*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 04, 2009

தொடரும் வாழ்வில்...



நண்பன் ஒருவன் இறந்ததாய்ச் செய்தி.
தற்கொலையாம்.
தன்னைத் தானே சுட்டுக்
கொண்டானாம் - கொன்றானாம்.
கோழை என்றாலும் வீரன்.
எதிரியின் குண்டு வாங்கிச் சாகாத வீரன்.

பிரச்சனைகளோடு விளையாட முடியாமல்
தோற்றுப்போனானாம்.
எதிர்க்காற்றில் நீச்சலடிக்கத்தானே
நேசங்கள் நீக்கி
தேசம் கடந்து
சர்வதேசக் கூலிகளாய் நாடு கடத்தப்பட்டோம்.

அழத்தான் முடிந்தது.
அரற்றினேன் நண்பர்களிடம்.
வந்து பேசியது அவனது முகம்.
அவன் மனைவி ,ஐந்தே வயதான மகன்.
ஏனடா....நீ எங்கேயடா.

பொழுது நகரச் சாப்பிட்டேன்.
படுக்கையில் புரண்டேனே தவிர
தூக்கம் புழுவாகி நெளிந்தது.
அவனது புள்ளியில்.

விடிந்தது...தொலைபேசியில் விசாரித்தேன்.
புறப்பட்டேன்.
மாற்றுத் துணிகளோடு புகையிரதத்தில்.
டிக்கட் எடுத்தேன்.
அறிவித்தலுக்காகக் காத்திருக்கிறேன்
கோட்டுக்கு வெளியில்.
யன்னலோர இருக்கையே பிடிக்கிறது.
தேடி இருந்து கொள்கிறேன்.
யாரோ ஓட்டுனர் கதவைத்
திறந்தால் மட்டுமே ஏறவும் இறங்கவும்.
மூன்று மணித்தியாலப் பயணம்.
தூங்கியும் இருக்கலாம்.

இறங்கி நடக்கிறேன்.
பாதையின் இடையில் சிநேகிதர்கள்
குசல விசாரிப்பு.
சந்தோஷமான விடயங்களும் கூட.
அண்ணா வீட்டுக்குப்
பழங்களும் இனிப்புக்களும் பை நிறைய.
இறந்தவர் போக இயல்பு வாழ்வு
கை கோர்த்துக் கொள்கிறது.

போனேன்...
அவளைப் பார்த்ததுமே குழறி அழுதுவிட்டேன்.
குழந்தை சிரித்தான் தூக்கினேன்.
பிடிக்கவில்லை அவனுக்கு என்னை.
இதோ விளையாடிக் கொண்டிருக்கிறான்.

சம்பிரதாயங்கள் நடந்தன.
முடிந்தன.
முடிந்தது எல்லாமே மூன்று நிமிடத்தில்.
அந்தப் பிஞ்சு கேட்கும் கேள்விகள்
மட்டும் முடிவில்லாமல்.
" அம்மா அப்பா எங்கே? " !!!

ஹேமா(சுவிஸ்)

ஊரில் என் அயலவரும் நண்பருமான
பொ.கேதீஸ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.(31.08.09)

21 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை மனதை நெகிழ வைக்கிறது ஹேமா. எனக்கும் இதே போல் ஒரு அனுபவம்.
ஆறு வயதுக் குழந்தை,'' அப்பா எப்போ எழுந்து விளையாட வருவார். இன்னும் எவ்வளவு நேரம் ரெஸ்ட் எடுப்பார்' என்று கேட்டு எல்லோரையும் ஓவென அழவைத்தாள்.

ஆ.ஞானசேகரன் said...

//அந்தப் பிஞ்சு கேட்கும் கேள்விகள்
மட்டும் முடிவில்லாமல்.
"அம்மா அப்பா எங்கே?" !!!//

்ம்ம்ம் முடியவில்லை

- இரவீ - said...

குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

துபாய் ராஜா said...

நண்பருக்கு அஞ்சலிகளும், குடும்பத்தாருக்கு ஆறுதல்களும்....

யாழினி said...

வேதனையாக உள்ளது அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வரிகள் ஹேமா!

அமுதா said...

:-((
வேதனையாக உள்ளது

கண்ணன் said...

வேதனை கண்ணீர் விரக்தி வேறு என்ன தோழி
சொல்வது

சி.கருணாகரசு said...

துயரத்திற்கு என் இரங்கல் ஹேமா.

Anonymous said...

குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

சத்ரியன் said...

//அழத்தான் முடிந்தது.
அரற்றினேன் நண்பர்களிடம்.
வந்து பேசியது அவனது முகம்.

ஹேமா,

திரும்பக் கிடைக்காது என்றே தெரிந்தும் தற்கொலை செய்துக் கொள்வதை என்னவென்று சொல்வதோ?...

//அவன் மனைவி ,ஐந்தே வயதான மகன்.
ஏனடா ...நீ எங்கேயடா.//

இந்த வரிகளுக்கு நாம் என்னச் சொல்லி அவர்களை நிலைக்கொள்ள வைக்க முடியும்?

அவரது மரணம் "எதற்கானது" என்பதை அரைகுறையாகத்தான் ஊகிக்க
முடிகிறது.

தட்டச்சுப் பிழை: மனவி ==== மனைவி. மாற்றிவிடுங்களே.

சி.கருணாகரசு said...

ஊரில் என் அயலவரும் நண்பருமான
பொ.கேதீஸ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.(31.08.09)//

நமது நண்பருக்கு எமது கண்ணீர் அஞ்சலி.

நட்புடன் ஜமால் said...

ஏதோ ஒன்றின் அறிவிப்பாகத்தான் நேற்றைய எரிச்சலோ தங்களுக்கு.

---------------

குழந்தைகளின் கேள்விகளுக்கு பல முறை விடை காணப்படுவதில்லை

--------------

வருத்தத்துடன் ...

Unknown said...

நெகிழ வைத்தது உங்கள் வரிகள்...!!

விழிகள் நனைந்தது..... வரிகள் மறைந்தது...!!

Muniappan Pakkangal said...

Convey my condolences to the beraved family Hema,ezhutha vaarthaihal varavillai.

kanagu said...

நெகிழ வைத்துவிட்டது...

வேதனையாக உள்ளது.. :((

thamizhparavai said...

ஆழ்ந்த அனுதாபங்கள்... :-(

S.A. நவாஸுதீன் said...

தொடரும் வாழ்வில் தொடரும் வலிகள்.

//அந்தப் பிஞ்சு கேட்கும் கேள்விகள்
மட்டும் முடிவில்லாமல்.
"அம்மா அப்பா எங்கே?" !!!//

ரொம்ப கஷ்டமா இருக்கு ஹேமா படிச்சதும்

சினேகிதி said...

:(

அரங்கப்பெருமாள் said...

பின்னூட்டம் எழுதவே கொஞ்சம் வேதனையாய் இருக்கிறது.

மேவி... said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஹேமா said...

என் துக்கத்தோடு பகிர்ந்துகொண்ட அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.

நான் இந்தக் கவிதை நண்பன் - துக்கம் என்பதைத் தாண்டி வாழ்வு யார் இருந்தால் என்ன இறந்தால் என்ன வாழ்வியல் தொடர்கிறது என்பதையே சொல்ல நினைத்திருந்தேன்.ஆனால் அந்தக் குழந்தையின் கேள்விகள் மாத்திரம் அந்த இடத்திலேயே நிற்கிறது என்பதாக.

Post a Comment