அறுபதாவது
சுதந்திர தினமாம்
இலங்கையில் இன்று.
பிரித்தானியா
தாரை வார்க்க
பெரும்பான்மை
பெற்றுக்கொண்ட
பொன் நாள்.
தமிழன்
உரிமைகள் இழந்து,
எம் தாயவளுக்கு
விலங்கிட்ட
அமங்கல நாள்.
எம் தேசத்துக்
காற்றே சொல்
சுதந்திரம் உண்டா
இலங்கையில்.
தேசத்தின் வேதனை
விழிகளுக்குள் அழுத்த,
கடமைக்காக
வானம் வெடித்து,
இரத்தக் கண்ணீரோடு
விடிகின்ற கதிரவனே
நீ... சொல்
சுதந்திரத்தின்
சாயலாவது உண்டா
எம் தேசத்தில்.
உணவே இல்லை...
இருந்தாலும்
உண்ண நின்மதியில்லை.
தூக்கமே இல்லை...
தூங்கினாலும் அமைதியில்லை.
வாழ்வு இயல்பாயில்லை.
உயிருக்கு உத்தரவாதமில்லை.
வானம் பயம்,
பூமி பயம்
பேச்சுப் பயம்,
மூச்சும் பயம்
இலங்கையின்
அகராதியிலேயே
அகற்றப்பட்டதாய்
ஒரு பேச்சு
சுதந்திரம் என்னும் சொல்.
இறந்தவர் இரத்தமெல்லாம்
உறிஞ்சிக் கண் சிவந்த
சூரியனே...
கடனாய்க் கொடு
கொஞ்சம் குருதி.
நாடிக்குழாய்களும்
நாளக்குழாய்களும்
காய்ந்து கொண்டதாம்.
ஊட்டச்சத்தும்
அற்றுப்போனதாம்
எம் சிறுவர்களுக்கு.
எதிர்காலச் செல்வங்களைக்
கருப்பையிலேயே கழற்றி,
குருத்து வாழைகளை
முளையிலே வெட்டியெறியும்
வீரம் பார்த்தாயா.
முளை கிள்ளி
மூளை கிள்ளி
தலைமுறைக் குழந்தைகளைக்
குலையோடு சாய்க்கும்
சேதி அறிவாயா.
பட்டாம் பூச்சியாய்
பகலோ... இரவோ
அரசியலோ... ஆட்சியோ
அறியாத
எம் எதிர்காலக் குருத்துக்கள்
குருதிக்குள் மிதக்கும்
காட்சி கண்டாயா.
இயற்கையே
எம் சந்ததி
காத்துக் கொடு.
மீட்டுக் கொடு.
இரத்த ஆற்றிலேயே
குளித்தெழுந்து
உலகையே வலம் வரும்
பகலவனே...
சொல்லி வா
சர்வதேசச் செவிகளில்
உரக்க அறை.
எம் இளம் சந்ததிகள்
தொலையும் செய்தி பற்றி.
எம் தலைமுறையாவது
சுதந்திரமாய்ச் சுவாசிக்க
சுதந்திரமான....சுகமான
காற்றின் தேவை பற்றி !!!
ஹேமா(சுவிஸ்) 04.02.2008
இறந்தவர் இரத்தமெல்லாம்
ReplyDeleteஉறிஞ்சிக் கண் சிவந்த
சூரியனே... சுதந்திரத்தின் மீது கோவம் என்றாலும் நியாயமான கோவம்தான்.