Sunday, July 13, 2008

பாரதமே...கைகொடு கொஞ்சம்.


விம்மித் தணிவது
வெளியில் தெரியாமலே
என் தேசத் தாய்
அழுதுகொண்டிருக்கிறாள்
தனித்து விட்டேன்
என்கிற அன்னியமாய்.
தனக்குக் கை கொடுக்கத்
தன் தாய் வருவாள்
என்கிற நம்பிகை பாறாமல்
உயிரை ஓர் அணுவுக்குள் பிடித்தபடி.
பாரதமே புரியாமலா நீ...


என் தேசத் தாயின் குழந்தைகள்
வலுவிழந்து எங்கெல்லாமோ
பரவிக் கிடக்க,
வாலிபக் கனவுகள் கலைந்து
நினைவுக் கல்லறைகளாக
நிரம்பி வழிந்தபடி.
உதிரும் இந்த மலர்களின்
உயிரைக் காப்பார் யார்?


இரத்த வாடைக்குள்ளும்
இரத்த ஆடைக்குள்ளும்
என் தாய் தூக்கம்
தொலைத்துத் தவிக்கிறாளே.
காக்கின்ற அவள் தாய்
காந்தீயம் பேசியபடி
மௌனமாய்
ஆயுதம் வைத்திருப்பவனோடேயே
கை கோர்த்துக் கொண்டு.


எத்தனை காலம்தான் என் தாய்
குருதியில் குளித்துக்கொண்டிருப்பாள்.
உங்கள் வெற்றிக்கு விளையாட
என் தாய்தானா!
எவருக்கு வேண்டும்
உங்கள் வெற்றியும் தோல்வியும்.
அவள் சந்தோஷம் கண்டு
எவ்வளவு காலமாயிற்று.


பிணங்களை
மொய்த்துக் கொண்டிருக்கும்
புழுக்களை வைத்தா
அரசாளப் போகிறீர்கள்.
புழுக்களுக்காகவா
இந்தப் புனிதப் போர்.
தேசிய கீதத்தின் கோட்பாடு
குருதியும் பிணமுமா.
வேதங்களைப் புதைத்தா
கறையானுக்குச் சோறு கொடுத்தீர்கள்.


பாரத தேசமே...
பிளவு பட்டுக் கிடக்கும்
இரு இனங்கள்
ஒருவர் கண்ணை
ஒருவர் கொத்தித் தின்றபடி.
நடுவில் ஏதுமறியா
அப்பாவிகளாய் நாங்கள்.
கை கோர்க்க...கை கொடுக்க
முடியாமல் நீ எப்படி மௌனமாய்!
உன்னை விட்டால் எங்களுக்கு யார்?


பிண வாடைப் போர்வைக்குள்
என் அன்பு தேசத்தைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஆசையோடு.
வாழும் காலம் அகதியானாலும்
இறுதி மூச்சின் காலம்
என் தேசத்தில் விட அவாவோடு.
ஆனாலும் என் தேசத் தாயே
கண்ணீர் கூட வர மறுத்து
வரண்ட கண் குழிக்குள்
எஞ்சியிருக்கும் மிச்சக் குஞ்சுகளை
அடை காத்தபடி.
இதில் எப்படி
நானும் என் ஆசைகளும் !!!

ஹேமா(சுவிஸ்)

12 comments:

  1. சில திருத்தங்கள் தேவை..
    //தன் தாய் வருவாள்
    என்கிற நம்பிகை பாறாமல்//
    'பாராமல்' என இருக்க வேண்டும்..
    //புளுக்களை வைத்தா
    அரசாளப் போகிறீர்கள்.//
    'புழுக்களை' என்றிருக்க வேண்டும்..
    //வாழும் காலம் அகதியானாலும்
    இறுதி மூச்சின் காலம்
    என் தேசத்தில் விட அவாவோடு//

    வாழும் காலத்திலேயே உங்கள் தேசத்தில் இருக்க பிரார்த்திக்கிறேன்..
    பாரதத்திற்குப் புரியும்.. நடிக்கிறது புரியாமல்..தாயகம் திரும்ப பாரதம் ஆதரவளிக்கிறதோ இல்லையோ, எங்கள் அன்பை அளிக்கிறோம்..

