ட வேணும்ன்னே நினைச்சிட்டே இருந்தேன்.அருமையான பெயர் "நிலாமுகிலன்."அழகான தமிழ்ப்பெயர்.எங்கே போனாலும் தமிழனை அடையாளம் காட்டக்கூடிய பெயர்.நிலா ..எனக்குப் பிடித்த பெயர்.அதோடு முகிலும் சேர்ந்து இன்னும் அழகாயிருக்கிறது.உங்க இயற் பெயரா?அருமை...அருமை.
    நன்றி முகிலன்.

    ReplyDelete
  3. நன்றி ஹேமா. எனது இயற்பெயர் வேறு. இணையத்திற்காக முதலில் பெயரை நிலா ரசிகன் என வைத்திருந்தேன். உண்மையில் எனக்கு நிலா என்றால் கொள்ளை பிரியம். எனினும் நிலா ரசிகன் என்ற பெயரில் ஏற்கனவே ஒருவர் நல்ல கவிதைகள் எழுதி வருவதால்... நிலா முகிலன் என பெயர் வைக்க வேண்டியதாகியது. நான் அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ் மேலுள்ள தீராத காதலால் தமிழ் பெயர்கள் வைக்கிறேன்.
    உங்கள் கவிதைகள் எனக்கு பிடிப்பதால், அடிக்கடி உங்கள் இணையத்தை வந்து பார்க்கிறேன். உடனுக்குடன் பின்னூட்டம் இடுகிறேன். நீங்க இருக்கும்போதே நான் பின்னூட்டம் இட்டது உணர்ந்து மகிழ்ச்சி

    ReplyDelete
  4. //பிறர் அன்பைப்
    புறம் தள்ள வேண்டும்.
    வீணாகக் கண் வைத்தால்
    அவர் கண்
    காணாமல் போக வேண்டும்.//

    அடேங்ப்பா... அதீத காதலில் வரும் சாபமா... உங்கள் காதலாம் பலர் பாதிக்கப்படுவார்கள் போல...

    ReplyDelete
  5. விக்கி...கி...கி...கி...கி...கி

    ReplyDelete
  6. //காகிதக் கப்பல் ஒன்று
    கரை சேர வேண்டும்.
    காணாத வாழ்வொன்று
    கற்பனையில் வரையவேண்டும்.


    கவிபுனையக் காதலனாய்
    கருவாக வேண்டும்.
    தவறென்று நினைத்தால் நீ
    பொறுத்தருள வேண்டும்!!!
    //

    வாவ்... ரொம்பவே ரசித்துப் படித்தேன் சகோதரி. எல்லா வரிகளுமே இயல்பாய் அருமையாய் இருக்கின்றன.

    ReplyDelete
  7. நன்றி சேவியர் அண்ணா.அடிக்கடி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete