Wednesday, November 26, 2008

ஞாயமா?

விதியாம்...வேளையாம்
என்ன ஐயா வேடிக்கை!
விண்ணர்களின் வன்முறையால்
விளையாடிய வாழ்க்கை
விதியின் விளையட்டா?
வேளையின் பொழுதுபோக்கா?

குடிசை மேல் குண்டு மழை
தஞ்சமென்று குடிபுகுந்த
கோயில் வீதியெங்கும்
கண்ணி வெடி
படிக்கும் பள்ளியை
அழிக்கும் புக்காரா.
பறக்குது இலவசமாய்
ஈழத்தில்
பல உயிர்கள்.

பிய்க்கும் பசிக்கொடுமை
கொய்யாபழம் பறிக்க என்று
கையை நீட்டிய
பாலகன் கால் பறக்கிறது
கண்ணி வெடியில்.

பாலுக்காய்
பச்சைக் குழந்தையொன்று
கதறித் துடிக்க
பக்கத்துப் படலை தாண்டி
வேண்டப்போன தந்தையோ
பாடையிலே பயணமானார்.

வருங்கால எம் பூ ஒன்று
பள்ளிக்குப் போகையிலே
பாதை நடுவினிலே
அரக்கர்களின் கரம் பட்டு
பட்டுபோகிறது புதைகுழிக்குள்
ஆனால்....
காணாமல் போகிறவர் பட்டியலில்.

வயது போகவில்லை
வருத்தம் வாதையில்லை
மலர்ந்தும் மலராத
மொட்டுக்கள் எல்லாம்
இரத்தக் காட்டேரிகளால்
கொத்திக் குதறும் அவலம்
விதியாம்...
இது வேளையாம்.

காலநேரம் இல்லாமல்
அரைகுறையில் பறித்துப்போக
அப்படியென்ன
ஈழத்தில்...
தமிழன் உயிர் மட்டும்
காலனுக்குக்
காலின் தூசோ!

பழிமட்டும்
விதிக்கும் மேலும்
வேளையின் மேலுமோ!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

  1. காலநேரம் இல்லாமல்
    அரைகுறையில் பறித்துப்போக
    அப்படியென்ன
    ஈழத்தில்...
    தமிழன் உயிர் மட்டும்
    காலனுக்குக்
    காலின் தூசோ!..

    நல்ல கவிதை ...ஹேமா ...

    மனதை மிக அதிகம் பாதித்தது இந்த கேள்வி ...

    ReplyDelete
  2. ஞாயமில்லை...
    ஹேமா காத்திருப்போம் நன்னாளுக்காய்...கவிதைக்கேள்விகள், வீரர்தம் வேள்விகள் வென்றெடுக்கும் நாளுக்காய்......

    ReplyDelete
  3. //அப்படியென்ன
    ஈழத்தில்...
    தமிழன் உயிர் மட்டும்
    காலனுக்குக்
    காலின் தூசோ!//

    விஷ்ணு,பதில் அற்ற கேள்வி இது எம் ஈழத்தில்.

    ReplyDelete
  4. தமிழ்பறவை அண்ணா,நிச்சயம் வேள்விகள் என்றும் வீணாய்போனதில்லை.உங்களோடு நாங்களும் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. வாங்க முனியப்பன்.
    கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. மனதை பாதித்தது...
    நல்ல கவிதை ...

    ReplyDelete