    ReplyDelete
  2. 13 Jul 08, 15:22
    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ஹேமா.இதே பொழப்பாத்தான் அலையுறீங்களா! சும்மா சொன்னேன் மேடம். ரொம்பவே அருமை பாரதக்கவிதை.ஜுனைட்

    ReplyDelete
  3. நன்றி தமிழ்ப்பறவை.உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்.பாரதம் நடிக்கிறதோ என்னமோ நாங்க இங்க வெளிநாடுகளில் வேற்று இன மக்களுக்கு நடுவில் நடித்துக்கொண்டு இருக்கிறோம்.விரக்தியான மனங்களோடு முண்டியடித்துக் கொண்டிருக்கிறோம்.பாரதம் எங்களைப் புரிந்து கொள்ளுமா?

    எழுத்துப் பிழை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
    பாறாமல்(சரிந்து போகாமல்)சரியென்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. இதே பொழைப்புன்னா என்னத்தை சொல்றீங்க ஜுனைட்.

    ReplyDelete
  5. சுத்த மடத்தனமான கோரிக்கை, தமிழ்பறவை கூறியது போல் நான் வாழும் இந்தகாலத்தில் ஈழத்தில் பிறக்கவில்லை என்று வேதனைபடுகிறேன். செவிடனுக்கு கூட சங்கு முழக்கும் கேட்கும் இந்தியாவிற்கு என்றும் கேட்காது.
    உங்களுக்காக
    வித்தாக கவிஞர் பா.விஜய் அவர்களின் பாடல்.
    "நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
    லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்"
    சுதந்திர ஈழ நாட்டில் என் மீதி நாட்களை கழிக்க உண்மையில் விரும்புகிறேன்.
    கண்டிப்பாக நீங்கள் பெற்ற வெற்றியை சுரண்ட அல்ல, என் இன மக்களின் முன்னேற்றத்திற்கு என்னால் ஆனா பங்களிப்பாக இருக்கும்.

    ReplyDelete
  6. அருமையான வரிகள்

    ReplyDelete
  7. திலீபன் ம்ம்ம்...சொல்லாம சொல்லீட்டிங்க நான் மடச்சி என்று.சரி...சரி.எங்கள் அரசியல் கவிதை எழுதவில்லை என்கிறீர்கள்.எழுதினால் இப்பிடியா!!! எங்கள் அரசியல் இப்பிடிதானே போகுது.ஆயிரம் கட்சிகள்...ஆயிரம் குழுக்கள்.ஒருத்தரை புகழ்ந்தால் மத்தவர் முறைப்பார்.மனசில ஆயிரம் இருந்தாலும் எல்லாம் சொல்ல முடியாத அரசியல் நம்மது.இருக்கிற வேதனையை இப்பிடிதான் கொட்டித் தீர்க்கலாம் திலீபன்.

    ReplyDelete
  8. வாங்க திகழ்.நன்றி ரசித்ததற்கு.

    ReplyDelete
  9. எந்த நாட்டின் தயவும் ஈழ சிங்கத்திற்கு (புரியும் என்று நம்புகிறேன்) தேவையில்லை, வென்றிடும் எங்கள் தங்கம் ஈழத்தை ஒருநாள் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை தோழி. இந்தியா சுமூக தீர்வு காணும் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் மடச்சிதான் (மன்னிக்கவும்). முப்பது ஆண்டுகளாக கண்டும் காணாமல் இருக்கும் கல் மனம் படைத்த மக்கள் இந்திய மக்கள்.

    ReplyDelete
  10. ஹேமா.. உங்கள் ஆதங்கம் புரிகிறது. பெரும்பான்மை இந்தியமக்களது கவனத்தை தமிழீழ பிரச்சினை ஈர்க்கவில்லை. தமிழக அரசியல்வாதிகளே தமிழீழ பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துப் பேசுவதில்லை. இதுதான் இன்றைய நிலை. இதே நிலை தொடருமா, அல்லது, தமிழீழத்திற்கு ஆதராவாக ஒரு நல்லதொரு திருப்பம் ஏற்படுமா என்று இப்போது சொல்ல இயலவில்லை.

    ReplyDelete
  11. வணக்கம்.வாங்க பாரதிய நவீன இளவரசன்.முதன் முதலாக வந்திருக்கிங்க.நன்றி கருத்துக்கும் கூட.உங்களைப் போல சிலராவது எங்கள் போராட்டம் அதன் வலி பற்றிய விசயங்களை அறிந்திருக்கிறீர்களே.ஆனால் இந்தியத் தமிழ் மக்கள் அயலில் நாங்கள் படும் அவஸ்தை பற்றி அக்கறை கொள்ளாதது பெரும் வருத்தத்துக்குரியதே.பார்க்கலாம்.
    எவ்வளவு காலம்தான் கண்மூடியிருப்பார்கள்.தங்கள் இனம் கண் முன்னால் அழிந்து அவலப்படுவதைப் பார்த்துக்கொண்டு.

    ReplyDelete