Thursday, July 03, 2008

முடிவில்லாப் பயணம்...

வனவாசம் காட்டில் அல்ல.
வெளி நாடுகளில்.
ஈழம் கண்ணில் விடியும் வரை
எம் இனம் ஏற்றுக்கொண்ட
வேஷம் இது.
காலச் சுழற்சியில்
காத்திருந்து காத்திருந்து
கலைந்த கனவுகள் ஏராளம் ஏராளம்.
நினைவுகள்... நின்மதிகள்...
சொந்தங்கள் பந்தங்கள்
எல்லாம்...எல்லாமேதான்.

நான் வாழ்ந்த
அந்த அழகான கிராமம்
இப்போ அழிந்துவிட்ட கிராமமாம்.
அகழ் ஆராய்வு செய்கிறார்களாம்.
எத்தனை ஆயிரம் கனவுகளை
அதற்குள் புதைத்துவிட்டு
புலம் பெயர்ந்தோம்.
அகதிகளாய் அநாதைகளானோம்.
எம் கனவுகளை அகழ்ந்து
யார்...எப்போ...புதுப்பிப்பார்கள்?

ஒரு சிறு நூல் நுனியில்
உயிர் ஊசலாட தலை தெறிக்க
தடம் மாறினோமே.
மயிரளவு கூட உயிருக்கு
மரியாதை இல்லாமல்
மரித்த நிலையில்
மிஞ்சும் உயிரைத் தூக்கிக் கொண்டு
தாய் மண் விட்டுத் தூரமாகி
தஞ்சம் கேட்டுத்
தடுக்கிய நாட்டில்
மிஞ்சிய மானமும்
மலையேறி விட...
முடிவேயில்லாத குளிர்ந்த
இரவுகளின் மடியில்
மிச்சம் மீதியிருந்த
மன உணர்வுகளும்
மடிந்து விட்டன.

இப்போதைய தேவை
வேலை...வேலை பணம்...பணம்.
காலை முதல் மாலை வரை
களைத்து விழும் உடலுக்கு
உணவு இல்லாவிட்டாலும்
உணவை ஒதுக்கினாலும்
கனவோடு ஓர் படுக்கை.

கழற்றிப் போட்ட உடைகள்
தலைமாட்டில் காத்திருக்க
குறுகிய இரவு அலாரம் அடிக்க
மீண்டும் மாட்டிக்கொண்டு
பனிக்கூழுக்குள் கால்கள் புதைய ஓட்டம்.

மாதம் முடிய மிஞ்சியதை
பிய்த்து...பிரித்து அனுப்பிவிட்டு
உடலும் மனமும்
களைத்துக் காலில் விழ
மீண்டும் தொடரும்
வேண்டாம் என்று சொல்ல முடியா
முடிவில்லா மெளனப் பயணம்!!!

ஹேமா (சுவிஸ்)23.02.2001

15 comments:

  1. //
    காலை முதல் மாலை வரை
    களைத்து விழும் உடலுக்கு
    உணவு இல்லாவிட்டாலும்
    உணவை ஒதுக்கினாலும்
    கனவோடு ஓர் படுக்கை
    //


    மிகச் சிறப்பான சிந்தனையோடு கூடிய வரிகள்.....

    என்ன செய்ய!
    நமக்காக இல்லாவிட்டாலும்
    நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்காக
    முற்றிலா முடிவிலியாய்
    நம் பயணத்தை தொடர வேண்டியே இருக்கிறது........

    ReplyDelete
  2. வணக்கம் ஹேமா

    வழக்கம் போல் மனம் கனக்கும் நிதர்சன வரிகள்.

    ஒரு வேண்டுகோள் பின்னூட்டப் பெட்டியில் இருக்கும் Word Verification எடுத்து விட்டால் நல்லது, பலர் இதற்காகவே பின்னூட்டம் போடத் தயங்குவார்கள்.

    ReplyDelete
  3. //மாதம் முடிய மிஞ்சியதை
    பிய்த்து...பிரித்து அனுப்பிவிட்டு
    உடலும் மனமும்
    களைத்துக் காலில் விழ
    மீண்டும் தொடரும்
    வேண்டாம் என்று சொல்ல முடியா
    முடிவில்லா மெளனப் பயணம்!!!//
    ( ) எனது புரிதல்களை அடைப்புக்குறிக்குள் வார்த்தைகளில் மொழிபெயர்க்க இயலவில்லை...

    ReplyDelete
  4. 3 Jul 08, 02:55
    இதுவல்லவா கவிதை,மனதின் வலிகளின் வெளிப்பாடு
    எழுத்தின் வழியாக.சுதன்

    ReplyDelete
  5. //என்ன செய்ய!நமக்காக இல்லாவிட்டாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்காக முற்றிலா முடிவிலியாய் நம் பயணத்தை தொடர வேண்டியே இருக்கிறது//
    வாங்க நிர்மலாகுமார்.அடிக்கடி என் தளம் வந்து கருத்துத்
    தெரிவிக்கிறீர்கள். நன்றி.நீங்கள் எழுதிய இந்த வரிகள் உண்மைதான்.எம்மைச் சேர்ந்தவர்களுக்காகவே விரும்பியோ விரும்பாமலோ எம் பயணங்களைத் தொடர வேண்டியுள்ளது.

    ReplyDelete
  6. வணக்கம் பிரபா.வாங்க.கன நாட்களுக்குப் பிறகு உங்கள் கருத்து இன்று கிடைத்திருக்கு.சந்தோஷமா இருக்கு.நன்றி.

    நீங்கள் சொன்னது போலவே ஆதிஷா என்பவரும் சொல்லியிருந்தார்.Word Verification எடுக்கச்சொல்லி.எனக்கு அது தெரியாமல் இருக்கிறது.எடுக்க ஆவன செய்கிறேன் சீக்கிரத்தில்.

    ReplyDelete
  7. வணக்கம் சுதன்.
    உங்கள் பின்னூட்டங்கள்
    என் மன ஓட்டங்களை ஊக்கப்படுத்துகின்றன.நன்றி.

    ReplyDelete
  8. ( ) எனது புரிதல்களை அடைப்புக்குறிக்குள் வார்த்தைகளில் மொழிபெயர்க்க இயலவில்லை...


    வணக்கம் தமிழ்ப்பறவை.மொழி இல்லாமலேயே உங்கள் கருத்துக்களைச் சொல்லிவிட்டீர்கள்.நன்றி.

    ReplyDelete
  9. அருமை அருமை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஈழம் மலர்ந்தால் இன்றைய இளைய ஈழ தளிர்கள் (குடியெரிய நாட்டில் வளர்ந்த குட்டிகள்) தாய் நாடு செல்ல விரும்புவார்களா? ஈழம் மலரும் மலரும் மலரும் மலரும் மலரும் மலரும் மலரும் ................................................................................................. இதைவிட அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். சிலர் நம்பிக்கையை பலிக்கும் என்பார்கள். எல்லோரும் நம்பிக்கை வையுங்கள் அப்போது கண்டிப்பாக பலிக்கும்.

    ReplyDelete
  10. நன்றி திலீபன் உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும்.உங்கள் சந்தேகம் சரியானதே.இங்கு பிறந்து வளரும் தலைமுறைக்கு இந்த வேதனை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் தாங்கள் பிறந்த நாட்டையே தாய் நாடாக நினைக்கிறார்கள். விடுமுறைக்குப் போய்வர தகுந்த நல்ல இடமாகவே அவர்கள் பார்வையில் ஈழம்.அத்தோடு பொருளாதார வசதியோடு வளர்ந்த நாடுகளின் வசதி வாழக்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்தக் குழந்தைகள்.இவர்கள் எங்கள் நாட்டுக்கு வந்து வாழ்வார்களா என்பது பெரிய ஒரு கேள்விக்குறியே!எங்காவது சில குழந்தைகள் மட்டும் பெற்றவர்களின் நாட்டைப் பற்றிய அக்கறையோடு தங்கள் சுய உணர்வில் தாய் நாட்டுப்
    பற்றோடு காண்கிறேன்.

    ReplyDelete
  11. வழி பிறக்கும்
    வலிகள் எல்லாம் போகும்

    ReplyDelete
  12. வாங்க திகழ்.சுகம்தானே!நானும்...வலிதீர வழி காட்டுவார்கள்.காத்திருப்போம்.

    ReplyDelete
  13. Hi Hema,manasu sarillama irukkinkala?thairiyama irungka.manasu kavalai paddalum unga sinthanaikal rasikka koodiyatha irukku.joosikkama irungka.oru naalaikku santhosama iruppingka.Ram.

    ReplyDelete
  14. Ram அடிக்கடி வந்து ஆறுதலான வார்த்தைகள் சொல்கிறீர்கள். நன்றி.சந்தோசம் வெகுதூரமில்லை.
    காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  15. 'தமிழகத்தில் வாழும் என்னால் இலங்கை தமிழர் மனநிலை முழுவதுமாக அறிய முடிவதில்லை. சில சமயம் சகோதரர்கள் நிலை கண்டு இமையையும் மீறி கண்ணீர் வந்து விடுகிறது.

    முதலில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இலங்கை நிலைமை சொல்லும் "விடை கொடு எங்கள் நாடே.." பாடல் பார்த்து பட முறை கண்ணேர் கசிந்ததுண்டு.

    உண்மையை சொல்கிறேன் குழந்தைநிலா ... இன்றும் கண்கள் கசிந்து விட்டன. நல்ல படைப்புகள் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. உணர்வுகளுடன் பிணைந்துதான் நல்ல படைப்பு என்பதை உங்கள் கவிதை உணர்த்தி விட்டது.

    நன்றி. வாழ்த்துக்கள்.
    The Tamilish Team

    ReplyDelete